Saturday, November 15, 2014

ஒரு பேய் கதை...


'என்னய்யா, இன்னைக்கு த்ரீ-பி கேம்ப்ல ஒரு ஆளுக்கு பேய் பிடிச்சிருச்சாம்' என்று கேட்டார் செல்வம் முருகனிடம்

செல்வம், முருகன், ரவி மூவரும் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை செய்பவர்கள். செல்வம் சைட் சூப்பர்வைசர், முருகன் ப்ரொக்யூர்மெண்ட் ஆஃபிஸர், ரவி சேஃப்டி ஆஃபிஸர். இவர்கள் மூன்று பேரும் ஒரே ஃப்ளாட்டில்தான் தங்கியுள்ளார்கள். இவர்களது குடும்பத்தினரோ இந்தியாவில் உள்ளனர்.

'ஆமாய்யா, என்னைக்கு அந்த தெலுங்குப் பையன் தூக்குப் போட்டு செத்தானோ. அன்னைல இருந்து அந்த கேம்புல ஏதாவது இப்படி ஒன்னு நடந்துட்டேதான் இருக்கு'

'அந்த ஆளு ஹிந்திக்காரன். ஆனா தெலுங்கு அவ்வளவு அலகா பேசரானாம். சைட்ல ஆளுங்க சொன்னாங்க'

'அப்படித்தான் சொல்றாங்க. பூஜையெல்லாம் பண்ணுவாரே அந்த சேட்டன்கிட்ட கொண்டுபோன பெறகுதான் இப்ப பரவாயில்லையாம். நாளைக்கு ஊருக்கு அனுப்பறாங்கலாம்'

'இங்க பாருய்யா, நாமெல்லாம் எதோ முட்டாக்****** மாதிரி இந்த ஆளு சிரிச்சிட்டு இருக்கறத' என்றார் செல்வம் ரவியைப் பார்த்தவாறே.

'ஏன்யா, என்ன வம்புக்கு இழுக்கறீங்க. எனக்கு இதுல எல்லாம் நம்பிக்க இல்ல அவ்வளவுதான்'

'உன்ன யாருய்யா இலுத்தா. இதெல்லாம் உனக்கு வந்தாத்தான் நீ நம்புவ' என்றார் செல்வம்..

'இது ஹேலுஸினேஷன். அதெல்லாம் உங்களுக்குப் புரியாது.'

ரவிக்கு சிறுவயதில் இருந்து இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.. கடவுள் நம்பிக்கையும் இல்லை.

'இந்த ம***ஸினேஷன் எல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஹிந்திக்காரன் தெலுங்கு பேசறது எல்லாம் எப்படியாம்?. சும்மா பெரிய பருப்பு மாதிரி பேசாதய்யா'

'யோவ். உன் கனவுல அஹ்மத் சாதி வந்தா எந்த மொழில பேசுவார்'

'அரபில'

'அது எப்படிய்யா. உனக்குத்தான் அரபி தெரியாதே, அப்புறம் எப்படி உன்னோட கனவுல வர்ற ஆள் அரபி பேசறார்'

'யோவ், நம்புன்னா நம்பு இல்லன்னா போ. கம்பெனி எதுக்கு அந்த ஆள ஊருக்கு அனுப்புதாம். நம்ம கம்பெனில உன்னத் தவிர எல்லாம் முட்டாப்****'கதான் ஒத்துக்கறேன்.'

'நான் நேருல பாக்காத வர எதையும் நம்பமாட்டேன்'

'யோவ், உனக்கு நேருல பேயப் பாக்கணுமா? இப்பவே கெளம்புயா. உனக்கு காமிக்கறேன்'

'சும்மா காமெடி பண்ணாதய்யா'

''முருகா, நீயும் கெளம்புய்யா கலீஃபா பார்க்குக்கு பின்னாடி உள்ள அந்த எடத்துக்கு இன்னைக்கு பன்னெண்டு மணிக்கு போறோம். இந்த ஆளு அப்பவாவது நம்பறானான்னு பாப்போம்'

'ஓகே. போலாம்... ஒரு பெட்... நீங்க சொல்றது உண்மைன்னா, இந்த மாசம் முழுசும் சரக்கு செலவு என்னோடது. இல்லன்னா, நீங்க ரெண்டு பேரும் எனக்கு சரக்கு வங்கித் தரணும்.'

மணி பதினொன்று, மூன்று பேரும் நடந்து அங்கு சென்றடைந்தபோது மணி பனிரெண்டை நெருங்கியது. பார்க் அருகில் நல்ல வெளிச்சம் இருந்தாலும். செல்வம் சொன்ன இடம் பார்க்கிற்கு வெளியே கொஞ்சம் ஒரு ஒதுக்குப்புறமான இடம். நல்ல இருட்டு. செடிகள் காடுபோல வளர்ந்திருந்தன. மொபைலில் இருந்த டார்ச்சைப் பயன்படுத்தி அந்த இடத்திற்கு அருகே நடந்து சென்றனர்.

அந்த இடத்தை நெருங்க, நெருங்க அழுகிய உடலின் மணம் வீசத் துவங்கியது.

முருகன் செல்வத்திடம், 'யோவ், வேண்டாம்ய்யா.. வா போயிறலாம். இந்த ஆளால நாம எதுக்கு சாகணும்' என்று சொல்லிக் கொண்டிருந்தபோது சற்று தொலைவில் பயங்கரமாக காற்று வீசுவதுபோல சத்தம். அதோடு யாரோ காய்ந்த இலைகளின்மீது ஓடிவருகின்ற சத்தம்.

அதைக் கேட்டவுடன் முருகனும் செல்வமும் திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டனர். ஆனால் ரவி அசரவில்லை. அந்த இடத்தை நோக்கி தமது மொபைலில் இருந்த ஃப்ளாஷ் லைட்டை திருப்ப. யாரும் அங்கு இல்லை. ஆனால் இப்போது ஒரு குழந்தை அழும் சத்தமும் கேட்டது. சில வினாடிகளில் எல்லாம் அமைதியாகிவிட்டது. ரவிக்கு ஒன்றும் புரியவில்லை.

மேலும், அரைமணிநேரம் அந்த இடத்திலேயே இருந்தார். ஆனால் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாகவே இருந்தது. வீட்டிற்கு திரும்பிய ரவியிடம், செல்வமும் முருகனும்,'இப்பவாவது நம்புறியா, சரக்கு வாங்கித் தரியா' என்று விடாமல் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ரவி அவற்றை சட்டை செய்யாமல் அந்த சத்தத்தைப் பற்றியே மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தார். ரவியால் அன்று இரவு தூங்கவே முடியவில்லை.

காலையில் நல்ல தலைவலி என்பதால் வேலைக்கு வரவில்லை என்று ரவி சொல்லிவிட்டார். மதியம்போல் மீண்டும் கிளம்பி அந்த இடத்திற்கு சென்றார். செக்யூரிட்டி அந்தப் பகுதிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. ரவி வேறு வழியில்லாமல் அன்று இரவு மீண்டும் செல்லலாம் என்று முடிவு செய்துவிட்டு திரும்பினார்.

'வாங்கய்யா இன்னைக்கும் போய் பாப்போம். அந்த மர்மத்தை கண்டுபிடிச்சிரலாம்' என்றார்.

'யோவ், மூடிட்டு தூங்கு. அசிங்க அசிங்கமா வாய்ல வருது. உனக்கு வேணும்னா குடும்பத்துமேல அக்கறை இல்லாம இருக்கலாம். எங்களுக்கு அப்படி இல்ல' என்றார் முருகன்.

இவர்களை அழைத்துப் பயன் இல்லை என்பதை உணர்ந்த ரவி தனியாக செல்ல முடிவு செய்தார். அன்றிலிருந்து தொடர்ந்து ஐந்து நாட்களாக அந்த இடத்திற்கு ரவி போய் கொண்டிருந்தார். ரவி இவர்களிடம் சரியாக பேசுவதில்லை. பித்து பிடித்ததுபோல் எப்போதும் எதையோ யோசித்துக் கொண்டே இருந்தார்.

அன்று வெள்ளிக்கிழமை. ரவியிடம் முருகன், 'யோவ், என்ன ஆச்சுய்யா, உனக்கு. ஏன்யா இப்படி இருக்கற. உனக்கு பைத்தியமா. உன் புள்ள குட்டிகள நெனச்சாவது பேசாம இருய்யா' என்றார்.

