Saturday, September 20, 2014

பணம்

பணம் 

கத்தாரில் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் சர்வே ஹெல்ப்பராக வேலை செய்து கொண்டிருந்தார் சிதம்பரம். 

எப்போதும் கலகலப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்யும் சிதம்பரம் அன்று சற்றே சோகமாக இருப்பதைப் பார்த்து, அவரது சர்வேயர் அக்தர், அவரிடம் 'க்யா ஹுவா சிதம்பரம் பாய், ஆஜ் ஆப் பில்குல் பரிஷான் லக்ரஹேன் //என்ன ஆச்சு சிதம்பரம், இன்னைக்கு இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்//' என்று கேட்டார் 

'நஹி ஸாப்'

'ஜூட் மத் போலியே, குச் தோ ஹே. பத்தாயியே க்யா ஹுவா //பொய் சொல்லாதீங்க, என்னமோ நடந்திருக்கு, சொல்லுங்க என்ன ஆச்சுன்னு//' 

'மேரா பேட்டி ஸ்கூல் ஃபீஸ் ஃபைவ் தவுசண்ட் ருப்பியா, மேரா பீவிஸே ஏக் தீஃப் பகட்லியா' 

'ஆப்கி பீவிஸே, கிஸ்ஸி பிக்பாக்கெட்னே பைசா லூட்லியா? //உங்க மனைவியிடம் இருந்து பிக் பாக்கெட் ஒருத்தன் பணம் திருடிவிட்டானா?//' 
'ஆன் (ஹான்) ஸாப்'

'கர் பேஜ்னேக்கேலியே அபி ஆப்கேபாஸ் பைசா ஹே க்யா //வீட்டிற்கு பணம் அனுப்புவதற்கு உங்களிடம் இப்போது பணம் இருக்கிறதா//'

'நஹி ஸாப். ஆஜ் ஹெட் ஆஃபீஸ் ஜாவுங்க. சேலரி அட்வான்ஸ் ஃபைவ் ஹன்ரெட் ரியால் லேலுங்க//இல்ல சார், இன்று ஹெட் ஆஃபிஸ் சென்று ஐநூறு ரியால் அட்வான்ஸ் வாங்கப் போகிறேன்//'

சிதம்பரத்துக்கு சம்பளமே வெறும் ஆயிரம் ரியால்தான். ஓவர்டைம் சேர்த்து ஆயிரத்து நானுறு ரியால் வரைக் கிடைக்கும்.

'முஜ்ஸே லேலீஜியே, சேலரி மில்னேக்கே பாத் வாபஸ் கர்லீஜியே /என்னிடம் வாங்கிக் கொள்ளுங்கள், சம்பளம் கிடைத்த பிறகு திருப்பித் தாருங்கள்//'

பொதுவாக தம்மால் யாருக்கும் சிரமம் ஏற்படக்கூடாது என்று நினைக்கும் சிதம்பரம் அதை மறுத்துவிட்டு, சீக்கிரம் செல்வதற்கு மட்டும் அனுமதி கேட்டார்.

அன்று வியாழக்கிழமை, ஹெட் ஆஃ பிஸ் இரண்டு மணிவரைதான் இருக்கும் என்பதால் அக்தர் வேறொரு எஞ்சினியரிடம் பேசி அவருடன் சிதம்பரம் தோஹா செல்வதற்கு ஏற்பாடு செய்தார். இவர்கள் வேலை செய்வதோ, தோஹாவிலிருந்து சுமார் எழுபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஸ் லஃபான் சிட்டியில். 

சிதம்பரம் 12 மணிக்கெல்லாம் அந்த எஞ்சினியருடன் தோஹா கிளம்பிவிட்டார். அவர், இவரை க்யூடெல் சிக்னல் அருகே இறக்கிவிட்டு சென்றார். அங்கிருந்து ஸாஃபிடெல் வழியாக நடந்தார் சிதம்பரம். 

ஸாஃபிடெல் தோஹா பேலஸ் ஹோட்டல், தற்போது மெர்க்யூர் க்ராண்ட் ஹோட்டல் என்று பெயர் மாற்றப்பட்டிருந்தாலும், அந்த இடம் ஸாஃபிடெல் என்றே இன்றும் பெரும்பாலானோரால் அழைக்கபடுகிறது. 

ஃபுட்பாத்தில் நடந்து செல்லும்போது, ஒரு ஸ்ட்ரீட் லைட் பெடஸ்டல் அருகே கிடந்த பெண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸ் அவர் கண்ணில் பட்டது. அதை எடுத்துத் திறந்து பார்த்தால் முழுவதும் ஐநூறு ரியால்கள் நோட்டுக்கள். 

அதைப் பார்த்தவுடன் சிதம்பரத்துக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. போலிஸிடம் கொண்டுபோய் கொடுப்பதற்கு தற்போது நேரமில்லை, போலிஸ் ஸ்டேஷன் சென்று பழக்கமில்லாததால் பயம் வேறு. தாமதம் ஆனால், பர்ஸை தொலைத்தவரின் மனநிலை எப்படியிருக்கும் என்று எண்ணி, பர்ஸில் அவரது அட்ரஸ் இருக்கிறதா என்று பார்த்தார். அந்தப் பெண்ணின் போட்டோவை மறைத்திருந்த இதழின் பின்புறத்தில் அவரது பிசினெஸ் கார்ட் இருப்பதைப் பார்த்தார். 

