Saturday, August 1, 2015

எங்க வீட்டு பொம்பளைங்க!!!!!!


என்னவென்று தெரியவில்லை. எங்களது வீட்டிலிருந்து ஒருவர் அலங்காரம் செய்துகொள்வதற்காக அழகு நிலையத்திற்கு சொல்வது மனதிற்குள் ஒரு நெருடலை உருவாக்கிவிட்டது.

'கணேஷ், பத்து மணிக்கு என்ன ப்யூட்டி பார்லர்ல ட்ராப் பண்ணுங்க ப்ளீஸ்' என்று மனைவி சொன்னவுடன் எனக்கு அதிர்ச்சி. 'சரி' என்றேன்.

'என்ன ஆச்சு. ஒரே மூட் அவுட்டா இருக்கீங்க?'

'ஒண்ணுமில்ல, லைட்டா தலவலிக்கற மாதிரி இருக்கு'

'சரி நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்க. நான் மாமாவைக் கூட்டிட்டுப் போய் விடச் சொல்றேன்'

'இல்லல்ல... பரவால்ல நானே கொண்டுபோய் விடறேன்'

வண்டியில் செல்லும்போது, 'சொல்லிவிடுவோமா' 'வேண்டாமா' என்று ஒரே குழப்பம். காரைப் பார்க் செய்துவிட்டு, 'இந்த பில்டிங்க்ல ஃபஸ்ட் ஃப்ளோர்லதான் இருக்கு' என்றேன்.

'சரிங்க. எப்படியும் மினிமம் ஹாஃப் என் ஹார் ஆகும். நான் ஃபோன் பண்ணுனதக்கு அப்புறம் வந்தாப் போதும்'

'ம்ம்ம்'

'மறந்துட்டேன், தலவலி எப்படி இருக்கு. போய் ஏதாவது டேப்லட் வாங்கி சாப்பிடுங்க' என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

'காயத்ரி, ஒரு நிமிஷம்' என்றேன்

'என்னங்க?'

'நான் ஒரு விஷயம் சொன்னா தப்பா எடுத்துக்கிவியா'

'கம் ஆன் கணேஷ், என்ன இது?'

'அதில்ல... நீ ப்யூட்டி பார்லர் போறது... எனக்கு.. கொஞ்சம்.. அன்ஈஸியா இருக்கு'

'வை???'

'எங்க வீட்டு பொம்பளைங்க யாரும் இப்படி ப்யூட்டி பார்லர் போனதில்ல. அம்மா, அவங்க பவுடர் கூட போட்டுக்க மாட்டாங்க அவங்கள விடு... அக்கா, அண்ணி யாருமே போனதில்ல. அதான் நீ போறது எனக்கு எப்படியோ இருக்கு'

'எனக்குப் புரியல. உங்க.. சாரி.. நம்ம வீட்ல யாரும் போகலைன்னா நான் போகக்கூடாதா. எங்க வீட்ல, எங்க அப்பா பெரியப்பால்லாம் வேஷ்டிதான் கட்டுவாங்க. நீங்களும் அப்படித்தான் இருக்கணும்னு நான் சொன்னா எப்படி இருக்கும்?'

'இல்ல அதுவேற இது வேற. லேடீஸ்னா கொஞ்சம் நம்ம கல்ச்சர்க்கு ஏத்தமாதிரி அட்ஜஸ்ட் பண்ணித்தானப் போணும்'

'நீங்களும், உங்க குடும்பமும் ரொம்ப ஃபார்வேட்ன்னு சொன்னீங்களே. இதுதானா'

'.....'

'நீங்க நெறைய மாறனும். நீங்க மட்டுமில்ல, எல்லா ஹஸ்பண்ட்ஸும் இப்படித்தான். என் ஹஸ்பண்ட் எவ்வளவு ஸ்டைலா டிரஸ் பண்ணுவார் தெரியுமான்னு பெரும்பாலும் எல்லா மனைவிகளும் சொல்லுவாங்க. இப்படி எத்தன ஜெண்ட்ஸ் சொல்லுவீங்க. என் வைஃப்க்கு மங்களகரமான ஃபேஸ்ன்னு சொல்றதுலதான உங்களுக்குப் பெருமை'

'நான் சொல்றத நீ சரியா புரிஞ்சுக்கல. இந்த சொஸைட்டி அப்படி இருக்கு. எவ்வளவோ க்ரைம் நடக்கறதே நாம டெய்லி பாக்கறோம். இப்படி லேடீஸ் மேக்அப்பெல்லாம் பண்ணிக்கிட்டு, கண்டமேனிக்கு டிரஸ் பண்ணிக்கறதும் அதுக்கு ஒரு காரணம். அதான் லேடீஸ் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும்.'

'புல்ஷிட்...'

'....'

'ஒரு வில்லேஜ்ல புலி வந்து கொழந்தைகள எல்லாம் அடிச்சு தின்னுதுன்னு வெச்சுக்குவோம். அப்பா நீங்க என்ன செய்வீங்க?. அந்த ஊர்ல கொழந்தைக எல்லாத்தையும் வீட்டவிட்டு வெளியவிடாம அடச்சே வளப்பீங்களா, இல்லனா அந்தப் புலிய ஏதாவது செய்வீங்களா?'

'ஹ்ம்ம்... புலியத்தான் ஏதாவது பண்ணுவோம். இல்லன்னா, கொழந்தைக வெளிய போகும்போது அவங்களுக்குத் தொணையா பெரியவங்களும் கூட போவோம்.'

'அதுதான். இந்த சோ கால்ட் சொஸைட்டிதான் இங்க புலி. அதுக்கு பயந்துகிட்டு லேடீஸ்ஸை எல்லாம் அடச்சு வெக்காதீங்க. அவங்களுக்கும் பல ஆசைகள் இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க'

'.....'

'நான் எதாவது சொன்னா ஃபெமினிசம் பேசறேன்னு நெனப்பீங்க. இருந்தாலும் சொல்றேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேஸ்புக்ல யாரோ ஷேர் பண்ணிருந்தாங்க. ஒரு ப்ராஸ்டிட்யூட்ட போலிஸ் புடிச்சா, வயித்துப் பொழப்புக்கு தொழில் பண்ற அவங்களப் பத்தி மட்டும்தான எல்லாரும் பேசறாங்க. அவங்க போட்டோவைப் பேப்பர்ல போட்டு அசிங்கப் படுத்துறாங்க. காம இச்சைல அவங்ககிட்ட போன ஆம்பளைங்க ஃபோட்டோவை எந்த பேப்பர்லயாவது போடறாங்களா, அவங்களப் பத்தி யாராவது பேசறாங்களா?'

'அதுக்கும், இதுக்கும் என்ன ரிலேஷன்?'

'ரிலேஷன் இருக்கோ இல்லியோ. நான் சொல்ல வந்தது, அங்க போறவங்கள அசிங்கப்படுத்துங்க. அப்பத்தான் விபச்சாரத்த கொறைக்கமுடியும்'

'இட்ஸ் அப் டூ யூ. நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ'

'மத்தவங்களுக்காக என்னால இந்த கலாச்சார ஜெயிலுக்குள்ள அடஞ்சு கெடக்கமுடியாது. ஐ ஹேவ் ஆல்ரெடி டிசைடட் இட்' என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக அந்தக் கட்டிடத்தை நோக்கி நடந்தார்.