'கவலைப்படாத. இன்னைக்கோட இதுக்கு ஒரு முடிவு கட்டிருவேன்'

செல்வத்திற்கும், முருகனிற்கும் ரவியை நினைத்து கவலை அதிகம் ஆனதால் த்ரீ-பி கேம்பில் இருந்த சங்கரன் நம்பூதிரியை பார்க்க சென்றார்கள்.

நம்பூதிரியின் அறையில் வேறு யாருமில்லை. பொதுவாக லேபர் கேம்பில் ஒரு அறையில் ஆறிலிருந்து பத்து பேர் வரை இருப்பார்கள்.

சந்தனக் கலரில் வேஷ்டி கட்டியிருந்த நம்பூதிரி, சட்டை எதுவும் அணியவில்லை. கழுத்தில் ருத்ராட்ச மாலை, தோளில் ஒரு துண்டு.

'எந்தா...' என்றார் கர்ஜனையான குரலில்

'சேட்டா, எங்க ப்ரெண்ட். கொஞ்ச நாளா ராத்திரி பேய் இருக்கும் இடத்துக்கு போறார். மொத நாள் நாங்க எல்லாரும் போனோம். சத்தம் கேட்டு பயந்து ஓடி வந்துட்டோம். ஆனா அந்த ஆள் டெய்லி நைட் போறார். பித்து பிடிச்ச மாதிரி பேசறார்'

கீழே உட்காரச் சொல்வதுபோல் சைகை காண்பித்துவிட்டு, டேபிளில் இருந்து சோழிகள், வெற்றிலை, எலுமிச்சம்பழம், திருநீர் ஆகியவற்றை எடுத்துவந்து அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்தார்.

கண்களை முடியவாறே சில மந்திரங்களை சொல்லிக்கொண்டே இடையிடையே சோழிகளை உருட்டினார். சற்று நேரத்திற்குப் பிறகு 'கத்தாம்மா' என்று கத்தினார்.

'கத்தாம்மான்னா என்ன சேட்டா' என்றனர் செல்வமும் முருகனும்.

'ஹவுஸ் மெயிட்'

'புரியல சேட்டா'

'அரபி வீட்டில் ஒரு குட்டி மறிச்சு. அதினே கொன்னது ஈ கத்தாம்மாயானென்னு அவர் ஷம்ஷயிச்சு. அவர் அவசானம் ஆ பாவம் கத்தாம்மயெ கொன்னு'

'ஆமாம் சேட்டா. ஒரு கொலந்த அலுகற சத்தமும் கேட்டுச்சு. நாங்க திரும்ப ஓடி வந்தப்பதான் கொலந்த அலுதுச்சு' என்றார் செல்வம்.

'ஆ கத்தாம்மா விவாகம் கழிச்சில்லாயிருந்து. ந்ஜிங்கள்டே ஸுகூர்த்துமாயி அவள் இப்போழ் ப்ரணயத்திலா'

'அவனுக்கு குடும்பம் இருக்கு. அவனக் காப்பாத்துங்க.சேட்டா' என்றார் முருகன்

'எனிக்கு ஒன்னும் செய்யான் பட்டில்லா. எல்லாம் கழிஞ்சு. இன்னு அயாளினே அவடப் போகான் சம்மதிக்கருது. இன்னு போயில்லெங்கில் அயாளே ரக்ஷிக்கான் பட்டும். பக்ஷே அயாளே தடயுன்னது அத்ர எளுப்பம் அல்லா'

'சேட்டா, நாங்க இப்ப என்ன செய்யணும்' என்றார் முருகன்

'ஈ கயரினெ அயாள்டே கையில் கெட்டணும். பின்னே நாள ராவிலப் போயட்டு ஈ பஸ்மம் ஆ ஸ்தலத்தில் இடணும். ந்ஜிங்கள் அதில் சவுட்டான் பாடில்லா. பின்னே ஒரு கார்யம். அயாள் இன்னு ராத்திரி அவிடே போயெங்கில், ஒரு மணிக்கு முன்னே திருச்சு வன்னால் வாதில் தொறக்கருது '

திருநீரையும் அந்தக் கயிறையும் வாங்கிக் கொண்டு ரூமிற்கு வந்தனர். ரவி நல்ல உறக்கத்தில் இருந்த ரவியின் கையில், கடவுளை வேண்டிக் கொண்டு அந்தக் கயிறைக் கட்டினார் செல்வம்.

'யோவ், இந்த ஆள் வீட்டுக்கு ஃபோன் பண்ணி சொல்லலாமா?. அவங்க சொன்னா இந்த ஆள் போகமாட்டார்' என்றார் முருகன்.

'இல்லையா. இந்த ஆள் அவங்க பேச்செல்லாம் கேக்கமாட்டான். அவங்கள ஏன் தேவையில்லாம பயப்படுத்தணும்'

அதற்குப் பிறகு டீயில் தூக்க மாத்திரைகளைக் கலக்கி அதை ரவியிடம் கொடுத்தனர். ரவி அதை வாங்கிக் குடித்துவிட்டு மீண்டும் தூங்கிவிட்டார். சரியாக பதினோரு மணிக்கு அலாரம் அடிக்க, ரவி எழுந்துவிட்டார்.

'ரவி வேண்டாம்யா. உனக்காகத்தான் சொல்றோம். இன்னைக்கு மட்டும் போகவேண்டாம். நாளைக்கு போயிக்கோ' என்றார் செல்வம்.

'சும்மா, இருங்கய்யா.. நாளைக்கு எல்லாம் சரியாயிரும். வேணும்னா நீங்களும் வாங்க போலாம்' என்றார் ரவி.

அவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் ரவி சென்றார் டோரை அடைக்கும்போது கையிலிருந்த கயிறு டோர் ஹேண்டிலில் மாட்டி அருந்து விழுந்தது. அப்பொழுது அந்தக் கயிறைப் பார்த்த ரவி சிரித்தார்.

பனிரெண்டு மணிக்கு முன்னதாகவே அந்த இடத்திற்கு சென்றுவிட்டார். டேஞ்சர் என்று எழுதியிருந்த அந்த மேன்ஹோல் கவரை திறப்பதற்கு ஒரு கம்பியும் கொண்டு சென்றிருந்தார். மேன்ஹோல் கவரை மூடியிருந்த மண்ணை முந்தைய நாளே அப்புறப்படுத்தியிருந்தார். அவ்வளவு எளிதாக அந்த கவரை திறக்க முடியவில்லை. ஒருவழியாக பலம் கொடுத்து திறந்தார்.

மணி 12:55

அறையின கதவைத் தட்ட, செல்வமும் முருகனும் கதவைத் திறக்கவில்லை. ரவி எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் ஒன்றுமே பேசவில்லை.
நான்கு மணிக்கு வெளியில் சென்று பார்த்தபோது, காரிடோரில் கிடந்த சோஃபாவில் கால்களை அகற்றி வைத்துக்கொண்டு நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். முடிகள் எல்லாம் களைந்து பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தார். அவர் கிடந்த காட்சியைப் பார்த்து பயந்த செல்வமும் முருகனும் ரூமிற்குள் சென்று கதவை அடைப்பதற்குள் ரவி வேகமாக எழுந்து வந்து கதவை தள்ளி ரூமிற்குள் நுழைந்தார்.

ரூமிற்குள் நுழைந்த ரவியைப் பார்த்து பயந்திருந்த செல்வத்தையும் முருகனையும் பெட்டில் தள்ளிவிட்டு, ரவி பேச ஆரம்பித்தார்.

'நான் அந்தப் பேயைப் புடிச்சிட்டேன். இதா இங்க இருக்குது' என்று சொல்லி அவரது ஃபோனைக் காண்பித்தார்.

அவர்கள் எதுவும் பேசாததால் ரவியே தொடர்ந்தார். 'அந்த சத்தம் வந்தது ஒரு அபாண்டண்ட் மேன்ஹோலில் இருந்து. அதுல இருந்த பம்ப்பில் டைமர் செட் செய்யப்பட்டிருந்துச்சு. அது ஒரு இரிகேஷன் பம்ப். ராத்திரி நேரங்களில், ரெசிடென்ஷியல் ஏரியாக்களில் தண்ணீர் அதிகமாக தேவை இருக்காது என்ற கான்செப்ட்ல, இந்த பம்ப் 12 மணிக்கு ஸ்டார்ட் ஆக செட் செஞ்சிருக்காங்க. அது மட்டுமில்லாம ரெண்டு பக்கமும் ஆட்டோமேடிக் கட் ஆஃப் சென்ஸாரும் இருக்கு. அதான் ஸ்டார்ட் ஆயி சில நொடிகளிலேயே அது ஆஃப் ஆகிவிடுகிறது. பார்க்கில் உள்ள தொட்டியை நிரப்ப இதைப் பயன்படுத்தி இருக்காங்க'
'
'இரிகேஷன் டிப்பார்ட்மெண்ட்ல இருக்கற என் ப்ரெண்ட் மூலமா பழைய நெட்வொர்க் லே-அவுட்டை நேத்தே வாங்கிப் பாத்துட்டேன். அப்பவே எனக்கு விஷயம் புரிஞ்சிருச்சு' வித்தியாசமான சத்தங்கள் எப்படி வருதுன்னு கண்டுபிடிக்கவே அந்த மேன்ஹோலை நைட் ஓபன் பண்ணுனேன்'

'இந்த பம்பை கழட்ட முடியாம, அப்படியே அங்க கெடந்த இலை தழைகளை அள்ளிப்போட்டு மூடிட்டு போயிருக்காங்க. அதுதான் அப்படி சத்தம். ரொம்ப நாளா லூப்ரிகன்ட் யூஸ் பண்ணாம இருக்கறதால, அதுல ஒரு பார்ட் ஒரசற சத்தம் கொழந்த அழுகற சத்தம் மாதிரி கேட்டுச்சு. நான் அதோட பவர் சப்ளையை கட் பண்ணிட்டேன். இனி அந்த பம்ப் வொர்க் ஆகாது. சத்தமும் இருக்காது'

'அப்படின்னா, அந்த வாசம்' என்றார் செல்வம்

'அது ராத்திரி மட்டும் இல்ல. பகல்லயும் இருக்கும். ஒரு மரத்துல இருந்து வர வாசம் அது , அந்த மரத்தோட பேர் கேலரி பியர்'

'நான் சொன்னா எல்லா விஷயத்தையும் என்னோட ஸ்மார்ட் ஃபோன்ல ரெக்கார்ட் பண்ணியிருக்கேன். நீங்க பாத்தீங்கன்னா உங்களுக்கே அது புரியும்'

அந்த ஃபோனில் இருந்த வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோக்களைப் பார்த்தபோது ரவி சொன்ன விஷயங்கள் அவர்களுக்கு தெளிவாகின.

'உனக்கு ஏன்யா பேய் மேல நம்பிக்கை இல்லாமப் போச்சு' என்று கேட்டார் முருகன்.

'எப்படிப் பாத்தாலும் பேய் லாஜிக் எனக்கு சரியா தெரியல. ஒரு பேய் யாரையாவது கொன்னா அவங்க பேயா வந்து அந்தப் பேயை பழிவாங்க மாட்டாங்களா. அதுமட்டுமில்ல, மனுஷங்க மட்டும்தான் பேயா வரணுமா, ஏன் நாம டெய்லி சாப்படற கோழி, ஆடு இதெல்லாம் பேயா வந்து நம்மள பழி வாங்காதா?. கொசு, ஈ, எறும்பு இப்படி எத்தனையோ உயிர்களை நாம கொல்றோம்.'

'நீ சொல்றது உண்மதான்யா, நைட் இருட்டுல தனியா இருக்கும்போது யாருக்குமே கொஞ்சம் பயம் இருக்கும்யா' என்றார் செல்வம்.

'சரி, அத விடுங்க. அந்த தெலுங்குப் பையன் இறந்ததுல இருந்து த்ரீ-பி கேம்ப்ல ஒரு ப்ளாக்கே காலியா இருக்காம். கேம்ப் பாஸ் எனக்கு ஒரு ஆஃபர் குடுத்திருக்கார். அந்த ப்ளாக்ல நான் ஸ்டே பண்றதா இருந்தா, நம்ம ப்ராஜெக்ட் முடியற வரைக்கும் ஃப்ரீயா அங்க தங்கிக்கலாமாம், ஃபுட்டும் ஃப்ரீயாம்.'

'சரின்னு சொல்லிருப்பியே' என்றார் முருகன்.

'அந்தப் பையன் தூக்குப் போட்டு இறந்த ரூமிலேயே தங்கிக்கறேன்னு சொல்லிருக்கேன். வரீங்களா நீங்க?

பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியுமா?

பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியுமா?

//மு.கு: இந்தி நடிகர் வருண் ப்ருதி, சில வாரங்களுக்கு முன்பு "God Sent Me For You..." என்ற தலைப்பில் பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியுமா என்ற கேள்வியோடு ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்தபொழுது எனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது. அச்சம்பவம் இந்தக் காணொளியிலிருந்து சற்றே வேறுபட்டாலும், நல்ல நோக்கத்தில் அவர் செய்யும் இந்த செயலை விமர்சிக்கும் எண்ணத்தில் இதை எழுதவில்லை. //

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா வந்துவிட்டு அபு தாபி திரும்புவதற்கு முதல்நாள் சில பொருட்கள் வாங்குவதற்காக மாமாவுடன் (மாமனாருடன்) பொள்ளாச்சி சென்றிருந்தேன்.

பொதுவாக, இந்தியா சொல்பவர்களிடம் அங்கிருந்து வாங்கி வருவதற்கு ஒரு பெரிய பட்டியலே இருக்கும். மருந்து மாத்திரைகள், பாத்திரங்கள், பலகாரங்கள், இங்கு கிடைக்காத பலசரக்கு சாமான்கள் மற்றும் சில. பெரும்பாலானவற்றை ஏற்கனவே வாங்கிவிட்டாலும், ஊசிப் போகக்கூடியப் பொருட்களை மட்டும் முதல் நாள் வாங்குவது வழக்கம்.

கோட்டூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் பத்ரகாளியம்மன் கோயில் வழியாக சென்று, மரப்பேட்டை பூங்காவிற்கும் சந்தைக்கும் இடையில் உள்ள ஒரு பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு நடந்தோம். கடைத்தெருக்களில் பார்கிங் செய்ய எனக்கு பயம் என்பதால் அங்கு காரை நிறுத்திவிட்டு நடந்து போவதுதான் வழக்கம்.

ந்யூ ஸ்கீம் ரோட்டில் உள்ள ஒரு கடையில் சூப் குடித்துவிட்டு கௌரி கிருஷ்ணா சென்று பலகாரங்கள் வாங்கினோம். பலகாரங்களை சிறிய சிறிய மஞ்சள் பைகளில் இட்டுத் தருவதால், ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக அங்கேயே பிரித்து வாங்கிவிடுவோம்.

கௌரி கிருஷ்ணாவிலிருந்து கண்ணன் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோருக்கு நடந்தோம், கண்ணனில் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்தபோது, ஒரு முதியவர் "தம்பி, முறுக்கு வேணுங்களா" என்றார்.
அறுபத்தைந்து, எழுபது வயதிருக்கும். நல்ல உயரம், மெலிந்த உருவம். காலில் நீல நிறத்தில் ரப்பர் செருப்புகள். இடது தோளில் ஒரு துணிப்பை, வலது கையில் ஒரு பை.

"வேண்டாங்க அய்யா. இப்பத்தான் வாங்கிட்டு வந்தோம்"

"வீட்டுல செஞ்சதுங்க. ஒரு பாக்கெட் இருபது ரூவாதான்"

அந்த வயதிலும் உழைத்து வாழ்கிறாரே என்று எண்ணிய நான் மாமாவிடம், "மாமா, ஒரு பாக்கெட் வாங்கிக்கலாம்" என்றேன்.

மாமாவும் சரி என்று சொன்னாதால், "ஒரு பாக்கெட் குடுங்க" என்றோம்.

"தம்பி மூணு பாக்கெட் வாங்கிக்கோங்க. அம்பது ரூவாதான்" என்றார்.

