இப்படியுமா இருப்பாங்க...
இந்த வண்டிக்கு ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ என்ஜின் ஆயில் மாத்தறதா
நெனச்சாலே எரிச்சலா வரும். ஐயாயிரம் கிலோ மீட்டர் ஓடினதுக்கு அப்புறம்
என்ஜின் ஆயிலும், பத்தாயிரம் கிலோ மீட்டர் ஓடினதுக்கு அப்புறம் என்ஜின்
ஆயிலோட சேர்த்து ஆயில் பில்ட்டரும் மாத்தணுமே.
என்ன எரிச்சல்ன்னா
அங்கபோய் காத்திருக்கணும், அதுதான் கடுப்பா இருக்கும். நமக்கு முன்னாடி ஒரு
வண்டி இருந்தா கொறஞ்ச பட்சம் 15 நிமிஷம். மூணு வண்டி இருந்தா முக்கா
மணிநேரம்.
ஒரு நாள் இப்படித்தான், என்ஜின் ஆயில் மாத்தப் போனேன்.
அபு தாபி துபாய் ரோட்டுல ஷம்ஹா பெட்ரோல் ஸ்டேஷன்தான் அப்ப இருந்த
வீட்டுக்குப் பக்கம். பக்கம்ன்னா, ஒரு 10 கிலோ மீட்டர் இருக்கும்.
இந்த ஆயில் மாத்தற ஆளுங்க பொதுவா சோம்பேறியா இருப்பாங்க. வண்டிய செக்
பண்ணீட்டு. 'இப்ப ஏன் ஆயில் மாத்தறீங்க. தாராளமா இன்னும் ஆயிரம் கிலோ
மீட்டர் ஓட்டலாம்.அப்புறம் உங்க இஷ்டம் ' என்பார்கள். ஒரு மணிநேரம்
காத்திருந்து அதை நம்பி போகமுடியுமா, உடனே ஒரு பொய் சொல்வேன். 'இது கம்பெனி
வண்டிங்க. மாத்தலன்னா கம்பெனில பிரச்சனை பண்ணுவாங்க' என்பேன்.
அன்று, அங்கிருந்தவர் ஒரு மலையாளி. பொதுவாக மலையாளிகள் இல்லன்னா
பிலிப்பினோக்கள்தான் இந்த வேலையில் இருப்பார்கள். சில இடங்களில் சூடன்
போன்ற நாட்டைச் சேர்ந்த அரபிகளும் இருப்பார்கள்.
'பைவ் தௌசண்ட்டா, டென் தௌசண்ட்டா. பில்ட்டர் மாத்தணுமா?' என்றார் அந்த மலையாளி.
பொதுவா, நான் பைவ் தௌசண்ட் ஆயில் தான் போடுவேன். வேற வழியில்லனா மட்டுமே டென் தௌசண்ட் ஆயில் போடுவேன்.
'பைவ் தௌசண்ட். பில்ட்டரும் மாத்திருங்க'
எல்லாம் முடிந்த பிறகு, 'கேஷ்ஷா, இல்லனா கார்டா' என்றார்.
கார்டு ஸ்வைப் பண்ணுவதற்கு அருகில் உள்ள ஒயாசிஸ் சூப்பர் மார்கெட் போணும்.
அதனால இவங்க ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கேஷே வாங்கிருவாங்க. அட்நாக்ல
பெட்ரோல் போட்டா, இல்லன்னா ஆயில் மாத்துனா ஒரு கிரெடிட் கார்ட்ல 1.5% கேஷ்
பேக் கிடைக்கும்.
அதனால, 'கார்டு' என்றேன்
பில்
வாங்கிக்கொண்டு போகும்போது வழக்கமா கொடுக்கற 3 திர்ஹாம் டிப்ஸ் கொடுத்தேன்.
அவர் வாங்காமல் மறுத்துவிட்டார். சில மலையாளிகள் இப்படித்தான்,
இந்தியர்களிடம் மட்டும் தன்மானம் பார்ப்பார்கள். அரபிகள்,
வெள்ளைக்காரர்களிடம் பல்ல இளிச்சுக்கிட்டே குடுக்கற காச வாங்கிக்குவாங்க.
நானும் சரி போகட்டும் என்று போய்விட்டேன்.
அடுத்தமுறையும் அதே
பெட்ரோல் ஸ்டேஷனுக்குப் போனேன். அதே மலையாளிதான் இருந்தார். எனக்கு முன்பு
ஒரே ஒரு வண்டிதான். அதுவும் சீக்கிரம் முடிந்துவிட்டது. அந்த அரபி பணம்
குடுக்கும்போது அந்த மலையாளியைப் பார்த்தேன். டிப்ஸ் வாங்குகிறாரா என்று.
அவர் வாங்கவில்லை. அவரிடமும் மறுத்துவிட்டார்.
அவர் மீது ஒரு தனிமரியாதை வந்துவிட்டது. அதற்குப் பிறகு அங்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தேன்
ஒருமுறை, ஒரு அரபியின் (இஜிப்ஷியன்) வண்டிக்கு ஆயில் மாற்றிக்
கொண்டிருந்தார். அப்போது, ஒரு லோக்கல் அரபி ஏதோ இவரிடம் கேட்க இவர் பதில்
சொல்லிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த, இஜிப்ஷியன் கோபமாகி வண்டியை
எடுத்துக் கொண்டு போக முயற்சித்தார். ஏற்கனவே அவர் என்ஜின் ஆயிலை ட்ரெயின்
பண்ண ஓபன் செய்திருந்ததால், ஆயில் எல்லா இடத்திலும் சிந்தியது.
அதைப் பார்த்த மலையாளி ஓடிவந்து 'ஏன் இப்படி பண்ணினீர்கள்' என்றார்.
'லோக்கல் யாராவது வந்தா, செய்யற வேலையை விட்டுட்டு அவங்க பின்னாடியே ஓடுறியே'
'உங்க வண்டில ஆயில் ட்ரெயின் ஆயிட்டு இருந்துச்சு. ட்ரெயின் ஆகி முடியற
வரைக்கும் எனக்கு வேலை இல்லை. அதான் அவர் கூப்பிட்டப்ப போனேன்'
இப்படியாக ரெண்டு பேரும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள்
விவாதம் முடிவடைந்த பிறகு, நான் அந்த இஜிப்ஷியனுடன் போய் தனியாக பேசினேன்.
'நீங்க நெனைக்கற மாதிரி இல்லை. அவர் ரொம்ப நேர்மையானவர். அவர் வேலையை சரியாக செய்வார். டிப்ஸ் கூட வாங்கமாட்டார்.'
'லோக்கல்ஸ் மட்டும் தான் காசு குடுக்கற மாதிரியும், நமக்கு இலவசமா சேவை செய்யற மாதிரியும் தான் இவங்க நடந்துக்கறாங்க'
'நீங்க சொல்றது சரி. நானும் அந்த மாதிரி ஆட்களைப் பாத்துருக்கேன்' ஆனா இவர் அப்படிப்பட்டவர் இல்லை'
ஒருவழியாக அவரும் சமாதானம் அடைந்தார்.
ஒருமுறை கோடைகாலத்தில் வியர்த்து அவர் உடல் முழுவதும் நனைந்திருந்தது. அதைப் பார்த்தவுடன், "உங்க ட்யூட்டி டைம் எப்படிங்க என்றேன்'
'2 மணில இருந்து 11 மணி வரை'
'இடைல ரெஸ்ட் இல்லீங்களா'
'நீங்கதான் பாக்குறீங்களே. ரெஸ்ட் எல்லாம் இருக்காது'
'ரூம்ல இருந்து 12 மணிக்கு கெளம்பிருவேன்'
'ஐயோ, அப்ப பசிக்காதுங்களா' என்றேன்.
அவர் பதில் சொல்லாமல் சிரித்தார்.
ஆயில் சேஞ்ச் பண்ணி முடித்த பிறகு அவருக்கு ஏதாவது சாப்பிடுவதற்கு வங்கிக்
கொண்டுவந்து கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன். அவர் வாங்கமாட்டார் என்று
தெரியும், இருந்தாலும் ட்ரை பண்ணலாம் என்று நினைத்தேன்.
அருகிலிருந்த போன்ஃபுட் ரெஸ்டாரன்ட்டில் ஒரு மசாலா தோசை வாங்கி வந்து அவரிடம் கொடுத்தேன். அவர் வாங்க மறுத்துவிட்டார்.
'இது எதுக்கு வாங்கிட்டு வந்தீங்க. கொஞ்ச நேரத்துல ரூம்ல போய்
சாப்பிட்டுக்குவேன். ஏற்கனவே செஞ்சு வெச்சிட்டுத்தான் வந்திருக்கேன். அது
வேஸ்ட் ஆயிரும்' என்று சாக்கு சொல்லி மறுத்தார்.
'உங்க தம்பி வாங்கித் தர்றதா நெனச்சு வாங்கிக்கோங்க, ப்ளீஸ்' என்றேன்.
அதை சொன்னபோது என்னை அறியாமல் கண்கள் கலங்கிவிட்டன. கண்கள் கலங்கியதைப்
பார்த்த அவர், ஒன்றும் பேசமால் தோசையை வாங்கிக் கொண்டு போய்விட்டார்.