அவர் சொன்னதெல்லாம் சரியாக இருந்தாலும், 'கல்யாணமாயி ஒரு மாசம் ஆகுது, இப்பவே இத சரி செய்யலேன்னா லைப் லாங்க் இத நெனச்சு வருத்தப் படவேண்டியிருக்கும்' என்று மனதில் நினைத்துக்கொண்டு அதற்கு ஒரு முடிவுகட்ட வீட்டிற்கு சென்றேன்.

'அப்பா, நீங்களும் அம்மாவும் கெளம்புங்க. ஈரோட்டுக்குப் போணும்' என்றேன் அப்பாவிடம்.

'என்ன ஆச்சு, காயத்ரி எங்க?' என்றார்.

'ஒண்ணுமில்ல, சும்மாதான் சீக்கிரம் கெளம்புங்க' என்றேன்

அவர்களை அழைத்துக் கொண்டு பாதிதூரம் வந்தபோதே காயத்ரியிடமிருந்து ஃபோன், 'முடிஞ்சிருச்சு, வாங்க' என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்.

காரை பார்க் செய்துவிட்டு அவர்களை அழைத்துக்கொண்டு அந்த கட்டிடத்திற்கு சென்றேன். கீழே காயத்ரி எனக்காக காத்துக்கொண்டிருந்தார்.

எங்களைப் பார்த்தவுடன் காயத்ரிக்கு அதிர்ச்சி. ஆனால் ஒன்றும் பேசவில்லை.

நான் அம்மாவிடம், 'அம்மா, மேல ப்யூட்டி பார்லர் இருக்கு. காயத்ரிகூட போயி நீங்களும் மேக்அப் பண்ணீக்கோங்க'

'எனக்கு எதுக்குப்பா இதெல்லாம்'

'போங்கம்மா போய் பண்ணிக்கோங்க' என்று வலியுருத்தியவுடன், பல ஆண்டுகள் சிறையிலிருந்து வெளியே வந்ததுபோல் மகிழ்ச்சியுடன் சென்றார்.

காயத்ரியின் கண்களில் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்த நான், 'ஒண்ணுமில்ல, எங்க வீட்டு பொம்பளைங்க செய்யாதத நீ செய்யக்கூடாது இல்லியா அதான்' என்றேன்...

Friday, May 1, 2015

வாழ்ந்து காட்டுவேன்.....

வாழ்ந்து காட்டுவேன்.....

வழக்கமாக ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிவிடும் நான் அன்று ஒரு அவசர வேலை காரணமாக எட்டு மணியாகியும் வேலை செய்துகொண்டிருந்தேன்.

செக்யூரிட்டி வந்து, 'மேடம், நான் சாப்பிடப் போறேன். நீங்க உடனே போறதா இருந்தா சொல்லுங்க. நான் வெயிட் பண்றேன். இல்லன்னா போய்ட்டு பத்து பதனஞ்சு நிமிஷத்துல திரும்ப வந்துருவேன்'

'சரி போயிட்டு வாங்க, நீங்க வர்ற வரைக்கும் எனக்கு வேலை இருக்கும்'

'சரி மேடம்'

'ஆபீஸ்ல இன்னைக்கு வேற யாரும் இல்லையா? நான் மட்டும் தானா இருக்கேன்.'

'கல்யாண் சார் இருக்கார் மேடம். ஆனா அவர் இப்ப கெளம்பிருவார்' என்று சொல்லிவிட்டு செக்யூரிட்டி சாப்பிடப் போனார்.

கல்யாண் க்வாலிட்டி செக்ஷனில் வேலை செய்கிறார். யாருடனும் அதிகம் பேசமாட்டார். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். சாப்பிடப் போகும்போதுகூட தனியாகத்தான் போவார். அவருடன் இரண்டு மூன்று முறைதான் பேசியிருப்பேன், அதுவும் வேலை விஷயமாக.

வேறு யாராவதாக இருந்தால் கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லலாம், ஆனால் இவரிடம் சொல்ல சற்று தயக்கம்.

அவரிடம் போய் பேசுவோமா வேண்டாமா என்று நினைத்துக் கொண்டிருந்தபோது அவரே எங்களது செக்ஷனுக்கு வந்தார்.

'ரம்யா, செக்யூரிட்டி வந்தாருங்களா? நீங்க இருப்பீங்க இல்ல. நான் கெளம்பறேன்' என்று சொல்லிவிட்டு என்னுடைய பதிலைக் கூட எதிர்பார்க்காமல் கிளம்பினார்.

'கல்யாண், ஒரு நிமிஷம்.. இன்னும் ஃபிஃப்டீன் மினிட்ஸ்ல வேல முடிஞ்சிரும். கொஞ்சம் வெயிட் பண்ணுனீங்கன்னா நானும் வந்துருவேன்'

'சரிங்க' என்று சொல்லிவிட்டு வேறு ஒன்றும் பேசாமல் எங்களது செக்ஷனில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவர் எனக்காகக் காத்திருப்பதால் நானும் வேகவேகமாக வேலைகளை முடித்தேன்.

'சரி, போலாங்களா?'

'முடிஞ்சதுங்களா?'

'ம்ம்.. ஒரு வழியா முடிச்சுட்டேன்'

'சரிங்க. லாக் பண்ணி கீயை செக்யூரிட்டிகிட்டக் குடுத்துட்டுப் போவோம்'

'அவர் வந்துருப்பார் இல்லியா'

'வந்திருப்பார்'

லிஃப்டின் அருகே வந்தபோது, 'ரம்யா, நீங்க லிஃப்ட்ல வாங்க. நான் ஸ்டெயர்கேஸ் வழியா வர்றேன்'

'ஏன், என்னாச்சு?'

'இல்லைங்க, நான் பொதுவா லிப்ட் பயன்படுத்தறது இல்ல. டெய்லி இப்படி படிக்கட்டு வழியா ஏறி எறங்கறதுதான் நல்லது'

'சரி ஒருநாள் லிஃப்ட்ல வந்தா ஒன்னும் ஆகப்போறது இல்ல. வாங்க போலாம்'

அவர் ஒன்றும் பேசாமல் என்னுடன் லிஃப்டின் உள்ளே வந்தார். செக்யூரிட்டியிடம் சாவியைக் கொடுத்துவிட்டு அவர் பைக் இருக்கும் இடத்திற்கு போனோம். நான் வருவதும் போவதும் கம்பெனி பஸ்ஸில்தான். இதுபோன்று தாமதமாக போகும் நாட்களில் ஆட்டோ பிடித்துதான் போகவேண்டியிருக்கும்.என்னை வீட்டில் விட்டுவிட்டு போகமுடியுமா என்று கேட்டதற்கு கல்யாண் சரி என்று சொன்னதால் அன்று ஆட்டோ செலவு மிச்சம்.