"வேண்டாங்கய்யா, ஒரு பாக்கெட்டே அதிகம். நீங்க சொன்னதாலதான் வாங்குறோம்"

ஒரு பாக்கெட் வாங்கிக்கொண்டு நூறு ரூபாய் கொடுத்தேன். மீதிப் பணம் கொடுத்தவரிடம், "வேண்டாம் வெச்சுக்கோங்க" என்றேன்.

அவர் மறுத்துவிட்டு, பணத்தை திரும்பத் தந்தார்.

"வாங்கிக்கோங்க பெரியவரே, தம்பி ஆசையோட குடுக்கிறார் இல்ல" என்றார் மாமாவும். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

என்ன செய்வேதேன்று தெரியாமல். "சரி, பாக்கி பணத்துக்கும் முறுக்கு குடுங்க" என்றேன்.

"தம்பி இவ்வளவு வாங்கி என்ன பண்றது" என்றார் மாமா.

"விடுங்க மாமா, ஆஃபிஸுக்குக் கொண்டு போனா பத்து நிமிஷத்துல காலியாயிரும்"

ஏழு பாக்கெட் தந்த அந்த முதியவரிடம், "மூணு அம்பது ரூபான்னா, நூறு ரூபாய்க்கு ஆறு பாக்கெட் தானங்கய்யா" என்றேன்.

"இல்ல தம்பி, அம்பது ரூவாக்கு மூணு, நூறு ரூவாக்கு ஏலு" என்றார்

இன்னொரு நூறு ரூபாய் கொடுத்து, "இன்னும் ஏழு பாக்கெட் குடுங்க" என்றேன்.

அன்று முதல் அவரும் என்னுடைய ரோல் மாடல்களில் ஒருவர்...
**********
http://www.youtube.com/watch?v=GT4iEH9viCs

Saturday, September 20, 2014

பணம்

பணம் 

கத்தாரில் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் சர்வே ஹெல்ப்பராக வேலை செய்து கொண்டிருந்தார் சிதம்பரம். 

எப்போதும் கலகலப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்யும் சிதம்பரம் அன்று சற்றே சோகமாக இருப்பதைப் பார்த்து, அவரது சர்வேயர் அக்தர், அவரிடம் 'க்யா ஹுவா சிதம்பரம் பாய், ஆஜ் ஆப் பில்குல் பரிஷான் லக்ரஹேன் //என்ன ஆச்சு சிதம்பரம், இன்னைக்கு இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்//' என்று கேட்டார் 

'நஹி ஸாப்'

'ஜூட் மத் போலியே, குச் தோ ஹே. பத்தாயியே க்யா ஹுவா //பொய் சொல்லாதீங்க, என்னமோ நடந்திருக்கு, சொல்லுங்க என்ன ஆச்சுன்னு//' 

'மேரா பேட்டி ஸ்கூல் ஃபீஸ் ஃபைவ் தவுசண்ட் ருப்பியா, மேரா பீவிஸே ஏக் தீஃப் பகட்லியா' 

'ஆப்கி பீவிஸே, கிஸ்ஸி பிக்பாக்கெட்னே பைசா லூட்லியா? //உங்க மனைவியிடம் இருந்து பிக் பாக்கெட் ஒருத்தன் பணம் திருடிவிட்டானா?//' 
'ஆன் (ஹான்) ஸாப்'

'கர் பேஜ்னேக்கேலியே அபி ஆப்கேபாஸ் பைசா ஹே க்யா //வீட்டிற்கு பணம் அனுப்புவதற்கு உங்களிடம் இப்போது பணம் இருக்கிறதா//'

'நஹி ஸாப். ஆஜ் ஹெட் ஆஃபீஸ் ஜாவுங்க. சேலரி அட்வான்ஸ் ஃபைவ் ஹன்ரெட் ரியால் லேலுங்க//இல்ல சார், இன்று ஹெட் ஆஃபிஸ் சென்று ஐநூறு ரியால் அட்வான்ஸ் வாங்கப் போகிறேன்//'

சிதம்பரத்துக்கு சம்பளமே வெறும் ஆயிரம் ரியால்தான். ஓவர்டைம் சேர்த்து ஆயிரத்து நானுறு ரியால் வரைக் கிடைக்கும்.

'முஜ்ஸே லேலீஜியே, சேலரி மில்னேக்கே பாத் வாபஸ் கர்லீஜியே /என்னிடம் வாங்கிக் கொள்ளுங்கள், சம்பளம் கிடைத்த பிறகு திருப்பித் தாருங்கள்//'

பொதுவாக தம்மால் யாருக்கும் சிரமம் ஏற்படக்கூடாது என்று நினைக்கும் சிதம்பரம் அதை மறுத்துவிட்டு, சீக்கிரம் செல்வதற்கு மட்டும் அனுமதி கேட்டார்.

அன்று வியாழக்கிழமை, ஹெட் ஆஃ பிஸ் இரண்டு மணிவரைதான் இருக்கும் என்பதால் அக்தர் வேறொரு எஞ்சினியரிடம் பேசி அவருடன் சிதம்பரம் தோஹா செல்வதற்கு ஏற்பாடு செய்தார். இவர்கள் வேலை செய்வதோ, தோஹாவிலிருந்து சுமார் எழுபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஸ் லஃபான் சிட்டியில். 

சிதம்பரம் 12 மணிக்கெல்லாம் அந்த எஞ்சினியருடன் தோஹா கிளம்பிவிட்டார். அவர், இவரை க்யூடெல் சிக்னல் அருகே இறக்கிவிட்டு சென்றார். அங்கிருந்து ஸாஃபிடெல் வழியாக நடந்தார் சிதம்பரம். 

ஸாஃபிடெல் தோஹா பேலஸ் ஹோட்டல், தற்போது மெர்க்யூர் க்ராண்ட் ஹோட்டல் என்று பெயர் மாற்றப்பட்டிருந்தாலும், அந்த இடம் ஸாஃபிடெல் என்றே இன்றும் பெரும்பாலானோரால் அழைக்கபடுகிறது. 

ஃபுட்பாத்தில் நடந்து செல்லும்போது, ஒரு ஸ்ட்ரீட் லைட் பெடஸ்டல் அருகே கிடந்த பெண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸ் அவர் கண்ணில் பட்டது. அதை எடுத்துத் திறந்து பார்த்தால் முழுவதும் ஐநூறு ரியால்கள் நோட்டுக்கள். 

அதைப் பார்த்தவுடன் சிதம்பரத்துக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. போலிஸிடம் கொண்டுபோய் கொடுப்பதற்கு தற்போது நேரமில்லை, போலிஸ் ஸ்டேஷன் சென்று பழக்கமில்லாததால் பயம் வேறு. தாமதம் ஆனால், பர்ஸை தொலைத்தவரின் மனநிலை எப்படியிருக்கும் என்று எண்ணி, பர்ஸில் அவரது அட்ரஸ் இருக்கிறதா என்று பார்த்தார். அந்தப் பெண்ணின் போட்டோவை மறைத்திருந்த இதழின் பின்புறத்தில் அவரது பிசினெஸ் கார்ட் இருப்பதைப் பார்த்தார். 

'அவருக்கு போன் செய்து, மேடம், யூ பர்ஸ், ஐ கெட். ஸாஃபிடெல். ப்ளீஸ் யூ கம்' என்றார். 
அந்தப் பெண் அழுதுகொண்டே என்னென்னமோ ஆங்கிலத்தில் சொன்னார். தேங்க்ஸ் என்பதைத் தவிர வேறொன்றும் சிதம்பரத்துக்குப் புரியவில்லை. "ப்ளீஸ் யூ கம் குயிக்' என்று மட்டும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார் சிதம்பரம் . 

சிறுது நேரத்தில் அந்தப் பெண் அங்கு வந்தார். அவருடைய ஃபோட்டோ பர்ஸில் இருந்ததால் எதிரே இருந்த சாலையோரப் பார்க்கிங்கில் அவர் காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தபோதே, எளிதில் அடையாளம் கண்டு அவரிடம் சென்றார்.

'மேடம், ஐ கால் யூ. பர்ஸ்' என்று சொல்லி அவரிடம் பர்ஸைக் கொடுத்தார். 
கண்ணீர்மல்க சிதம்பரத்தை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டார் அந்தப் பெண். 
'தேங்க் யூ சோ மச்' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசினார். 

