Friday, March 20, 2015

கனவுகளுடன்....


அம்மா, அப்பா ஆசைப்படுவதுபோல ஒரு வேலைக்குப் போனால், நான் படித்த டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பிற்கு குறைந்தது பதினைந்தாயிரம் ரூபாயாவது சம்பளம் கிடைக்கும்.
இத்தனை வருடம் கஷ்டப்பட்டது இதற்குத்தானா? வாரத்தில் ஒருநாள், இல்லை ஒருநேரம் நல்ல சாப்பாடு கிடைத்தாலே பெரிய விஷயம். எங்களது டைரக்டருக்கு மீண்டும் ஒருபடம் கிடைத்தால், நிம்மதியாக மூன்று நேரமும் செட்டில் சாப்பிடலாம். செலவிற்கு பணமும் கிடைக்கும். பாவம் அவரது முதல் படம் தோல்வியடைந்ததால் அவருடைய நிலைமையே மிகவும் பரிதாபமாகிவிட்டது.
எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வீட்டில் ஒரு ரூபாய் கூட கேட்டதில்லை, ஊருக்குப் போகும்போதெல்லாம், என்னால் முடிந்த எதையாவது கொடுத்துவிட்டுத்தான் வருகிறேன். இரண்டு வருடம் ஆகின்றது வீட்டிற்கு சென்று.
இந்த நிலையில்தான் இன்று வீட்டிலிருந்து ஃபோன், அவர்கள் என்னை தலைமுழுகிவிட்டார்களாம். ஃபோன் பண்ணும்போதெல்லாம், 'ஏதாவது வேலைக்குப் போ சாமி' என்று சொல்லி அழும் அம்மா இன்று பேசவில்லை. 'இனி ஒனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இந்த வீட்டுல இருந்து யாரும் உன்கூட இனி பேசமாட்டாங்க. நாங்க செத்தாலும் நீ வரக்கூடாது' என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் அப்பா.
வாராவாரம் ஃபோன் செய்து குறைந்தது அரைமணிநேரமாவது திட்டுவார் அப்பா. சென்றமுறை ஃபோன் செய்திருந்தபோது, அடுத்தவாரம் ஒரு முடிவு சொல்லவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். நான் என் முடிவை மாற்றிக்கொள்ளாததால், அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். இரண்டுமுறை ஃபோன் செய்து அவர்கள் எடுக்காததால் இனி அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று விட்டுவிட்டேன்.
கவலைகளை மறந்து சற்றுநேரம் நிம்மதியாக இருப்பதற்கு, மாலை நேரங்களில் கோவிலிற்கு சென்று மண்டபத்தில் படுத்து ஓய்வெடுப்பது வழக்கம். கடவுள் நம்பிக்கையெல்லாம் என்றோ இல்லாமல் போய்விட்டது. என் உழைப்பையும், திறமையும் தவிர வேறெதையும் நம்புவதில்லை.
ஒரு குழந்தைக்கு காது குத்துவதால் இன்று அந்த மண்டபத்தில் படுக்க முடியவில்லை. அவர்கள்மேல் தவறு இல்லை, பொதுவாக மாலை நேரங்களில் வரும் நான் இன்று காலையிலேயே வந்துவிட்டேன்.
கோவில் பின்புறமாக இருந்த அரசமரத்தடியில் படுத்துவிட்டேன். படபடத்துக் கொண்டிருந்தது மனது. சிறிது நேரத்தில் அப்படியே உறங்கிவிட்டேன். எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை, யாரோ 'வருண்' என்று அழைத்தபோதுதான் உறக்கம் கலைந்தது. அப்பாவின் குரல் போன்றிருந்தது. எழுந்தபோது நல்ல இருட்டு, யாருமே அங்கு இல்லை. மணி பார்ப்பதற்கு கடிகாரமும் இல்லை, மொபைலில் சார்ஜும் இல்லை.
கோவில் கதவை அடைத்துவிட்டதால் வெளியே செல்லமுடியாது. சத்தம் போட்டால் யாராவது உதவுவார்கள் என்றாலும், அதற்கு மனம் வரவில்லை. மண்டபத்தில் இருந்த தூணில் சாய்ந்தவாறே அமர்ந்து காலையில் அப்பா சொன்ன வார்த்தைகளை மீண்டும், மீண்டும் நினைத்துப் பார்த்தேன். அவர்கள் என்னை தலைமுழுகி விட்டாலும், என்னால் அவர்களை மறக்கமுடியாது. எவ்வளவு பெரிய ஆளானாலும், அவர்கள்தான் எனக்கு முக்கியம்.
