Saturday, August 1, 2015

எங்க வீட்டு பொம்பளைங்க!!!!!!


என்னவென்று தெரியவில்லை. எங்களது வீட்டிலிருந்து ஒருவர் அலங்காரம் செய்துகொள்வதற்காக அழகு நிலையத்திற்கு சொல்வது மனதிற்குள் ஒரு நெருடலை உருவாக்கிவிட்டது.

'கணேஷ், பத்து மணிக்கு என்ன ப்யூட்டி பார்லர்ல ட்ராப் பண்ணுங்க ப்ளீஸ்' என்று மனைவி சொன்னவுடன் எனக்கு அதிர்ச்சி. 'சரி' என்றேன்.

'என்ன ஆச்சு. ஒரே மூட் அவுட்டா இருக்கீங்க?'

'ஒண்ணுமில்ல, லைட்டா தலவலிக்கற மாதிரி இருக்கு'

'சரி நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்க. நான் மாமாவைக் கூட்டிட்டுப் போய் விடச் சொல்றேன்'

'இல்லல்ல... பரவால்ல நானே கொண்டுபோய் விடறேன்'

வண்டியில் செல்லும்போது, 'சொல்லிவிடுவோமா' 'வேண்டாமா' என்று ஒரே குழப்பம். காரைப் பார்க் செய்துவிட்டு, 'இந்த பில்டிங்க்ல ஃபஸ்ட் ஃப்ளோர்லதான் இருக்கு' என்றேன்.

'சரிங்க. எப்படியும் மினிமம் ஹாஃப் என் ஹார் ஆகும். நான் ஃபோன் பண்ணுனதக்கு அப்புறம் வந்தாப் போதும்'

'ம்ம்ம்'

'மறந்துட்டேன், தலவலி எப்படி இருக்கு. போய் ஏதாவது டேப்லட் வாங்கி சாப்பிடுங்க' என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

'காயத்ரி, ஒரு நிமிஷம்' என்றேன்

'என்னங்க?'

'நான் ஒரு விஷயம் சொன்னா தப்பா எடுத்துக்கிவியா'

'கம் ஆன் கணேஷ், என்ன இது?'

'அதில்ல... நீ ப்யூட்டி பார்லர் போறது... எனக்கு.. கொஞ்சம்.. அன்ஈஸியா இருக்கு'

'வை???'

'எங்க வீட்டு பொம்பளைங்க யாரும் இப்படி ப்யூட்டி பார்லர் போனதில்ல. அம்மா, அவங்க பவுடர் கூட போட்டுக்க மாட்டாங்க அவங்கள விடு... அக்கா, அண்ணி யாருமே போனதில்ல. அதான் நீ போறது எனக்கு எப்படியோ இருக்கு'

'எனக்குப் புரியல. உங்க.. சாரி.. நம்ம வீட்ல யாரும் போகலைன்னா நான் போகக்கூடாதா. எங்க வீட்ல, எங்க அப்பா பெரியப்பால்லாம் வேஷ்டிதான் கட்டுவாங்க. நீங்களும் அப்படித்தான் இருக்கணும்னு நான் சொன்னா எப்படி இருக்கும்?'

'இல்ல அதுவேற இது வேற. லேடீஸ்னா கொஞ்சம் நம்ம கல்ச்சர்க்கு ஏத்தமாதிரி அட்ஜஸ்ட் பண்ணித்தானப் போணும்'

'நீங்களும், உங்க குடும்பமும் ரொம்ப ஃபார்வேட்ன்னு சொன்னீங்களே. இதுதானா'

'.....'

'நீங்க நெறைய மாறனும். நீங்க மட்டுமில்ல, எல்லா ஹஸ்பண்ட்ஸும் இப்படித்தான். என் ஹஸ்பண்ட் எவ்வளவு ஸ்டைலா டிரஸ் பண்ணுவார் தெரியுமான்னு பெரும்பாலும் எல்லா மனைவிகளும் சொல்லுவாங்க. இப்படி எத்தன ஜெண்ட்ஸ் சொல்லுவீங்க. என் வைஃப்க்கு மங்களகரமான ஃபேஸ்ன்னு சொல்றதுலதான உங்களுக்குப் பெருமை'

'நான் சொல்றத நீ சரியா புரிஞ்சுக்கல. இந்த சொஸைட்டி அப்படி இருக்கு. எவ்வளவோ க்ரைம் நடக்கறதே நாம டெய்லி பாக்கறோம். இப்படி லேடீஸ் மேக்அப்பெல்லாம் பண்ணிக்கிட்டு, கண்டமேனிக்கு டிரஸ் பண்ணிக்கறதும் அதுக்கு ஒரு காரணம். அதான் லேடீஸ் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும்.'

'புல்ஷிட்...'

'....'