'வேகமாக என் மகன்களுடன் ரோட்டைக் கடந்த போது, திறந்திருந்த பேகில் இருந்து பர்ஸ் கீழே விழுந்துவிட்டது. நான் உடனே அதைப் பார்க்கவில்லை. வீட்டிற்கு சென்ற பிறகுதான் பார்த்தேன். தேடித் பார்த்து கிடைக்காததால் போலிஸில் கம்ப்ளைன்ட் செய்துவிட்டு வரும்போதுதான் நீங்கள் என்னை அழைத்தீர்கள். எனக்கும் குழந்தைகளுக்கும் டிக்கெட் எடுப்பதற்காகவும், எனது கணவரின் மருத்துவ செலவிற்காகவும் இதில் முப்பதாயிரம் ரியால் வைத்திருந்தேன். எனது கணவர் இங்குதான் எஞ்சினியராக வேலை செய்துகொண்டிருந்தார். கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் ருமானியா சென்றுவிட்டார். இரண்டு நாட்களில் நாங்களும் புக்கரெஸ்ட் செல்கிறோம்' என்று கண்ணீருடன் நிறுத்தாமல் ஆங்கிலத்தில் சொன்னார். 

அவர் சொன்னது முழுவதும் புரியவில்லை என்றாலும், ஓரளவிற்கு புரிந்துகொண்ட சிதம்பரம், 'நோ ப்ராப்ளம் மேடம். காட் ஹெல்ப் யூ' என்றார்.

சிதம்பரத்தின் பெயரைக் கேட்டுவிட்டு விலாசத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு தன்னுடைய பெயர் அனா ஜேனபெலிஸ் என்று சொல்லி அவருடைய பிசினெஸ் கார்டைக் கொடுத்தார். 

'ப்ளீஸ் செக் மணி' என்றார் சிதம்பரம் 

'ஐ டிரஸ்ட் யூ வெரி மச். நோ நீட் டு கவுன்ட் இட்'

'நோ மேடம், அதர் பீப்ல் டேக். ஐ டோன்ட் நோ. ப்ளீஸ் செக் //வேறு யாராவது எடுத்திருந்தாலோ//'
மனமின்றி அதை எண்ணிப் பார்த்துவிட்டு சரியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு சிதம்பரத்திற்கு ஐநூறு ரியால் கொடுத்தார்.

கைகளை பின்னால் கொண்டுபோய் மறைத்துக் கொண்டு வாங்க மறுத்தார் சிதம்பரம். 
அவரோ விடாமல் இவரது பாக்கெட்டில் வைக்க முயன்றார். சிதம்பரம் இடது கையால் பாக்கெட்டைப் பிடித்துக் கொண்டு, "நோ மேடம். திஸ் யூ மணி. யூ ஹஸ்பண்ட் ஹாஸ்ப்பிட்டல். ப்ளீஸ் ஐ நோ வான்ட் மேடம்' என்று சொல்லி வாங்க மறுத்தார். 

அவர் மீண்டும் மீண்டும் முயன்றும், சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். 
அதற்குள் மணி ஒன்றரை ஆகிவிட்டது. மணியைப் பார்த்துவிட்டு, "ஐ லேட். ஐ கோ ஹெட் ஆஃபிஸ்' என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தார் சிதம்பரம்.

அவர் செல்வதை வைத்தகண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார் அந்த ருமானியப் பெண். 

பிகு: இதுபோன்ற சம்பவங்கள் இங்கு மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இது, சமீபத்தில் அபு தாபியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டது

Tuesday, August 12, 2014

கல்யாணம் ஆகாமல் காத்திருக்கும் பெண்ணின் டைரியிலிருந்து சில பக்கங்கள்


ஜூன் 4, 2014

இன்னைக்கு பொண்ணு பாக்க வந்த பையனை எனக்கு சுத்தமா புடிக்கல. ரெண்டு பேருக்கும் பொருத்தமே இல்ல. ஐயோ, இந்தப் பையனைப் போய் 'கட்டிக்கோ கட்டிக்கோ'ன்னு ஒத்தக்கால்ல நிக்கறாங்களே அப்பாவும் அம்மாவும். எப்படியாவது எவன் தலையிலயாவது கட்டி வெச்சு, அவங்க தலைல இருக்கற பாரத்த இறக்கி வெச்ச்ச்ச்சறணும். அப்பாங்களுக்கு பெண் குழந்தைகளை உண்மைல புடிக்குதா இல்லையாங்கறது கல்யாணம் ஆகாமல் பொண்ணுங்க வீட்டுல இருக்கும்போதுதான் தெரியும்.

ஜூலை 6, 2014

எங்க காலேஜ் ஓல்ட் ஸ்டுடென்ட் சந்திப்புக்கு சென்னை போயிட்டு இன்னைக்கு காலைலதான் வந்தேன். நேத்தும், முந்தா நேத்தும் டைரி எழுதல. ரெண்டையும் சேத்து இன்னைக்கே எழுதிருவோம். ரொம்ப முக்கியம்!

முந்தா நேத்து பஸ்சுல போகும்போது, அனன்யாவுக்கு சென்னைல கெடச்ச மாதிரி எனக்கும் அங்க ஒரு ஷர்வானந்த் கிடைப்பான்னு நைட்டெல்லாம் கனவு.. 'ஒவ்வொரு இடத்துக்கும் என்னக் கூட்டிட்டுப் போறான். நான் கடைசிவர சந்தேகத்தோடயே அவனப் பாக்கறேன். அப்படியே எங்கேயும் எப்போதும் மூவி கனவுக்குள்ள ஓடீட்டு இருந்துச்சு. ச்சே முன்னாலேயே சென்னைக்கு வந்திருந்தா எப்பவே எனக்கு கல்யாணம் ஆயிருக்கும்

காலைல கோயம்பேடு பஸ்ஸ்டாண்டல எறங்கி அரைமணிநேரம் நின்னுருப்பேன். நின்னு நின்னு காலு வலிச்சதுதான் மிச்சம். டீசண்டான ஒரு பையன்கூட சிக்கல, அதான் என்ன மைண்ட் பண்ணல. எங்க எல்லாம் சோடியாத்தான திரியுதுங்க. சோடி இல்லாம இருக்கறதுங்க ஒரு கையில பீடியும், இன்னொரு கைல அழுக்கு லுங்கிய தொடைக்கு மேல தூக்கிப் பிடிச்சுட்டும் நிக்குதுங்க.

சந்திப்புல, இவளுங்க அலப்பர தாங்க முடியல. ஒருதடவ இன்ட்ரட்யூஸ் பண்ணுனா பத்தாதா, போகும்போது வரும்போதெல்லாம் இதுதான் என் ஹஸ்பண்ட், இதுதான் என் ஹஸ்பண்ட்ன்னு பத்து பதனஞ்சு வாட்டி சொல்லியிருப்பாளுங்க. நல்லவேள எனக்கு கம்பெனிக்கு நாலஞ்சு பொண்ணுக இன்னும் கல்யாணம் ஆகாம இருந்தாளுங்க. அதுல வலிக்காத மாதிரி நடிச்சதுல என்னோடதுதான் பெஸ்ட் பெர்பாஃமன்ஸ்.

ஜூலை 23, 2014

இந்த ஃபேஸ்புக்ல இருக்கற ஆம்பளைங்க அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்களே.

மரியாதை, அன்பு, பாசம், அடக்கம், பெண்களை மதித்தல், முற்போக்கு சிந்தனை, பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தல் எட்சட்ரா, எட்சட்ரா இப்படி எல்லாமே இவங்ககிட்ட அதிகமா இருக்குது. இவங்களப் பாக்கும்போதெல்லாம், மீனப் புடிக்க கரைல பவ்யமா நின்னுட்டு இருக்குமே கொக்கு. அதுதான் ஞாபகத்துக்கு வந்து தொலையுது. ஆனா ஒன்னு, இவங்க எல்லாம் உசுப்பேத்தி உசுப்பேத்தி கொஞ்சம் கொஞ்சமா என்ன ஃபேஸ்புக்ல புரட்சிப் பொண்ணா நிரந்தரமா நடிக்க விட்டுட்டாங்க.