'வருண்' மீண்டும் அப்பாவின் குரல்.
'யாரு, யாரது' என்றேன் எழுந்து நின்று சுற்றிமுற்றி பார்த்தவாறே
'நான் யார் என்பது இருக்கட்டும், உனது பிரச்சனை என்ன?' என்று குரல் மட்டும் வந்தது.
'யாருங்க நீங்க, உங்களுக்கு எப்படி என் பேர் தெரியும்?'
'நான் யார் என்பது முக்கியம் இல்லை'
'சரி நீங்க முதல்ல என் முன்னாடி வாங்க'. அப்புறம் பேசுவோம்' என்றேன் சற்றே பயந்தவாறே.
திடீரென்று என் பின்னால் இருந்து யாரோ என் தோளில் கைவைக்க, உடல் நடுங்கிய வண்ணம் திரும்பினேன்.
ஒரு வயதான பெரியவர், என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
'யார் நீங்க. கடவுளா?'
பதில் சொல்லாமல் சிரித்தார்.
'எனக்குத்தான் உங்க மேல நம்பிக்கை இல்லையே. அப்பறம் ஏன்? என்னப் பாத்தா உங்களுக்கு பாவமா இருக்கா?'
மீண்டும் சிரித்தார்.
'நான் என்ன தப்பு செஞ்சேன்?, என்னோட லட்சியம் ஒரு டைரக்டர் ஆகணும், நல்ல படங்கள் எடுக்கணும். அதுக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்படறேன். யாருக்கும் நான் தொந்தரவா இல்ல''
'எட்டாக் கனிக்குத்தான் ஆசைப் படவேண்டுமா?'
'எது எட்டாக் கனி. சச்சின் அபப்டி நெனச்சிருந்தா, இன்னைக்கு அவரால கிரிக்கெட்ல இவ்வளவு சாதன செஞ்சிருக்கமுடியுமா?. ஷங்கரும் படிச்சது என்ன மாதிரி டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினியரிங்தான். அவர் இத எட்டாக் கனியா நெனச்சிருந்தா, இன்னைக்கு இவ்வளவு பெரிய டைரக்டர் ஆகிருக்க முடியுமா?'
'ஜெயித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், ஆனால் தோற்றவர்கள் லட்சக் கணக்கில் என்பதை உணரவில்லையா?'
''என்னோட திறம மேலயும் உழைப்பு மேலயும் நம்பிக்கை இருக்கு'
'இந்தத் துறையில் அதுமட்டும் போதுமா?'
'அது உண்மதான். இன்னைக்கு காசு இருக்கறவன் எல்லாம் டைரக்டர் ஆயிர்றான். டிஸ்ட்ரிப்யூட்டர்களும், ப்ரொடுயூசர்களும் இவங்க எடுக்கற குப்ப படங்கள நம்பறாங்க. என்ன மாதிரி திறம உள்ளவங்க இப்படியே கஷ்டப்பட்டுட்டு இருக்கவேண்டியதுதான். அதனாலதான் தமிழ்படங்களோட தரமும் இப்படி இருக்கு'
'சீர்குலைந்துள்ள தமிழ் சினிமாவை சரிசெய்ய, உன்னிடம் என்ன திட்டம் உள்ளது?'
'கிண்டல் பண்றீங்களா'
'உனக்கு நல்ல படமாக தெரிவது, எப்படி ஒரு சிறந்த படம் என்று கூறுகிறாய்?'
'புரியல'
'உனக்கு ஒரு படம் குப்பையாக தெரிகிறது. அதே சமயத்தில் அந்தப் படம் வேறு ஒருவருக்கு சிறந்ததாக தோன்றியதால்தான் அந்தப் படத்தை எடுத்தார். அதேபோல, உனக்கு சிறந்ததாக தெரியும் படம் வேறு சிலருக்கு குப்பைப் படமாக தெரியலாம் இல்லையா?'
'என்ன சொல்ல வர்றீங்க'
'சச்சின் சாதனை செய்த துறையில் திறமை இருந்தால் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் நீ தேர்ந்தெடுத்திருக்கும் துறை அப்படி இல்லை. ஒரு சினிமாவின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பது பலதரப்பட்ட ரசனையுள்ள ரசிகர்கள்தான். அவர்களால் குப்பைப் படத்தை ஜெயிக்கவைக்கவும் முடியும், உன்னைப் போன்ற திறமைசாலிகளின் உலகத்தரத்தில் எடுக்கும் படங்களை தோல்வியடைய செய்யவும் முடியும்'
'நல்ல, டைரக்டருக்கு எப்படி படம் எடுத்தா பாக்கறவங்களுக்குப் புடிக்கும்ணு தெரியும்'
'சற்றுமுன், சீர்திருத்தப் போகிறாய் என்றாய். இப்போது ரசிகர்களுக்கு பிடிப்பதுபோல் படம் எடுக்கவேண்டும் என்கிறாயே'
'உங்ககிட்ட நான் எந்த உதவியும் கேக்கல. ஏன் இப்படி வெந்த புண்ணுல வேலப் பாச்சுறீங்க?'
'திறமை இல்லாதவர்களிடம் பணம் இருப்பதால் வாய்ப்பு கிடைப்பதாக சொன்னாயே, திறமை இல்லாமல் எப்படி அவர்களுக்கு பணம் கிடைத்தது?'
'அவங்க அப்பா பணம். அரசியல்வாதிகள் குழந்தைகளுக்கு பணத்த என்ன பண்றதுன்னு தெரியாம படம் எடுக்கறாங்க'
'நல்ல வழிகளில் சம்பாதித்த பணக்காரர்கள் யாரும் படம் இயக்கவில்லையா?'
'இருக்காங்க. யூ எஸ்ஸில் சாஃப்ட்வேர் எஞ்சினியரா வேல செஞ்சு காசு சம்பாதிச்சுட்டு, ரெண்டு மூணு ஷார்ட் ஃபிலிம் எடுக்கறாங்க. அப்பறமா அத வெச்சு சான்ஸ் வாங்கறாங்க'
'அவர்களை எப்படி தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்?'
'நஷ்டத்துல பெர்செண்டேஜ் கொடுக்கறதா சொல்லித்தான இவங்க சான்ஸ் கேக்கறதே'
'நீயும் ஏன் அப்படி செய்யக் கூடாது'
'முதல்லயே செஞ்சிருக்கணும். இப்ப முடியாது. அதுமட்டுமில்லாம நான் படிச்சுமுடிச்சு வெளிய வந்தப்ப ஷார்ட் ஃபிலிம் எடுக்கறதெல்லாம் ரொம்ப கம்மியா இருந்துச்சு'
'நீ ஏன் வேலைக்குப் போகக்கூடாது. சம்பாதித்துவிட்டு இந்தத் துறைக்கு மீண்டும் வரலாமே?'
'கடைசி எக்ஸாம் முடிஞ்சு ரெண்டாவது நாள் சென்னைக்கு வந்தேன், இப்ப பன்னெண்டு வருஷம் ஆச்சு. இனி வேலைக்குப் போனா எவ்வளவு சம்பளம் கெடைக்கும்'
'ஒன்றும் சம்பாதிக்காமல் தற்போது நீ வாழவில்லையா? வேலைக்குப் போனால், கிடைக்கின்ற சம்பளத்தில் கொஞ்சம் சேமித்து வைத்தாலே வருடத்திற்கு ஒரு குறும்படம் எடுக்கமுடியாதா?'
'நீங்க யாரு. கடவுளா. இல்ல எங்க வீட்டுல இருந்து அனுப்பி வெச்சாங்களா. அவங்க பேசற மாதிரியே பேசறீங்க'
பதில் சொல்லாமல் சிரித்தார்.
'தயவு செஞ்சு போயிருங்க. என்னோட கனவுகள தூக்கி எரிஞ்சுட்டு வேற வேல செய்யமுடியாது. ப்ளீஸ் போங்க நீங்க'
'சரி உன் ஆசைப்படியே போகிறேன். போகும் முன் ஒன்று சொல்லிவிட்டு போகிறேன். நீ நினைத்ததுபோல, உன் மேல் பரிதாபப்பட்டு நான் வரவில்லை. ஓய்வெடுக்க வேண்டிய வயதில், ஒவ்வொரு நாளும் உன்னை நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் அந்த இரண்டு ஜீவன்களுக்காகத்தான் நான் வந்தேன்' என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
அதற்குப் பிறகு எப்பொழுது உறங்கினேன் என்று தெரியவில்லை. எழுந்தபோது நல்ல வெயில். மெதுவாக நடந்தேன். அந்த மண்டபத்தில், குழந்தைக்கு அப்பொழுதுதான் காது குத்துகிறார்கள்.
நடந்ததெல்லாம் கனவா?
காது குத்தியபோது, அந்தப் பையன் கத்தி அழுதாலும், அவன் கண்களில் வழிந்ததைவிட அதிகம் அவனது அம்மா, அப்பாவின் கண்களில் வழிந்த நீர்.....

3 comments:

  1. யார் நீங்க. கடவுளா?'
    பதில் சொல்லாமல் சிரித்தார்.
    'எனக்குத்தான் உங்க மேல நம்பிக்கை இல்லையே. அப்பறம் ஏன்?

    ReplyDelete
  2. காது குத்தியபோது, அந்தப் பையன் கத்தி அழுதாலும், அவன் கண்களில் வழிந்ததைவிட அதிகம் அவனது அம்மா, அப்பாவின் கண்களில் வழிந்த நீர்.....

    ReplyDelete