'கல்யாண், எனக்கு கரெக்டா ஏழு மணியாச்சுன்னா பசிக்க தொடங்கிரும்.. இப்ப மணி எட்டரை ஆச்சு. நீங்க தப்பா எடுத்துக்கலன்னா, போற வழில ஏதாவது சாப்பிட்டுட்டு போலாம்'

அவரது பேகில் இருந்து ஆப்பிளை எடுத்துக் கொடுத்து, 'இந்தாங்க இத சாப்பிடுங்க. இன்னும் வேணும்னாகூட இருக்கு. சாப்பிட்டுட்டு வாங்கிக்கோங்க. வெளிய சாப்பிடறது ஒடம்புக்கு நல்லது இல்லீங்க' என்றார்.

'இத சாப்பிடறதுக்கு சும்மா இருக்கலாம். வாங்க டீ நகர் KFC-ல ஏதாவது சாப்ட்டு போவோம்'

'அய்யயோ, அது ஜங்க் ஃபுட்டுங்க. அத சாப்பிட்டா இல்லாத வியாதியெல்லாம் வந்திரும்'

'ஆமா, அத சாப்பிட்டவங்க யாரும் இப்ப உயிரோட இல்ல. சும்மா போவீங்களா.'

'உங்களுக்கு கிண்டலா இருக்கு. ஆஸ்ட்ரேலியால ஒரு பொண்ணுக்கு KFC சாப்பிட்டு ப்ரெயின் டேமேஜ் ஆயிருச்சு தெரியுங்களா?'

'சரி, என்ன வீட்டுல விட்டிருங்க'

நான் கோபித்துக்கொண்டதால் வண்டியை KFC-க்கு ஓட்டினார்.

'நீங்க மட்டும் சாப்பிட்டுட்டு வாங்க, நான் இங்க வெயிட் பண்றேன்'

'நீங்க வரலன்னா எனக்கும் வேண்டாம். நான்தான் வீட்டுக்குப் போக சொன்னேனே'

இவரைப் போன்றவர்கள் கடைசியில் எப்படியும் நாம் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியும். மேலும், இவர்களால் நமக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. ஒருவேளை, நாம்தான் இவர்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்கலாம். எது எப்படியோ, இவர்களிடம் இப்படி பேசுவதில் ஒரு தனி ஆனந்தம்.

'என்னங்க உங்களுக்கு ஒரு பீஸ் போதுமா' என்றேன்.

'இதே அதிகம்ங்க'

'கூல் ட்ரிங் ஏதாவது சாப்பிடறீங்களா?'

'இல்ல நான் குடிக்கறது இல்ல. கூல் ட்ரிங்ன்னு சொல்லக் கூடாது, கோல்ட் ட்ரிங்ன்னு சொல்லணும்ங்க'

'ரொம்ப முக்கியம். ஏன் அதுல வெஷம் கலந்திருக்கா?'

'விடுங்க, நான் சொன்னா நீங்க ஒத்துக்கப் போறதில்ல. கோல்ட் ட்ரிங்ன்னு சொல்லணும்ன்னு சொன்னது உங்களுக்கு புடிக்கலைன்னு எனக்குத் தெரியும்'

'சேச்சே, உங்ககிட்ட இதுமாதிரி நிறையா கத்துக்கணும்ன்னு ஆர்வமா இருக்கேன்'

'திரும்பவும் கிண்டல் பண்றீங்க. இங்க்லீஷ்ல நாம சேத்து எழுத வேண்டிய வார்த்தைகளப் பிரிச்சு எழுதுவோம். உதாரணத்துக்கு maybe, nowadays. அதே மாதிரி பிரிச்சு எழுத வேண்டியத சேத்து எழுதுவோம். உதாரணத்துக்கு at least, of course'

'எல்லாம் அந்த மயில்வாகனனோட தப்பு'

'யாருங்க அது?'

'எங்க இங்க்லீஷ் வாத்தியார். அவர் மட்டும் ஒழுங்கா பாடம் நடத்திருந்தா இந்த மாதிரி ஒரு நெலம எனக்கு இன்னைக்கு வந்திருக்காது இல்லையா?'

சற்று நேர அமைதிக்குப் பிறகு மீண்டும் ஆரம்பித்தார்.

'இது மாதிரி ஃபுட் எல்லாம் சாப்பிடாதீங்க. ஸ்நாக் சாப்பிட தோணும்போது வெஜிடபிள் சாலட் சாப்பிடுங்க. குக்கும்பர்ல நெகட்டிவ் கேலரி தெரியுங்களா? அதாவது அதுல இருக்கற கேலரியவிட அதிகம் கேலரியை அதை டைஜஸ்ட் பண்ண நம்ம பாடி பர்ன் பண்ணும்'

'ப்ளீஸ் விடுங்க. நீங்க இதெல்லாம் சாப்ட்டு நூறு வருஷம் வாழுங்க. நான் இந்த தீய உணவுகளையெல்லாம் தின்று சீக்கரமே செத்துப் போறேன். ஓகேவா?'

அதற்கு பிறகு ஒன்றும் பேசவில்லை. கை கழுவ அவர் சென்ற போது அவருடைய ஸ்மார்ட் ஃபோன் அலாரம் அடித்தது. 'டைம் டூ ஸ்லீப்' என்ற ஆடியோ மெசேஜ் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. அதை ஆஃப் செய்ய அவரது ஸ்மார்ட் ஃபோனை எடுத்த நான் ஆர்வத்தில் அதனை ஆராயத் துவங்கினேன்.

அதில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தது எல்லாம் ஹெல்த் ரிலேட்டட் அப்ளிகேஷன்ஸ். 'Google Fit, Health Mate, My Fitness Pal, RunKeeper' இப்படி பல. அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் வந்துவிட்டார்.

'அலார்ம் அடிச்சது. அதான் ஆஃப் பண்ணேன்' என்றேன்.

'சரிங்க, கை கழுவிட்டு வாங்க. போவோம்'

மிகவும் நல்லவராக இருப்பார் போலிருக்கு, அவரேதான் பணம் கொடுப்பேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார். நான் விடாமல் பணத்தைக் கொடுத்தேன்.

பைக்கை அதிகபட்சமாக நாற்பது கிலோமீட்டர் வேகத்தில்தான் ஓட்டியிருப்பார் என்று நினைக்கிறேன். 'நடந்து போயிருந்தால்கூட இந்நேரம் போயிருப்பேனே' என்று அவரிடம் சொல்ல நினைத்த நான் வேண்டாம் பாவம் என்று விட்டுவிட்டேன். இவரை கல்யாணம் செய்யப்போகும் பெண்ணின் நிலைமைதான் கஷ்டம் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

வீட்டில் என்னை இறக்கிவிட்ட பிறகு என்னிடம், 'ரம்யா, எப்படி கேக்கறதுன்னு தெரியல. நீங்க தப்பா எடுத்துக்கலன்னா...'

'சொல்லுங்க. என்ன விஷயம்'

'நான் உங்க வீட்டுல வந்து துணி மாத்திக்கலாமா?'

'என்ன ஆச்சு?'

'ட்ராக் சூட்டும், ஷூசும் வண்டில இருக்கு. மாத்திட்டு இங்க இருந்து வீட்டுக்கு நடந்து போலாம்ன்னுதான்'

'இங்க இருந்து உங்க வீட்டுக்கு ஆறேழு கிலோமீட்டர் இருக்குமே. அப்பறம் பைக்க என்ன பண்ணுவீங்க?'

'அஞ்சு கிலோமீட்டர்... நீங்க சரின்னு சொன்னா பைக்க இங்க விட்டுட்டுப் போவேன். காலைல பஸ்ல வந்து எடுத்துக்குவேன்'

'டெய்லி நைட் நடக்கறது வழக்கமா?'

'இல்லைங்க, காலைலதான் நடப்பேன். இன்னைக்கு KFC சாப்பிட்டதால கொஞ்சம் நடக்கலாம்ன்னு தான்...

'கொடும. வாங்க. உள்ள வந்து மாத்தீக்கோங்க' என்று சொல்லிவிட்டு அவருக்கு பாத்ரூமைக் காண்பித்தேன்.

ஆடை மாற்றிய பிறகு கையில் ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

'அந்த ஹெல்மெட்டை இங்க வெச்சிட்டு போறது. இல்லன்னா அத மாட்டிட்டுத்தான் நடப்பீங்களோ'

'இல்ல உங்களுக்கு சிரமம் வேண்டாம்ன்னுதான்'

'பார்ரா, இம்மாம் பெரிய பைக்க நிருத்துவாராம். இத்துனூண்டு ஹெல்மெட் வெச்சிட்டு போறதுக்கு இம்புட்டு யோசிக்கறார்.'

ஹெல்மெட்டை கொடுத்துவிட்டு சென்ற அவரிடம், 'சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இந்த மாதிரி ஓவர் ஹெல்த் கான்ஷியஸா இருக்கறவங்கதான் அல்ப ஆயுசுலப் போயிருவாங்க'

'இரும்பு ஒடம்புங்க. அப்படி சட்டுபுட்டுன்னு போயிரமாட்டேன். உங்களை எல்லாம் அனுப்பிட்டுதான் நான் போவேன்' என்றார் முதன்முறையாக கிண்டலோடு.

என்னுடன் தங்கியிருக்கும் தோழிகளிடம் அன்று இரவு நீண்டநேரம் இவரைப் பற்றி சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் காலையிலும் அவருடன்தான் பைக்கில் ஆஃபீஸிற்குச் சென்றேன்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரிடம் சென்று பேசினேன். வலுக்கட்டாயமாக எங்களுடன் உணவு அருந்த அழைத்துக் கொண்டு போனேன்.

ஒரு நாள் அவர் ஆஃபீஸிற்கு வரவில்லை. ஃபோனும் ஸ்விச்சுட் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அடுத்த நாளும் வரவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்களாக வராததால் ஹெச் ஆர் டிப்பார்ட்மெண்ட்டில் சென்று விசாரித்தபோது அவர் ஹாஸ்பிட்டலில் இருப்பதாக சொன்னார்கள்.

கல்யாணிற்கு என்னைத் தவிர வேறு நண்பர்கள் யாரும் எங்களது ஆஃபீஸில் இல்லை. அவருக்கு கேன்சர் என்றறிந்த போது எனது இதயமே வெடித்துவிடும் போல இருந்தது. அதற்குப் பிறகு என்னால் ஒரு வேலையும் செய்யமுடியவில்லை. மாலை ஆஃபீஸ் முடிந்தபிறகு நேராக அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டிற்கு சென்றேன்.

ஒரு தனி அறையில் படுத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன், 'வாங்க ரம்யா. உங்களுக்கு யார் சொன்னா?' என்றார்

'என்ன ஆச்சுங்க?'

'ஸ்டேஜ் த்ரீயாம். அதான் ரேடியேஷன் குடுக்கனும்னு சொல்லி அட்மிட் ஆக சொல்லிட்டாங்க'

'எவ்வளவு நாளா இருக்கு?'

'தெரியலைங்க. இருபத்தி ஏழு வயசுதான் ஆகுது. இந்த வயசுல கேன்சர் வர்றது ரொம்ப அபூர்வம். மூணு நாள் முன்னாடி திடீர்னு வாமிட் பண்ணேன். ப்ளட்டா வந்துச்சு. அப்பவே நேரா ஹாஸ்பிட்டல் வந்துட்டேன். பயாப்ஸி பண்ணி ரிசல்ட் வந்த நிமிஷத்த இப்ப நெனச்சாலும் பயமா இருக்கு'

'கவலப் படாதீங்க. ஒன்னும் ஆகாது. தைரியமா இருங்க'

'நான் இவ்வளவு கண்ட்ரோலா இருக்கரததாலதான் இவ்வளவு நாள் மருந்து மாத்திரை இல்லாம தாக்குப் பிடிச்சிருக்குன்னு டாக்டர் சொன்னார். ட்ரீட்மென்ட் எல்லாம் கரெக்ட்டா எடுத்து, ஃபுட் எல்லாம் கண்ட்ரோல் பண்ணி இருந்தா ரொம்ப நாளைக்கு இருக்கலாமாம். அதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே. ஏற்கனவே கண்ட்ரோல்லதான் இருக்கேன், இன்னும் கொஞ்சம் அதிகமா இருந்துட்டாப் போகுது. கடவுளுக்குத் தெரியும் என்ன மாதிரி ஆளுங்களாலதான் இதெல்லாம் முடியும்ன்னு அதான் எனக்கு இது வந்திருக்கு. கண்டிப்பா நான் வாழ்ந்து காட்டுவேன்' என்று நம்பிக்கையோடு சொன்னாலும் அவரால் கண்களிலிருந்து வழிந்துகொண்டிருந்த கண்ணீரை நிறுத்தமுடியவில்லை .

எனக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. தொண்டை அடைத்துவிட்டதால் பேசவும் முடியவில்லை.

'ரம்யா, மணி ஏழாச்சு. உங்களுக்கு பசிக்குமே. கீழ கேண்டீன் இருக்கு. போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வாங்க' என்றார் நான் அன்று சொன்னதை நியாபகம் வைத்துக்கொண்டு

அவருக்கு வாங்கி வந்திருந்த பழங்களிலிருந்து ஒரு ஆப்பிளை எடுத்து வேகவேகமாகக் கடித்தேன்...

Friday, March 20, 2015

வேலை

//மு.கு: நீங்கள் எழுதும் கதைகள் மற்றும் சம்பவங்களில் வருபவர்கள் எல்லோரும் பொதுவாக நல்லவர்களாகவே இருக்கிறார்களே என்று நண்பர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. எனவே, இந்த முறை விதிவிலக்காக ஒரு சம்பவம்.

ஒருவேளை, இந்த சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவரை நான் தவறாக புரிந்துகொண்டிருக்கலாம். அதேபோல,அவருடைய பார்வையில் நான் கெட்டவனாகக்கூட இருக்கலாம்.//

எஞ்சினியரிங் முடித்தவுடன் குஜராத்தில் வேலை. முதல் ஒரு வருடம் ஒவ்வொரு துறையிலும் சில நாட்கள் பயிற்சி எடுக்கவேண்டும் என்று உத்தரவு இருந்தாலும், ப்ராஜெக்ட்டிற்கு சென்றவுடன், எந்தத் துறையில் ஆள் தேவையோ அங்கு நிரந்தரமாக்கிவிடுவார்கள்.