'அவருக்கு போன் செய்து, மேடம், யூ பர்ஸ், ஐ கெட். ஸாஃபிடெல். ப்ளீஸ் யூ கம்' என்றார். 
அந்தப் பெண் அழுதுகொண்டே என்னென்னமோ ஆங்கிலத்தில் சொன்னார். தேங்க்ஸ் என்பதைத் தவிர வேறொன்றும் சிதம்பரத்துக்குப் புரியவில்லை. "ப்ளீஸ் யூ கம் குயிக்' என்று மட்டும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார் சிதம்பரம் . 

சிறுது நேரத்தில் அந்தப் பெண் அங்கு வந்தார். அவருடைய ஃபோட்டோ பர்ஸில் இருந்ததால் எதிரே இருந்த சாலையோரப் பார்க்கிங்கில் அவர் காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தபோதே, எளிதில் அடையாளம் கண்டு அவரிடம் சென்றார்.

'மேடம், ஐ கால் யூ. பர்ஸ்' என்று சொல்லி அவரிடம் பர்ஸைக் கொடுத்தார். 
கண்ணீர்மல்க சிதம்பரத்தை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டார் அந்தப் பெண். 
'தேங்க் யூ சோ மச்' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசினார். 

'வேகமாக என் மகன்களுடன் ரோட்டைக் கடந்த போது, திறந்திருந்த பேகில் இருந்து பர்ஸ் கீழே விழுந்துவிட்டது. நான் உடனே அதைப் பார்க்கவில்லை. வீட்டிற்கு சென்ற பிறகுதான் பார்த்தேன். தேடித் பார்த்து கிடைக்காததால் போலிஸில் கம்ப்ளைன்ட் செய்துவிட்டு வரும்போதுதான் நீங்கள் என்னை அழைத்தீர்கள். எனக்கும் குழந்தைகளுக்கும் டிக்கெட் எடுப்பதற்காகவும், எனது கணவரின் மருத்துவ செலவிற்காகவும் இதில் முப்பதாயிரம் ரியால் வைத்திருந்தேன். எனது கணவர் இங்குதான் எஞ்சினியராக வேலை செய்துகொண்டிருந்தார். கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் ருமானியா சென்றுவிட்டார். இரண்டு நாட்களில் நாங்களும் புக்கரெஸ்ட் செல்கிறோம்' என்று கண்ணீருடன் நிறுத்தாமல் ஆங்கிலத்தில் சொன்னார். 

அவர் சொன்னது முழுவதும் புரியவில்லை என்றாலும், ஓரளவிற்கு புரிந்துகொண்ட சிதம்பரம், 'நோ ப்ராப்ளம் மேடம். காட் ஹெல்ப் யூ' என்றார்.

சிதம்பரத்தின் பெயரைக் கேட்டுவிட்டு விலாசத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு தன்னுடைய பெயர் அனா ஜேனபெலிஸ் என்று சொல்லி அவருடைய பிசினெஸ் கார்டைக் கொடுத்தார். 

'ப்ளீஸ் செக் மணி' என்றார் சிதம்பரம் 

'ஐ டிரஸ்ட் யூ வெரி மச். நோ நீட் டு கவுன்ட் இட்'

'நோ மேடம், அதர் பீப்ல் டேக். ஐ டோன்ட் நோ. ப்ளீஸ் செக் //வேறு யாராவது எடுத்திருந்தாலோ//'
மனமின்றி அதை எண்ணிப் பார்த்துவிட்டு சரியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு சிதம்பரத்திற்கு ஐநூறு ரியால் கொடுத்தார்.

கைகளை பின்னால் கொண்டுபோய் மறைத்துக் கொண்டு வாங்க மறுத்தார் சிதம்பரம். 
அவரோ விடாமல் இவரது பாக்கெட்டில் வைக்க முயன்றார். சிதம்பரம் இடது கையால் பாக்கெட்டைப் பிடித்துக் கொண்டு, "நோ மேடம். திஸ் யூ மணி. யூ ஹஸ்பண்ட் ஹாஸ்ப்பிட்டல். ப்ளீஸ் ஐ நோ வான்ட் மேடம்' என்று சொல்லி வாங்க மறுத்தார். 

அவர் மீண்டும் மீண்டும் முயன்றும், சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். 
அதற்குள் மணி ஒன்றரை ஆகிவிட்டது. மணியைப் பார்த்துவிட்டு, "ஐ லேட். ஐ கோ ஹெட் ஆஃபிஸ்' என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தார் சிதம்பரம்.

அவர் செல்வதை வைத்தகண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார் அந்த ருமானியப் பெண். 

பிகு: இதுபோன்ற சம்பவங்கள் இங்கு மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இது, சமீபத்தில் அபு தாபியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டது