இதுல ஃபேஸ்புக் மன்மதக் குஞ்சு ஒன்னு இருக்குது. அவன் போடற போஸ்டுகளப் படிச்சா, ஹ்ரித்திக் ரோஷனுக்கு அப்புறம் இவர் பின்னாடிதான் பொண்ணுங்க க்யூல நிக்கறாங்கங்கற மாதிரி இருக்கும். பொண்ணுங்கள கரெக்ட் பண்ண இது ஒருவகையான டேக்டிக்ஸாம்.

ஜூலை 25, 2014

இன்னைக்கு ஃப்ரைடே. காலைல அம்மாகூட கோயிலுக்குப் போனேன். ஐயர் சும்மா இருக்காம அம்மாட்ட, 1008 வாட்டி ஸ்ரீராம ஜெயம் எழுதச் சொல்லுங்கோன்னு சொல்ல. அது ஒண்ணுதான் கொறங்கற மாதிரி வீட்டுக்கு வந்ததுல இருந்து சும்மா நை நைன்னுட்டு எழுத வெச்சிருச்சு.

இந்தக் கடவுள்களெல்லாம் ஏன்தான் இப்படி லடைட்டா இருக்காங்களோ? Luddite - அப்பறமா ஸ்பெல்லிங் மறந்துருவேன். ஃபேஸ்புக் பீட்டர் ஒன்னு இந்த வார்த்தைய சொல்லிக் குடுத்துச்சு. புது டெக்னாலஜிய புடிக்காம ஏத்துக்காம இருக்கறவங்களாம்.

எக்ஸல்ல =REPT("ஸ்ரீராம ஜெயம் ",1008) இப்படிப்போட்ட ஆயிரத்தெட்டு வாட்டி வரப்போகுது. அத அப்புறமா வேர்ட்ல காப்பி பண்ணி ப்ரிண்ட் எடுத்தா எவ்வளவு நீட்டா அழகா இருக்கும். ப்ராடக்டப் பாக்காம ப்ராசெஸ்ஸப் பாக்கறதே பொழப்பாப் போச்சு இந்தக் கடவுளுக்கு. ப்ராடக்டப் பாக்கற ஆளா இருந்தா, எனக்கு சட்டுபுட்டுன்னு ஷாட்கட்ல ஒரு ப்ராடக்ட்ட இந்நேரம் காமிச்சருக்கணுமே.

ஜூலை 30, 2014

சிலர்ட்ட இருந்து ஃபோன் வந்தா நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, இப்பெல்லாம் யார் ஃபோன் பண்ணுனாலும் வெறுப்பா இருக்கு. கல்யாணம் ஆயி புள்ள குட்டிங்களோட இருக்கற ஃப்ரெண்டுக ஃபோன் பண்ணி, புருஷன் இப்படி பண்றார், கொழந்த இப்படி பண்ணுதுன்னு எல்லாம் சொல்லும்போது என்ன வெறுப்பேத்த சொல்ற மாதிரியே இருக்குது. அதுல கடசியா ஒரு கேள்வி கேப்பாளுங்களே "இன்னும் மாப்பிள கெடைக்கலியான்னு' அப்படியே வெந்த புண்ணுல வேலப் பாச்சுன மாதிரி இருக்கும். மாப்பிள கெடச்சிருந்தா சொல்லமாட்டாங்களா?

இதுல இவளுங்க ஃபேஸ்புக்ல குடும்ப ஃபோட்டோ போடும்போது கரெக்டா என்ன டேக் வேற பண்ணிவிட்றாளுங்க.

ஆகஸ்ட் 15, 2014

மூட்அவுட். சீரியசா எழுதப் போறேன். இன்னைக்கு சுதந்திரதினம். எனக்கும் இன்னைக்கு எப்படியாவது சுதந்திரம் கெடச்சிரும்ன்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். ஏன்னா, மாப்பிள்ள போட்டோல பாத்தப்பவே எனக்கு பிடிச்சிருந்துச்சு. அந்தப் பையனுக்கும் என்னப் பிடிச்சிருந்ததாலதான் இன்னைக்கு பொண்ணு பாக்க வந்தாங்க.

எல்லாம் ஓகேதான், ஒரு விஷயம் மட்டும்தான். பையனுக்கு டெல்லில வேலை. அவங்க வீடு இங்க திருச்சிலதான் இருக்கு. அவங்க அம்மா கொஞ்சம்(!) முடியாதவங்களாம். படுத்த படுக்கையா இருக்காங்களாம். கல்யாணத்துக்கு அப்புறம் நான்தான் அவங்களுக்கு கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம். என்னத்த ஒத்தாசை? இவங்க பொண்ணு பாக்க வரல, ஃப்ரீயா ஒரு நர்ஸ் கெடைப்பாளான்னு பாக்க வந்திருக்காங்க.

அத்தன பேர் முன்னாடியும் முகத்துல அடிச்சமாதிரி சொன்னேன், என்னால முடியாது உங்களுக்கு தேவை பொண்ணு இல்ல ஒரு நர்ஸ். நீங்க வேற ஆளப் பாத்துக்கோங்க. எல்லோரும் என்னடா இவ இப்படி பேசறாளேன்னு நெனச்சிருப்பாங்க. அவங்க கொஞ்சம் என்னோட சைட்ல இருந்து யோசிச்சுப் பார்த்தா நான் சொன்னது சரின்னுபடும்.

நாட்கள் கரையக் கரைய, என்னோட டிமான்ட்களைக் குறைத்துக் கொண்டே வருகிறேன். இது எங்கபோய் முடியுமோ?

ஏதோ ஒரு பக்கத்தில் இருந்த பின்குறிப்பு:

இந்த டைரியின் பக்கங்கள் பேனா மையால் நனைந்து கொண்டிருப்பதைவிட அதிகமாக, என்னுடைய கண்ணீரால்தான் நனைந்து கொண்டிருக்கிறது

முத்தம் - மீண்டும் ஒரு காதல்

துபாயில் ஒலிக்கும் ஒரே தமிழ் எஃப்எம்மைக் கேட்டுக் கேட்டு போர் அடித்துவிட்டதால், மலையாளம் ரேடியோ சேனல்களைக் கேட்பதை பழக்கப்படுத்திக் கொண்டேன். அவற்றிலும் பெரும்பாலும் தமிழ் பாடல்கள் ஒலிக்கும்.

அன்றும் அப்படித்தான், "அடுத்து வரும் பாடல் அலைபாயுதே படத்திலிருந்து, ஸ்நேகிதனே ரகசிய ஸ்நேகிதனே" என்றார் வர்ணனையாளர். அந்தப் பாடலைக் கேட்டிருப்பது அனிதா என்றவுடன் மனது எங்கேயோ சென்று விட்டது.

அனிதா என்ற பெயருடைய மலையாளிகள் பலர் இருக்கிறார்கள். இந்தப் பாடலும் அப்படித்தான் பெரும்பாலோனோரால் விரும்பப்படும் பாடல். அந்த அனிதாவாக இருக்காது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு மீட்டிங்கில் இருந்தபோது ஒரு புது நம்பரில் இருந்து ஃபோன். பெரும்பாலும் இப்படி வரும் ஃபோன்கால்கள் ஏதாவது பேங்கிலிருந்து வரும் என்பதால் அழைப்பைத் துண்டித்தேன். மீண்டும் மீண்டும் கால் வரவே, எடுத்து டேபிலுக்கு கீழே குனிந்தவாறே, "ஐ'யம் இன் எ மீட்டிங், கால் மீ ஆஃப்டர் சம்டைம்" என்று சொல்லி எதிர்முனையிலிருந்து பதில் வரும் முன்னே ஃபோனை கட் பண்ணினேன்.

மதியம் மீண்டும் அதே நம்பரில் இருந்து கால் வந்தது. (இந்நேரம் அது அனிதாவின் கால்தான் என்று நீங்கள் யூகித்திருப்பீர்கள், ஆனால் அன்று அது அனிதாவின் நம்பராக இருக்கும் என்று எனக்கு தோணவே இல்லை).