'ஒரு வில்லேஜ்ல புலி வந்து கொழந்தைகள எல்லாம் அடிச்சு தின்னுதுன்னு வெச்சுக்குவோம். அப்பா நீங்க என்ன செய்வீங்க?. அந்த ஊர்ல கொழந்தைக எல்லாத்தையும் வீட்டவிட்டு வெளியவிடாம அடச்சே வளப்பீங்களா, இல்லனா அந்தப் புலிய ஏதாவது செய்வீங்களா?'

'ஹ்ம்ம்... புலியத்தான் ஏதாவது பண்ணுவோம். இல்லன்னா, கொழந்தைக வெளிய போகும்போது அவங்களுக்குத் தொணையா பெரியவங்களும் கூட போவோம்.'

'அதுதான். இந்த சோ கால்ட் சொஸைட்டிதான் இங்க புலி. அதுக்கு பயந்துகிட்டு லேடீஸ்ஸை எல்லாம் அடச்சு வெக்காதீங்க. அவங்களுக்கும் பல ஆசைகள் இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க'

'.....'

'நான் எதாவது சொன்னா ஃபெமினிசம் பேசறேன்னு நெனப்பீங்க. இருந்தாலும் சொல்றேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேஸ்புக்ல யாரோ ஷேர் பண்ணிருந்தாங்க. ஒரு ப்ராஸ்டிட்யூட்ட போலிஸ் புடிச்சா, வயித்துப் பொழப்புக்கு தொழில் பண்ற அவங்களப் பத்தி மட்டும்தான எல்லாரும் பேசறாங்க. அவங்க போட்டோவைப் பேப்பர்ல போட்டு அசிங்கப் படுத்துறாங்க. காம இச்சைல அவங்ககிட்ட போன ஆம்பளைங்க ஃபோட்டோவை எந்த பேப்பர்லயாவது போடறாங்களா, அவங்களப் பத்தி யாராவது பேசறாங்களா?'

'அதுக்கும், இதுக்கும் என்ன ரிலேஷன்?'

'ரிலேஷன் இருக்கோ இல்லியோ. நான் சொல்ல வந்தது, அங்க போறவங்கள அசிங்கப்படுத்துங்க. அப்பத்தான் விபச்சாரத்த கொறைக்கமுடியும்'

'இட்ஸ் அப் டூ யூ. நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ'

'மத்தவங்களுக்காக என்னால இந்த கலாச்சார ஜெயிலுக்குள்ள அடஞ்சு கெடக்கமுடியாது. ஐ ஹேவ் ஆல்ரெடி டிசைடட் இட்' என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக அந்தக் கட்டிடத்தை நோக்கி நடந்தார்.

அவர் சொன்னதெல்லாம் சரியாக இருந்தாலும், 'கல்யாணமாயி ஒரு மாசம் ஆகுது, இப்பவே இத சரி செய்யலேன்னா லைப் லாங்க் இத நெனச்சு வருத்தப் படவேண்டியிருக்கும்' என்று மனதில் நினைத்துக்கொண்டு அதற்கு ஒரு முடிவுகட்ட வீட்டிற்கு சென்றேன்.

'அப்பா, நீங்களும் அம்மாவும் கெளம்புங்க. ஈரோட்டுக்குப் போணும்' என்றேன் அப்பாவிடம்.

'என்ன ஆச்சு, காயத்ரி எங்க?' என்றார்.

'ஒண்ணுமில்ல, சும்மாதான் சீக்கிரம் கெளம்புங்க' என்றேன்

அவர்களை அழைத்துக் கொண்டு பாதிதூரம் வந்தபோதே காயத்ரியிடமிருந்து ஃபோன், 'முடிஞ்சிருச்சு, வாங்க' என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்.

காரை பார்க் செய்துவிட்டு அவர்களை அழைத்துக்கொண்டு அந்த கட்டிடத்திற்கு சென்றேன். கீழே காயத்ரி எனக்காக காத்துக்கொண்டிருந்தார்.

எங்களைப் பார்த்தவுடன் காயத்ரிக்கு அதிர்ச்சி. ஆனால் ஒன்றும் பேசவில்லை.

நான் அம்மாவிடம், 'அம்மா, மேல ப்யூட்டி பார்லர் இருக்கு. காயத்ரிகூட போயி நீங்களும் மேக்அப் பண்ணீக்கோங்க'

'எனக்கு எதுக்குப்பா இதெல்லாம்'

'போங்கம்மா போய் பண்ணிக்கோங்க' என்று வலியுருத்தியவுடன், பல ஆண்டுகள் சிறையிலிருந்து வெளியே வந்ததுபோல் மகிழ்ச்சியுடன் சென்றார்.

காயத்ரியின் கண்களில் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்த நான், 'ஒண்ணுமில்ல, எங்க வீட்டு பொம்பளைங்க செய்யாதத நீ செய்யக்கூடாது இல்லியா அதான்' என்றேன்...

1 comment: