அப்பாவின் முதலாமாண்டு நினைவு நாளன்று, நூறு பேராவது வருவார்கள் என்று அம்மா சொன்னதனால், ஒரு உணவகத்தில் நூறு சாப்பாடு(கள்) ஆர்டர் செய்திருந்தோம்.
அம்மா சொன்னது போலவே நூறு பேர் வந்திருந்தாலும், பாதிக்கு மேல் உணவு மீதமாகிவிட்டது. காரணம், சிலர் சாப்பிடவில்லை; இரண்டு சாப்பாட்டை மூன்று பேர் சாப்பிடலாம் என்பது மற்றொரு காரணம் . எனினும், சாப்பாடு குறைந்துவிடக் கூடாது என்பதற்காக அவ்வளவு சொல்லவேண்டியதாகிவிட்டது.
உணவு மீதமானதைப் பார்த்தவுடன் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. பெரும்பாலும் நான் சாப்பாட்டை வீண் செய்யமாட்டேன். இவ்வளவு சாப்பாட்டை என்ன செய்யப் போகிறோம் என்று குழம்பி இருந்தபோது, அத்தி (அப்பாவின் தங்கை; அத்தி என்றே சிறு வயதிலிருந்து அழைத்துப் பழகிவிட்டோம்), 'ஆழியார்ல ஒரு அநாதை ஆஷ்ரமம் இருக்கு, அங்க கொண்டு போய் கொடுத்திரலாம். வீட்டு பக்கத்துல ஒரு அண்ணன் இருக்கார். அவர் அங்க அடிக்கடி போவார், அவருட்ட கேட்டுப் பாக்கலாம்' என்று சொல்லிவிட்டு அவருக்கு ஃபோன் செய்தார்.
அத்தியுடன், நானும் மனைவியும் கிளம்பினோம். ஒரு சிறிய அண்டாவில் சாதமும், தூக்குப் பாத்திரங்களில் சாம்பார், புளிக்குழம்பு, ரசம் ஆகியவற்றையும், பிளாஸ்டிக் கவர்களில் அப்பளங்களையும் வடைகளையும் கொண்டு சென்றோம்.
ஆழியாருக்கு சற்று முன்பாக, வலது கோண வளைவு தாண்டியவுடன், வலதுபுறத்தில் வரும் பிரிவு சாலையில் சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு வண்டி மட்டுமே செல்லும் அளவிற்கு உள்ள கான்க்ரீட் சாலை வந்தது. கான்க்ரீட் சாலையின் முடிவில்தான் அந்த ஆசிரமம் இருந்தது. எங்கள் ஊரில் அனாதாலாயங்களை ஆசிரமம் என்று அழைப்பது வழக்கம்
அங்கு வண்டியைத் திருப்ப முடியாது, திரும்ப போகும்பொழுது ரிவேர்சில் தான் போகவேண்டும். வண்டியை அப்படியே நிறுத்திவிட்டு, ஆசிரமத்திற்கு சென்றோம். நான்கு வயது சிறுவனும், ஆறு வயது சிறுமியும் சேர்ந்து முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருந்ததுதான் நாங்கள் அங்கு கண்ட முதல் காட்சி. போதுமான ஊழியர்கள் இல்லாததால் குழந்தைகள் இவ்வாறு சுழற்சி முறையில் அங்கு இருந்த ஒரே ஊழியருக்கு (சற்றே வயதான அம்மா- அவர் ஊழியர் இல்லை, அவரும் அவர்களில் ஒருவர் என்றே தம்மைக் குறிப்பிடுகிறார்) உதவி செய்கிறார்கள் எனபதை பின்னர் புரிந்துகொள்ள முடிந்தது. நாங்கள் சென்றிருந்த வேளையில் அதனை நடத்தும் திரு. செல்வகுமார் அங்கே இல்லை.
குழந்தைகள் ஒவ்வொருவராக வரவேற்பறைக்கு வந்து, "குட் ஈவ்னிங் சார், குட் ஈவ்னிங் மேடம்' என்று எங்களிடம் சொல்லிவிட்டுப் போனார்கள். நான்கு நாற்காலிகள் மட்டுமே இருந்த ஒரு சிறிய வரவேற்பறை; இயேசுவின் அழகான ஒரு படமும் இருந்தது. வரவேற்பு அறையோடு சேர்ந்தவாறு ஒரு சிறிய சமையலறையும் இருந்தது.
சமயலறையில் இருந்த அம்மாவிடம் விஷயத்தை சொன்னதும், 'தாராளமா கொண்டு வாங்க சார்' என்றார் அவர்.
வண்டியிலிருந்த உணவுகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்தோம். சில குழந்தைகள் அப்போதுதான் பள்ளிக்கூடம் முடிந்து வந்தார்கள். மொத்தம் பதினைந்து இருபது குழந்தைகள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். சுமார் 16 x 16 அடி அளவுள்ள அறையில்தான் இவர்களது பெட்டி படுக்கைகளை வைத்திருந்தனர்; உறங்குவதும் அங்குதான்.