அப்படித்தான், என்னையும் செக்ஷன் த்ரீயில் வெங்கட்ராமன் சாருக்கு துணையாக அனுப்பிவிட்டார்கள். அந்த செக்ஷன் முழுவதையும் சப்-காண்ட்ராக்ட் கொண்டிருந்தார்கள், அவர்களை கண்காணிப்பதுதான் எங்களது வேலை.

எங்களது கம்பெனி ஒரு மலேசியன் கம்பெனியுடன் சேர்ந்துதான் அந்த ப்ராஜெக்ட்டை செய்தது. அந்தக் கம்பெனியை சார்ந்தவர்கள் அந்தப் ப்ராஜெக்ட்டில் மொத்தமே இரண்டு பேர்தான். ஓன்று லீ சார், அவர் டெப்டி ப்ராஜெக்ட் மேனேஜர், மற்றொருவர் செல்வசுந்தரம் சார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது. உடனே இவர்தான் வில்லன் என்று யூகித்திருப்பீர்கள்).

செல்வசுந்தரம் சார் ஒரு மலேசியத் தமிழர். ஒரு தமிழர் இவ்வளவு பெரிய பதவியில் இருந்ததால் எங்களுக்கு சந்தோசம், அவருடன் சற்றே உரிமையுடன்தான் பேசுவோம்.

ஒருமுறை அப்படி அவருடன் பேசும்போது, அதே உரிமையில் அவருடன் விவாதம் செய்துவிட்டேன், அது அவருக்குப் பிடிக்கவில்லை. அதில் அவருடைய தவறு இல்லை, எனக்கு பக்குவம் இல்லை, யாருடன் எப்படி பேசவேண்டும் என்று தெரியாமல் போய்விட்டது.

அதற்குப் பிறகு, அவர் என்னுடன் அவ்வளவாக பேசமாட்டார், ஆனால் என் நண்பன் முத்துவுடன் நன்றாகப் பேசுவார். எங்களுடைய ப்ராஜெக்ட் மேனேஜர் சப்ரே சாருக்கு செல்வா சாரை பிடிக்காது. சப்ரே சாரை சிறிது நாளில் வேறொரு ப்ராஜெக்ட்டிற்கு மாற்றம் செய்துவிட்டார்கள். அவருக்குப் பதிலாக அமிர்தலிங்கம் சார் வந்தார். ஆம், அவரும் தமிழர்தான். அவரும் செல்வா சாரும் சில நாட்களிலே நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். அதற்குப் பிறகு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பு செல்வா சாருடன் ஆலோசனை செய்வதனை வழக்கமாக வைத்திருந்தார் அமிர்தலிங்கம் சார்.

என்னை செக்ஷன் த்ரீயிலிருந்து, DBM (Dense Bituminous Macadam) செக்ஷனுக்கு மாற்றிவிட்டார்கள். DBM என்பது அஸ்ஃபால்ட் (தார்) சேர்த்து கலவை செய்து போடும் ஒரு லேயர். இதைப் பற்றி விளக்கமாக சொல்லாமல் விஷயத்திற்கு வருகிறேன்.

DBM செக்ஷன், இன்-சார்ஜ் ஸ்ரீநிவாஸ் சாருக்கு துணையாக என்னை மாற்றிவிட்டார்கள். செல்வா சாரின் கீழ்தான் இந்த செக்ஷனும் இருந்து வருகிறது. காலையில் 5 மணிக்கு சைட்டுக்குப் போனால், இரவு 8 மணிக்கு மேல்தான் திரும்பி வரமுடியும். முழு நேரமும் சைட்டில் வேலை இருந்து கொண்டே இருக்கும். ஒரு நாளில் குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் அளவு (ரோட்டின் பாதி விட்த்) இந்த வேலை நடக்கும். ஐந்து அல்லது ஆறு முறையாவது அந்த இரண்டு கிலோ மீட்டரையும் ஆரம்பம் முதல் கடைசி வரை நடக்கவேண்டி வரும். குஜராத்தில் வெப்பநிலை 40 டிக்ரி செல்சியஸுக்கும் அதிகம். மதியம் வேலையாட்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் தூங்கினாலும், எனக்கு ஓய்வே இருக்காது. ஸ்ரீநிவாஸ் சார், காலையில் ஒருமுறையும் மதியம் ஒருமுறையும் சைட்டிற்கு வருவார். அவ்வளவுதான்.

என்னுடைய நிலை மட்டுமல்ல, ட்ரைனியாக வேலை செய்யும் சிவில் எஞ்சினியர்களின் நிலைமை பொதுவாக இப்படித்தான் இருக்கும்.

ஒருமுறை, 'மூணு மாசமா DBM வேலைக்கு ஏன் இதுவரை பேமென்ட் கிடைக்கல' என்று அமிர்தலிங்கம் சார் கேட்டார். நான் அப்போது டெய்லி பராக்ரெஸ் ரிப்போர்ட் எழுதுவதற்காக சைட் எஞ்சினியர்கள் அறைக்கு சென்றிருந்தேன். அங்கு வந்துதான் அவர் கேட்டார், செல்வா சார் உடனே என்னைக் கை காண்பித்து, 'இதா இவன்தான் காரணம், சர்வே லெவல் ரிப்போர்ட் இவன் எழுதிக் குடுக்கல. அதான் பிரச்சனை' என்றார்.

எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. ஏனென்றால், எனக்கும் சர்வே லெவல் ரிப்போர்ட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதை எழுதுவதற்கு சர்வேயர்களும் அவரது அசிஸ்டன்ட்களும் இருக்கிறார்கள். அமிந்தலிங்கம் சார் என்னை பயங்கரமாக திட்டிவிட்டார். என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை. அமிர்தலிங்கம் சார் போனவுடன் செல்வா சாரிடம், 'சார், சர்வே லெவல் ரிப்போர்ட் நான் எழுதணும்ன்னு எனக்குத் தெரியாது சார்' என்றேன். 'என்ன தெரியாது, உனக்குத் தெரியாதா, மூணு மாசமா பேமென்ட் கெடைக்கலன்னு தெரியாதா? என்ன பிரச்சனைன்னு கேக்க வேண்டாமா? சும்மா இருக்கும்போது எழுதிருக்கலாமே?' என்றார். நான் ஒன்றும் பேசவில்லை. மூணு நாளைக்குள்ள எல்லாம் எழுதி முடிச்சரணும்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அவர் சென்ற பிறகு, சர்வேயரிடம் என்ன எழுதவேண்டும் என்று கேட்டேன். என்னைத் திட்டியதில் அவருக்கும் வருத்தம். அப்போது மணி சுமார் எட்டு இருக்கும். ரூமிற்கு செல்லவில்லை, சாப்பிடவும் இல்லை. இரவு பனிரெண்டு மணிவரை எழுதி அதைக் கொண்டு போய் அப்பொழுதே அமிர்தலிங்கம் சாரிடம் கொடுத்தேன். 'சார், எங்க அம்மா மேல சத்தியமா இந்த வேலைய நான் செய்யணும்னு எனக்குத் தெரியாது சார். டெய்லி நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்யறேன், ஆனா, நீங்க என்ன சோம்பேறின்னு எல்லாம் சொல்லி திட்டுனீங்க சார்' என்றேன்.

இல்லப்பா, கோவத்துல எதோ சொல்லிட்டேன், நீ போய் செல்வா சார்கிட்ட பேசு' என்று சொன்னார். நான் செல்வா சாரிடம் பேச விரும்பவில்லை. சர்வேயரிடம் கொண்டுபோய் அந்த லெவல் ஷீட்களைக் கொடுத்தேன்.

சில் மாதங்களுக்குப் பிறகு சித்பூர் டவுனில் வேலை நடந்தது, ப்ளான்ட்டில் (மற்றும் கேம்பில்) இருந்து ஐந்து கிலோமீட்டர்தான் அந்த இடம். எனவே, அன்று ரெக்கார்ட் செய்யவேண்டும் என்று செல்வா சாரும் ஸ்ரீநிவாஸ் சாரும் முடிவு செய்தனர். மாலை ஆறு மணி ஆனபொழுது, சுமார் 700 டன் லே செய்துவிட்டோம். அந்தப் ப்ராஜெக்ட்டின் சூப்பர்வைசிங் கன்சல்டன்ட் நிறுவனமான LBI-இலிருந்து அதன் ARE (Assistant Resident Engineer) சஞ்சய் சிங் சார் சைட்டிற்கு வந்திருந்தார். அப்ரூவல் இல்லாமல் வேலை செய்கிறோம் என்று என்னைக் கண்டபடி திட்டினார். ஆனால் அவருக்கு நன்றாகத் தெரியும், அது என்னுடைய முடிவு இல்லை என்று. அவர்களை திட்ட முடியாததால் என்னை திட்டிவிட்டுச் சென்றார்.

செல்வா சாரும் ஸ்ரீநிவாஸ் சாரும் ப்ளான்டிற்கு சென்று இரவு முழுவதும் அங்கு இருந்து தண்ணி அடித்துக் கொண்டு அங்கு ரிஜெக்ட் செய்திருந்த எல்லா மெட்டீரியல்களையும் எடுத்து பயன்படுத்த சொல்லியிருக்கிறார்கள்.

காலை எட்டு மணிக்குத்தான் வேலை முடிந்தது. இருபத்தி நான்கு மணிநேரத்திற்கும் அதிகமாக சைட்டில் இருந்தேன். கேம்பிற்கு சென்றவுடன் அனைவரும் வாழ்த்து சொன்னார்கள் ஹெட் ஆஃபீஸில் இருந்தும் வாழ்த்து செய்தி வந்திருந்தது.

நான் ரூமிற்கு சென்று தூங்கிவிட்டேன். பதினோரு மணிக்கு செல்வா சாரிடம் இருந்து ஃபோன் வந்து ஆஃபீஸிற்கு சென்றபோதுதான் தெரிந்தது அந்த வேலை முழுவதையும் LBI ரிஜெக்ட் செய்துவிட்டார்கள் என்று.

செல்வா சார் என்னை முதல் நாள் வேலை செய்த சைட்டில் கொண்டு போய்விட்டுவிட்டு, 'நல்லா நடந்து பார், எங்கயாவது ஏதாவது பிரச்சனை இருக்காணு பாத்து வை' என்று சொல்லிவிட்டு போய்விட்டார். டவுன் என்பதால் ஏற்கனவே அதில் வண்டிகள் செல்ல ஆரம்பித்துவிட்டன. தலையில் ஹெல்மெட்டும், கண்களில் சேஃப்டி கோகல்ஸும், உடம்பில் ரிப்லெக்டிங்க் வெஸ்ட்டும் அணிந்து கொண்டு தனியாக அந்த ரோட்டில் பலமுறை நடந்தேன். பிரச்சனை இருந்த இடங்களை எல்லாம் நோட்டில் குறித்து வைத்துக் கொண்டேன்.

அந்த வழியாக சென்ற ஸ்ட்ரக்சர் இன்-சார்ஜ் சுபாஷ் சார் வண்டியை நிறுத்தி, 'ஏன் இப்படி தனியா நடந்துட்டு இருக்க' என்று கேட்டார். அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் போய்விட்டார், சிறிது நேரத்தில் சைட்டில் இருந்து திரும்ப ஆஃபீஸிற்கு போகும்போது கை காண்பித்துவிட்டுப் போனார். சில மணிநேரங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் சைட்டிற்குப் போகும்போது, 'இன்னும முடியலியா' என்பது போல சைகையிலேயே கேட்டுவிட்டுப் போனார்.

அவர் திரும்பி வந்தபோது, 'உனக்கு வேற வேலையில்லையா... நீ ஒரு எஞ்சினியர்.. இப்படியா லூசு மாதிரி நடந்துட்டு இருக்கறது. அதுவும் யாரும் இல்லாம. வா வந்து வண்டில ஏறு' என்று சொன்னார். 'இல்ல சார், நீங்க போங்க. நா அப்பறமா வர்றேன்' என்றேன். ஆனால் அவர் விடவில்லை,வலுக்கட்டாயமாக என்னை அவருடன் அழைத்துக்கொண்டு சென்றார்.

ஒரு கிலோமீட்டர் கூட போயிருக்கமாட்டோம். செல்வா சாரின் பொலெரோ வந்தது. அவர் நான் வண்டியில் இருப்பதைப் பார்த்து வண்டியை கொஞ்சம் முன்பில் சென்று நிறுத்திவிட்டு, சுபாஷ் சாருக்கு போன் செய்து வரச் சொன்னார்.

வண்டியை நிறுத்தியவுடன், 'இவனை எதுக்கு கூட்டிட்டு போறீங்க என்றார் சுபாஷ் சாரிடம். அவர் பதில் சொல்வதற்கு முன்பு, நான், 'சார் எல்லாம் நோட் பண்ணீட்டேன். அதான் ஆஃபீஸுக்குப் போறேன்' என்றேன்.

'எதுக்கு ஆஃபீஸுக்குப் போற? are you going to maxxxxxte there?' என்று சொல்லிக் கத்தினார். பாவம் சுபாஷ் சார், அவரது முகம் வாடிப் போய்விட்டது. செல்வா சாரின் வண்டியில் ஏறி மீண்டும் சைட்டில் இறங்கினேன்.

ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும், 'தம்பி வேலை ரொம்ப கஷ்டமா' என்று அப்பா கேட்கும்போது, 'இல்லப்பா, ஒரு வேலையும் இருக்காதுப்பா, ரொம்ப ஈசி ' என்று சொன்னதும். கடைசிவரை மற்றவர்களுக்கு காசு கொடுத்தேப் பழகிப் போன தாத்தாவிற்கு நான் காசு கொடுக்கும்போது அவர் முகத்தில் வரும் சந்தோஷமும். 'இப்படி மெலிஞ்சிட்டயேப்பா, கறுத்துப் போயிட்டீயேப்பா' என்றெல்லாம் அம்மா சொல்லும்போது, 'இல்லம்மா, அங்க வெயில் அதிகம் அதான். ரொம்ப ஜாலிம்மா வேலை' என்று சொன்னதும் நியாபகத்தில் வந்து, 'இப்பத்தான், அப்பாவோட சொமைய கொஞ்சம் நான் ஏத்துக்கிட்டு இருக்கேன், திரும்பி அவர் மேலேயே எல்லாத்தையும் வெச்சறக்கூடாது' என்று மனதில் சொல்லிக் கொண்டே கண்களில் பாதுகாப்புக் கண்ணாடியை மாட்டிக்கொண்டேன் கண்ணீர் வெளியே தெரியாமல் இருக்க.


கனவுகளுடன்....