எங்களிடம் வந்து பேசிய குழந்தைகளிடம். 'சார் என்று கூப்பிட வேண்டாம், அங்கிள்ன்னு கூப்பிடுங்க' என்றேன். நம்மூராச்சே... உடனே, 'அண்ணா' என்றார்கள்.
குழந்தைகள் அழகாக பேசினார்கள். வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டார்கள். ஒரு குழந்தை, 'உங்க வீடு எங்க இருக்கு அண்ணா' என்று கேட்டார்.
'வீடு ரங்கசமுத்திரம், இருக்கறது அபு தாபில'
'அபு தாபி எங்க இருக்குண்ணா? திருச்சி பக்கத்துலயா'
நான் இல்லம்மா என்று சொல்வதற்கு முன்னர் வேறொரு குழந்தை, 'அது வெளிநாடு. சும்மா இரு' என்றார்.
'அங்கே எப்படிப் போவீர்கள்?' 'என்ன மொழி பேசுவார்கள்?' இப்படி பல கேள்விகள்.
நாங்கள் அவர்களிடம் பேரும், என்ன படிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. அவர்கள் குடும்பங்களைப் பற்றி கேட்டு எங்களது மனங்களை வருத்திக்கொள்ள தைரியமில்லை.
முப்பது வயதில் அப்பாவின் பிரிவை தாங்கமுடியாமல் கதறி அழுத என்னால், பெற்றோர்களை இழந்தபோது அந்த பிஞ்சு உள்ளங்கள் எப்படி கதறியிருக்கும் என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை.
அவர்களில் ஒரு சிறுமி மட்டும் எங்களை கண்டுகொள்ளாமல் அவரது வேலைகளை செய்துகொண்டிருந்தார். பத்து வயதிருக்கும். நானாக சென்று பேசியும் சரியாக பேசவில்லை. ஏன் அந்தக் குழந்தை அப்படி நடந்து கொண்டார் என்று புரியவில்லை. வைராக்கியமாக இருக்குமோ?
வெளியே ஒரு தொட்டியின் மீது அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிடும்போது அருகில் இருந்த பூனையை திட்டிக் கொண்டே அதற்கும் சாப்பாடு கொடுத்தார். நம்மைப் புறக்கணிப்பவர்களை பேச வைப்பதில்தான் நாம் அதிக ஆர்வம் செலுத்துவோம் என்பதனால் நானும் அந்த சிறுமியை பேசவைக்க முயற்சி செய்து கொண்டே இருந்தேன். ஆனால் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.
சிறிது நேரத்தில் நாங்கள் கிளம்பினோம். எனது பர்ஸில் ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. பொதுவாக நான் மற்றவர்களுக்கு பணம் குடுப்பதை விரும்பாத என் மனைவி நான் பணம் எடுப்பதைப் பார்த்து அவராகவே, 'இவங்கள மாதிரி ஆளுங்களுக்குக் குடுங்க. நான் வேண்டாம்னு சொல்லல. ஆயிரம் ரூபாய் மட்டும்தான் இருக்கா' என்று கேட்டார். அவரிடமும் வேறு பணம் இல்லை. அத்தியும் பர்ஸ் கொண்டுவரவில்லை.
பணத்தை வாங்கிக் கொண்ட அந்த அம்மா, எல்லா விவரங்களையும் ஒரு ரெஜிஸ்டரில் எழுதச் சொன்னார். 'ரெசிப்ட் சார் வந்ததற்குப் பிறகு அனுப்பித் தருவார்' என்றார்.
பாத்திரங்களை வண்டியில் கொண்டு போய் வைக்கிறோம் என்று சொன்ன குழந்தைகளை நாங்கள் விடவில்லை.
அனைத்துக் குழந்தைகளும் வண்டியின் அருகே வந்திருந்தாலும், எங்களைப் புறக்கணித்த அந்த சிறுமி மட்டும் வரவில்லை.
'பாப்பாவைக் கேட்டதா சொல்லுங்க, அம்மாவைக் கேட்டதா சொல்லுங்க' என்று ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த சிறுமியும் மெதுவாக நடந்து வருவதைப் பார்த்தேன். அங்கு வந்த பிறகும் ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தார்.
அனைவரிடமும் விடைவாங்கிக்கொண்டு, மெதுவாக வண்டியை நகர்த்தியபோது, அந்த சிறுமி என் அருகில் வந்து, 'அடுத்து எப்ப வருவீங்க?' என்று கேட்டார்.
கண்ணீரைத் தவிர வேறு பதில் சொல்லமுடியவில்லை.
***********************************
பின் குறிப்பு: இது நடந்த ஆண்டு 2011. இப்பொழுது அந்த ஆசிரமம் அந்த இடத்தில் இல்லை.
No comments:
Post a Comment