அம்மா, அப்பா ஆசைப்படுவதுபோல ஒரு வேலைக்குப் போனால், நான் படித்த டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பிற்கு குறைந்தது பதினைந்தாயிரம் ரூபாயாவது சம்பளம் கிடைக்கும்.
இத்தனை வருடம் கஷ்டப்பட்டது இதற்குத்தானா? வாரத்தில் ஒருநாள், இல்லை ஒருநேரம் நல்ல சாப்பாடு கிடைத்தாலே பெரிய விஷயம். எங்களது டைரக்டருக்கு மீண்டும் ஒருபடம் கிடைத்தால், நிம்மதியாக மூன்று நேரமும் செட்டில் சாப்பிடலாம். செலவிற்கு பணமும் கிடைக்கும். பாவம் அவரது முதல் படம் தோல்வியடைந்ததால் அவருடைய நிலைமையே மிகவும் பரிதாபமாகிவிட்டது.
எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வீட்டில் ஒரு ரூபாய் கூட கேட்டதில்லை, ஊருக்குப் போகும்போதெல்லாம், என்னால் முடிந்த எதையாவது கொடுத்துவிட்டுத்தான் வருகிறேன். இரண்டு வருடம் ஆகின்றது வீட்டிற்கு சென்று.
இந்த நிலையில்தான் இன்று வீட்டிலிருந்து ஃபோன், அவர்கள் என்னை தலைமுழுகிவிட்டார்களாம். ஃபோன் பண்ணும்போதெல்லாம், 'ஏதாவது வேலைக்குப் போ சாமி' என்று சொல்லி அழும் அம்மா இன்று பேசவில்லை. 'இனி ஒனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இந்த வீட்டுல இருந்து யாரும் உன்கூட இனி பேசமாட்டாங்க. நாங்க செத்தாலும் நீ வரக்கூடாது' என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் அப்பா.
வாராவாரம் ஃபோன் செய்து குறைந்தது அரைமணிநேரமாவது திட்டுவார் அப்பா. சென்றமுறை ஃபோன் செய்திருந்தபோது, அடுத்தவாரம் ஒரு முடிவு சொல்லவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். நான் என் முடிவை மாற்றிக்கொள்ளாததால், அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். இரண்டுமுறை ஃபோன் செய்து அவர்கள் எடுக்காததால் இனி அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று விட்டுவிட்டேன்.
கவலைகளை மறந்து சற்றுநேரம் நிம்மதியாக இருப்பதற்கு, மாலை நேரங்களில் கோவிலிற்கு சென்று மண்டபத்தில் படுத்து ஓய்வெடுப்பது வழக்கம். கடவுள் நம்பிக்கையெல்லாம் என்றோ இல்லாமல் போய்விட்டது. என் உழைப்பையும், திறமையும் தவிர வேறெதையும் நம்புவதில்லை.
ஒரு குழந்தைக்கு காது குத்துவதால் இன்று அந்த மண்டபத்தில் படுக்க முடியவில்லை. அவர்கள்மேல் தவறு இல்லை, பொதுவாக மாலை நேரங்களில் வரும் நான் இன்று காலையிலேயே வந்துவிட்டேன்.
கோவில் பின்புறமாக இருந்த அரசமரத்தடியில் படுத்துவிட்டேன். படபடத்துக் கொண்டிருந்தது மனது. சிறிது நேரத்தில் அப்படியே உறங்கிவிட்டேன். எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை, யாரோ 'வருண்' என்று அழைத்தபோதுதான் உறக்கம் கலைந்தது. அப்பாவின் குரல் போன்றிருந்தது. எழுந்தபோது நல்ல இருட்டு, யாருமே அங்கு இல்லை. மணி பார்ப்பதற்கு கடிகாரமும் இல்லை, மொபைலில் சார்ஜும் இல்லை.
கோவில் கதவை அடைத்துவிட்டதால் வெளியே செல்லமுடியாது. சத்தம் போட்டால் யாராவது உதவுவார்கள் என்றாலும், அதற்கு மனம் வரவில்லை. மண்டபத்தில் இருந்த தூணில் சாய்ந்தவாறே அமர்ந்து காலையில் அப்பா சொன்ன வார்த்தைகளை மீண்டும், மீண்டும் நினைத்துப் பார்த்தேன். அவர்கள் என்னை தலைமுழுகி விட்டாலும், என்னால் அவர்களை மறக்கமுடியாது. எவ்வளவு பெரிய ஆளானாலும், அவர்கள்தான் எனக்கு முக்கியம்.
'வருண்' மீண்டும் அப்பாவின் குரல்.
'யாரு, யாரது' என்றேன் எழுந்து நின்று சுற்றிமுற்றி பார்த்தவாறே
'நான் யார் என்பது இருக்கட்டும், உனது பிரச்சனை என்ன?' என்று குரல் மட்டும் வந்தது.
'யாருங்க நீங்க, உங்களுக்கு எப்படி என் பேர் தெரியும்?'
'நான் யார் என்பது முக்கியம் இல்லை'
'சரி நீங்க முதல்ல என் முன்னாடி வாங்க'. அப்புறம் பேசுவோம்' என்றேன் சற்றே பயந்தவாறே.
திடீரென்று என் பின்னால் இருந்து யாரோ என் தோளில் கைவைக்க, உடல் நடுங்கிய வண்ணம் திரும்பினேன்.
ஒரு வயதான பெரியவர், என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
'யார் நீங்க. கடவுளா?'
பதில் சொல்லாமல் சிரித்தார்.
'எனக்குத்தான் உங்க மேல நம்பிக்கை இல்லையே. அப்பறம் ஏன்? என்னப் பாத்தா உங்களுக்கு பாவமா இருக்கா?'
மீண்டும் சிரித்தார்.
'நான் என்ன தப்பு செஞ்சேன்?, என்னோட லட்சியம் ஒரு டைரக்டர் ஆகணும், நல்ல படங்கள் எடுக்கணும். அதுக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்படறேன். யாருக்கும் நான் தொந்தரவா இல்ல''
'எட்டாக் கனிக்குத்தான் ஆசைப் படவேண்டுமா?'
'எது எட்டாக் கனி. சச்சின் அபப்டி நெனச்சிருந்தா, இன்னைக்கு அவரால கிரிக்கெட்ல இவ்வளவு சாதன செஞ்சிருக்கமுடியுமா?. ஷங்கரும் படிச்சது என்ன மாதிரி டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினியரிங்தான். அவர் இத எட்டாக் கனியா நெனச்சிருந்தா, இன்னைக்கு இவ்வளவு பெரிய டைரக்டர் ஆகிருக்க முடியுமா?'
'ஜெயித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், ஆனால் தோற்றவர்கள் லட்சக் கணக்கில் என்பதை உணரவில்லையா?'
''என்னோட திறம மேலயும் உழைப்பு மேலயும் நம்பிக்கை இருக்கு'
'இந்தத் துறையில் அதுமட்டும் போதுமா?'
'அது உண்மதான். இன்னைக்கு காசு இருக்கறவன் எல்லாம் டைரக்டர் ஆயிர்றான். டிஸ்ட்ரிப்யூட்டர்களும், ப்ரொடுயூசர்களும் இவங்க எடுக்கற குப்ப படங்கள நம்பறாங்க. என்ன மாதிரி திறம உள்ளவங்க இப்படியே கஷ்டப்பட்டுட்டு இருக்கவேண்டியதுதான். அதனாலதான் தமிழ்படங்களோட தரமும் இப்படி இருக்கு'
'சீர்குலைந்துள்ள தமிழ் சினிமாவை சரிசெய்ய, உன்னிடம் என்ன திட்டம் உள்ளது?'
'கிண்டல் பண்றீங்களா'
'உனக்கு நல்ல படமாக தெரிவது, எப்படி ஒரு சிறந்த படம் என்று கூறுகிறாய்?'
'புரியல'
'உனக்கு ஒரு படம் குப்பையாக தெரிகிறது. அதே சமயத்தில் அந்தப் படம் வேறு ஒருவருக்கு சிறந்ததாக தோன்றியதால்தான் அந்தப் படத்தை எடுத்தார். அதேபோல, உனக்கு சிறந்ததாக தெரியும் படம் வேறு சிலருக்கு குப்பைப் படமாக தெரியலாம் இல்லையா?'
'என்ன சொல்ல வர்றீங்க'
'சச்சின் சாதனை செய்த துறையில் திறமை இருந்தால் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் நீ தேர்ந்தெடுத்திருக்கும் துறை அப்படி இல்லை. ஒரு சினிமாவின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பது பலதரப்பட்ட ரசனையுள்ள ரசிகர்கள்தான். அவர்களால் குப்பைப் படத்தை ஜெயிக்கவைக்கவும் முடியும், உன்னைப் போன்ற திறமைசாலிகளின் உலகத்தரத்தில் எடுக்கும் படங்களை தோல்வியடைய செய்யவும் முடியும்'
'நல்ல, டைரக்டருக்கு எப்படி படம் எடுத்தா பாக்கறவங்களுக்குப் புடிக்கும்ணு தெரியும்'
'சற்றுமுன், சீர்திருத்தப் போகிறாய் என்றாய். இப்போது ரசிகர்களுக்கு பிடிப்பதுபோல் படம் எடுக்கவேண்டும் என்கிறாயே'
'உங்ககிட்ட நான் எந்த உதவியும் கேக்கல. ஏன் இப்படி வெந்த புண்ணுல வேலப் பாச்சுறீங்க?'
'திறமை இல்லாதவர்களிடம் பணம் இருப்பதால் வாய்ப்பு கிடைப்பதாக சொன்னாயே, திறமை இல்லாமல் எப்படி அவர்களுக்கு பணம் கிடைத்தது?'
'அவங்க அப்பா பணம். அரசியல்வாதிகள் குழந்தைகளுக்கு பணத்த என்ன பண்றதுன்னு தெரியாம படம் எடுக்கறாங்க'
'நல்ல வழிகளில் சம்பாதித்த பணக்காரர்கள் யாரும் படம் இயக்கவில்லையா?'
'இருக்காங்க. யூ எஸ்ஸில் சாஃப்ட்வேர் எஞ்சினியரா வேல செஞ்சு காசு சம்பாதிச்சுட்டு, ரெண்டு மூணு ஷார்ட் ஃபிலிம் எடுக்கறாங்க. அப்பறமா அத வெச்சு சான்ஸ் வாங்கறாங்க'
'அவர்களை எப்படி தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்?'
'நஷ்டத்துல பெர்செண்டேஜ் கொடுக்கறதா சொல்லித்தான இவங்க சான்ஸ் கேக்கறதே'
'நீயும் ஏன் அப்படி செய்யக் கூடாது'
'முதல்லயே செஞ்சிருக்கணும். இப்ப முடியாது. அதுமட்டுமில்லாம நான் படிச்சுமுடிச்சு வெளிய வந்தப்ப ஷார்ட் ஃபிலிம் எடுக்கறதெல்லாம் ரொம்ப கம்மியா இருந்துச்சு'
'நீ ஏன் வேலைக்குப் போகக்கூடாது. சம்பாதித்துவிட்டு இந்தத் துறைக்கு மீண்டும் வரலாமே?'
'கடைசி எக்ஸாம் முடிஞ்சு ரெண்டாவது நாள் சென்னைக்கு வந்தேன், இப்ப பன்னெண்டு வருஷம் ஆச்சு. இனி வேலைக்குப் போனா எவ்வளவு சம்பளம் கெடைக்கும்'
'ஒன்றும் சம்பாதிக்காமல் தற்போது நீ வாழவில்லையா? வேலைக்குப் போனால், கிடைக்கின்ற சம்பளத்தில் கொஞ்சம் சேமித்து வைத்தாலே வருடத்திற்கு ஒரு குறும்படம் எடுக்கமுடியாதா?'
'நீங்க யாரு. கடவுளா. இல்ல எங்க வீட்டுல இருந்து அனுப்பி வெச்சாங்களா. அவங்க பேசற மாதிரியே பேசறீங்க'
பதில் சொல்லாமல் சிரித்தார்.
'தயவு செஞ்சு போயிருங்க. என்னோட கனவுகள தூக்கி எரிஞ்சுட்டு வேற வேல செய்யமுடியாது. ப்ளீஸ் போங்க நீங்க'
'சரி உன் ஆசைப்படியே போகிறேன். போகும் முன் ஒன்று சொல்லிவிட்டு போகிறேன். நீ நினைத்ததுபோல, உன் மேல் பரிதாபப்பட்டு நான் வரவில்லை. ஓய்வெடுக்க வேண்டிய வயதில், ஒவ்வொரு நாளும் உன்னை நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் அந்த இரண்டு ஜீவன்களுக்காகத்தான் நான் வந்தேன்' என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
அதற்குப் பிறகு எப்பொழுது உறங்கினேன் என்று தெரியவில்லை. எழுந்தபோது நல்ல வெயில். மெதுவாக நடந்தேன். அந்த மண்டபத்தில், குழந்தைக்கு அப்பொழுதுதான் காது குத்துகிறார்கள்.
நடந்ததெல்லாம் கனவா?
காது குத்தியபோது, அந்தப் பையன் கத்தி அழுதாலும், அவன் கண்களில் வழிந்ததைவிட அதிகம் அவனது அம்மா, அப்பாவின் கண்களில் வழிந்த நீர்.....