"ஹலோ"

"ஐ டோன்ட் நீட் எனி ஃபினான்ஷியல் அசிஸ்டன்ஸ்"

"ஞான் அனிதயானு"

என் உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது

"ஹான்.. பற.. சுகமானோ"

"என்ன ஓர்மயுண்டல்லே, பாக்யம்"

(இனி வருவது அதற்குப் பிறகு நடந்த உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு)

"எப்படி என் நம்பர் கெடச்சது"

"இது பெரிய விஷயமா, உன் பேஸ்பபுக் அக்கௌன்ட்ல உன்னோட வெப்சைட் லிங்க் இருக்கே. வெப்சைட்லதான் உன்னோட அட்ரஸ்ஸை வெலாவாரியா போட்டிருக்கியே"

"க்லவர்..இங்க எப்ப வந்த?"

"ஒரு வாரம் ஆச்சு"

"ஹஸ்பண்ட் விசால வந்துருக்கியா?"

"இல்ல, டூரிஸ்ட் விசா, ரெண்டு மாசத்துக்கு"

"குழந்தை"

"ஹ்ம், ரெண்டு பேரும்தான் வந்திருக்கோம். நீ எப்படி இருக்க?"

"குட்"

"உன்னப் பாக்கணுமே, இன்னைக்கு ஈவ்னிங் பாக்கமுடியுமா?"

"எனக்கு ஆஃபிஸ் ஆறு மணிக்குத்தான் முடியும். நீ எங்க தங்கிருக்க?"

"கராமா. லூலு செண்டருக்கு பேக்ல"

"ஹஸ்பண்ட் எத்தன மணிக்கு வருவார்?. அவர் வந்ததுக்கு அப்புறம் வர்றேன்"

"அவர் வர லேட் ஆகும். ஸபீல் பார்க்குக்கு வா. அங்க மீட் பண்ணலாம்"

"ஏன்"

"வா, என்ன ஆச்சு?"
"சரி. ஆறரைக்கு அங்க இருப்பேன். கேட்-1. ஓகேவா?"

"சரி. அப்படின்னா ஈவ்னிங் பாப்போம். பை"

'கொஞ்சம் சீக்கிரமே வீட்டுக்குப் போய் மனைவியையும் குழந்தைகளையும் கூட்டிட்டு போலாமா?'. 'ஒருவேளை புடிக்கலன்னா' இப்படியான எண்ணங்கள் மனதில் ஓடின. கடைசியில் வீட்டில் சொல்லவேண்டாம், தனியாகவே போயிட்டு வரலாம் என்று முடிவு பண்ணினேன்.

ஆறு இருபதுக்கெல்லாம் அங்கு சென்றுவிட்டேன்; எனக்கு முன்பே அங்கு வந்திருந்த அனிதா, நான் காரிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்து என்னை நோக்கி வந்தார்.
"ஆள் டோட்டலா மாறீட்டயே"

லேசாக சிரித்துவிட்டு, "உன் குழந்தையக் கொண்டு வரலியா" என்றேன்.

"இல்ல, அவன பக்கத்து வீட்டுல விட்டுட்டு வந்திருக்கேன்"

"உனக்கு எப்படி இந்த பார்க் தெரியும்"

"இதுக்கு முன்னாடி அவர்கூட ரெண்டு தடவ வந்திருக்கேன். பக்கம்தான. டேக்சில அஞ்சு நிமிஷம்தான்"

"ஹ்ம்"

"வா உள்ள போய் எங்கயாவது உக்காருவோம்"

ஒரு மரத்திற்கு அருகே அமர்ந்தோம். கோடைகாலம் என்பதால் ஏழு மணிவரை நல்ல வெளிச்சம் இருக்கும்.
"மலையாளம் இன்னும் மறக்கலியா"

இல்லை என்பதுபோல தலையாட்டினேன்

"என்னத்தான் மறந்துட்ட"

"அனிதா, எல்லாம் முடிஞ்சு போச்சு. நாம இனி அதப் பத்தி பேசறதும் நினைக்கறதும் தப்பு"

"உனக்கு வேணும்னா, அது ஒரு வெளையாட்டா இருக்கும். நீ கல்யாணம் பண்ணி ரெண்டு வருஷத்துக்கு அப்புறம்தான் நான் கல்யாணம் பண்ணினேன். அந்த ரெண்டு வருஷம் நான் அனுபவிச்ச வேதனையெல்லாம் உனக்குத் தெரியாது"

"இப்ப அதப் பத்தி பேசி என்ன ஆகப் போகுது"

"என் மனசுல உள்ளதெல்லாம் வெளிய கொட்டணும்"

"எத்தனையோ முறை கொட்டியாச்சு.. இன்னும் என்ன?"

"சரி, விடு.. நீ சந்தோஷமா இருக்கியா"

"ம்"

"இல்ல, உன்னப் பாத்தா அப்படி தெரியல. ஸ்பீக் அவுட். ஏதா இருந்தாலும் சொல்லு"

"இல்ல.ஐ'யம் சோ ஹாப்பி"

"ஐ டோன்ட் திங் சோ"

"நோ, ஐ'யம்"

சிறிது மவுனத்திற்குப் பிறகு,

"நாம கடசியா மீட் பண்ணுனது எப்பன்னு ஞாபகம் இருக்கா?"

"என் கல்யாணம் முடிஞ்சு உங்க வீட்டுக்கு வந்தப்ப"

"அதுல்ல, தனியா மீட் பண்ணுனது"

"கோயம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன்"

"எங்கயுமே தனியா போகாத நான் உன்னப் பாக்க தொடர்ந்து ரெண்டு நாள் தனியா ட்ரைன்ல வந்தேன். நீ துபாய் கெளம்பறதுக்கு முன்னாடி"

"இட்ஸ் கெட்டிங் லேட். ஐ ஹேவ் டு லீவ் நவ்"

"உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா"

"பட், நாம அத மறக்கணும்"

"இந்த ஏழு வருஷத்துல என்னைக்காவது என்னோட ஞாபகம் வந்திருக்கா?"

"அனிதா, வாட் ஈஸ் திஸ்? லெட்ஸ் மூவ் ஆன்"

"உன்கூட பேசறதுக்கு முன்னால.... மை லைஃப் வாஸ் குட் பட் நவ்"

"வாட் டூ யூ மீன்?"

"பிகாஸ் யூ ஆர் அவாய்டிங் மீ. நீ மாறல."

"இல்ல அனிதா. ட்ரை டு அண்டர்ஸ்டேண்ட்"

"உனக்குத் தெரியுமா.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு உனக்கு காமிக்க நெனச்சேன். நீ என்னப் பாத்து பொறாமப் படணும்னெல்லாம் நெனச்சிருந்தேன். பட், யூ கீப் ஆன் அவாய்டிங் மீ"

"நான் எங்க உன்ன அவாய்ட் பண்றேன். நீ கூப்புட்ட உடனே வந்தேன் இல்லியா"

"பொய் சொல்லாத, நீ எப்படி படபடன்னு பேசுவே. இப்ப ஒரு வார்த்த பேச எவ்வளவு யோசிக்கற"

"அனிதா, ஐ திங் யூ ஆர் டிஸ்டர்ப்ட்"

"நோ. ஐ'யம் நாட். பட் யு ஆர் ஹர்ட்டிங் மீ"

"இதுக்குத்தான் உங்க ஹஸ்பண்ட் இருக்கறப்ப மீட் பண்ணலாம்ன்னு சொன்னேன்."

அனிதா ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார்.

"அனிதா, டைம் ஆச்சு நான் கெளம்பறேன்"

"போறியா, ஷேல் ஐ ஆஸ்க் யூ சம்திங்?"

"வாட்"

"நீ... நீ எனக்கு.. எனக்கு ஒரு... வில் யூ கிஸ் மீ?"

"இல்ல. ஐ கேன் அண்டர்ஸ்டேன்ட் யுவர் பீலிங்க்ஸ். பட், இது சரியா வராது. நம்ம ரெண்டு பேரோட லைஃபும் சந்தோஷமா போயிட்டு இருக்கு. கண்டிப்பா ரெண்டு பேரும் அப்பறமா ஃபீல் பண்ணுவோம்"

"என்னால முடியல"

"நான் கெளம்பறேன். இனி இங்க இருந்தா சரியா வராது. பை"

"ப்ளீஸ் போகாத"

அங்கிருந்து எழுந்து நடந்து பாதி தூரம் சென்று திரும்பி அனிதாவைப் பார்த்து, "இனி எனக்கு ஃபோன் பண்ணாத. பண்ணுனாலும் நான் எடுக்கமாட்டேன்?. குட்பை.. அப்புறம்... ஒரு விஷயம்.... ஐ லவ் யூ" என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தேன்.

காரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பிய சிறிது நேரத்தில் ஃபோன் ரிங் அடித்தது, ஃபோன் பின் சீட்டில், பேகில் இருந்தது. யார் என்று பார்க்காமல் ஸ்டீரிங்கில் இருந்த ப்ளூடூத் பட்டனை அமர்த்தி கால் அட்டென்ட் பண்ணினேன்.

"அப்பா, நான்... ஸ்கூல்ல... யாருக்குமே மிஸ் போடல. எனக்கு மட்டும் த்ரீ ஸ்டார் போட்டாங்களே.. மாலுக்கு கூட்டிட்டுப் போங்க. எனக்கு நீங்க பார்பி டால் வாங்கிக் குடுங்க."

"வெரி குட்... குட் கேள்.. அப்பா வந்து வாங்கித்தரேன்"

"அப்பா, உம்மா குடுக்கல"

"ம்ப்ச்ச்ச்"

பெண்ணாய் பிறந்திட....

இந்த எட்டு மாதத்தில் இதுதான் முதன்முறையாக தனியாக நடப்பது. மார்னிங் ஷிப்ட் ஈவ்னிங் ஷிப்ட் என்று ஒவ்வொரு வாரமும் மாறிமாறி வருவதால், மார்னிங் ஷிப்ட் உள்ளபோது மட்டும்தான் அவருடன் நடக்க வருவேன்.

அவர் தினமும் நடக்க செல்வார். ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் க்யூஎ/க்யூசி மேனேஜராக வேலை செய்கிறார். பொதுவாக ஆறு மணிக்கெல்லாம் அவருக்கு வேலை முடிந்துவிடும். நாளை இந்தியா செல்வதால், இன்று சில வேலைகளை முடிக்கவேண்டிய கட்டாயம். எப்படியும் வீட்டிற்கு வர பத்து மணி ஆகிவிடும் என்றார்.

இந்தியா கொண்டு செல்லவேண்டிய பொருட்களை எல்லாம் ஏற்கனவே பேக் செய்துவிட்டோம். வேற வேலை ஒன்றும் இல்லாததால், தனியாக இருப்பதுபோல் ஒரு எண்ணம். நடக்கலாம் என்று முடிவோடு, நாங்கள் தங்கியிருந்த அல்-குவைர் ஏரியாவில் சுல்தான் காபூஸ் ஸ்ட்ரீட் ஓரத்தில் உள்ள நடைபாதையில் நடக்க ஆரம்பித்தேன்.

அம்மா தனியாக இருக்கிறார் என்பதை உணர்ந்திருந்தாலும், தனிமை என்பது எவ்வளவு பெரிய வேதனை என்பதை இன்றுதான் முழுவதுமாக உணரமுடிந்தது. எட்டு மாதங்களுக்கு முன் நாங்கள் ஒமான் வந்தபொழுது அம்மாவின் கண்களில் கண்ணீர் மளமளவெனக் கொட்டியது. பத்து வருடங்களுக்கு முன்பு அப்பா இறந்தபொழுதுதான் அம்மா கடைசியாக அப்படி அழுதது.

ஒமான் வந்தபிறகு, இந்த எட்டு மாதம் போனதே தெரியவில்லை. முதல் பத்து நாட்கள் அம்மாவின் நியாபகம் வந்திருந்தாலும், அதற்குப் பிறகு மினிஸ்ட்ரி ஆஃப் ஹெல்த்தில் லைசன்ஸ் வாங்க, வேலைக்கு அப்ளை செய்வது என்று பிசியாக இருந்ததால் அம்மாவின் தனிமையைப் பற்றி சிந்திக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை.

அப்பா இறப்பதற்கு முன்னும், பின்னும் அம்மாதான் எனக்கு எல்லாம், என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட், ரோல் மாடெல், ஃபிளாஸஃபர் எல்லாமே அம்மாதான். எப்போதும் நமக்கு நல்லதே நினைக்கும் அம்மாவை பெஸ்ட் ஃப்ரெண்ட்டாக கிடைப்பது என்பது பாக்கியம்.

அப்பா இறந்த பிறகும் சொந்தக் காலில்தான் நிற்கவேண்டும் என்ற கொள்கையோடு இன்றுவரை வாழ்ந்து வருகிறார். அம்மாவின் குடும்ப சொத்துக்கள், அப்பாவின் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிசிபி பேங்கில் சீனியர் மேனேஜராக இருக்கிறார்.

அம்மா மற்றவர்களுக்கு உதவி செய்வது யாருக்கும் தெரியாது. என்னிடம்கூட சொல்லமாட்டார். நன்றி கடிதங்கள் வரும்போதுதான், அம்மா உதவி செய்துள்ளது எனக்குத் தெரியும்.

போன வாரமே, அம்மாவிற்கு ஒரு சால்வையும், செயினும், ஐஃபோனும் வாங்கி வைத்துள்ளேன். அம்மாவிற்கு நான் என்ன வாங்கிக் கொடுத்தாலும் சந்தோசம்தான். அம்மாவை எங்களுடன் இங்கே வந்துவிடச் சொன்னோம். அம்மா மறுத்துவிட்டார்.

அம்மாவை இந்தமுறை எப்படியும் விஆர்எஸ் வாங்கிவிடச் சொல்லவேண்டும். திரும்பி வருவதற்கு முன், வீட்டு வேலைக்கு ஒரு ஆள் வைத்துவிட்டுத்தான் வரவேண்டும் என்ற முடிவோடு இருந்தேன்.
---

வெள்ளிக்கிழமை காலை சென்னை வந்துவிட்டோம். அந்த நேரத்தில் திருச்சிக்கு ஃப்ளைட் இல்லாததால், அவரது கம்பெனியின் சென்னை ப்ராஞ்ச் திருச்சி செல்ல கார் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவருடைய வீடு ஸ்ரீரங்கத்தில், எங்களது வீடு இருப்பதோ கேகே நகர். காலையில் அவர் வீட்டிற்கு சென்று மதியம்போல அம்மாவைப் பார்க்க செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

திருச்சி நெருங்கியபோது, அவர் டிரைவரிடம் கேகே நகர் செல்ல வழி சொன்னார்.

'அத்தையைப் பாத்துட்டு அப்புறமா வீட்டுக்கு போலாம்' என்றார்.

கண்ணீரை அடக்கமுடியாமல் சரி என்று தலையாட்டினேன்.
காலிங் பெல் அடித்தபோது, கதவை திறந்தது அம்மா இல்லை. ஒரு சிறுமி 'வாங்க சார், வாங்க அக்கா' என்று சொல்ல, சோஃபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மேலும் இரண்டு சிறுமிகள் ஓடிவந்து 'வாங்க' என்றனர் சந்தோஷத்தோடு.

'அம்மா, அக்காவும் சாரும் வந்துட்டாங்க' என்று அவர்கள் சத்தம்போட கிச்சனில் இருந்து வேகமாக ஹாலிற்கு வந்தார் அம்மா.

'வாங்க தம்பி, உக்காருங்க' என்று அம்மா சொல்லிமுடிப்பதற்குள் அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டேன்.

'இன்னைக்கு லீவ் எடுத்திருக்கேன். நானே மத்தியானம் வாக்குல ஸ்ரீரங்கம் வரலாம்ன்னு இருந்தேன் தம்பி' என்றார் அவரிடம்.

'இல்ல. அத்த உங்கள ஒரெட்டு பாத்துட்டு போயிருவோம்ன்னுதான்'

அதற்குள் 'அம்மா, யாரும்மா இவங்க?' என்றேன்

'நீங்க போய் ஒரு மாசத்துல, சின்னதா ஒரு குழந்தைகள் காப்பகம் நடத்த லைசன்ஸ் வாங்கிட்டேன். இப்ப மூணு பேர் இருக்காங்க. அடுத்த மாசம் இன்னும் மூணு பேர் வருவாங்க'

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
'போய், குளிச்சிட்டு வாங்க தம்பி. டிஃபன் செய்யறேன்' என்றார் அம்மா.

'வேண்டாம்மா, அங்க எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருக்காங்க. நான் குளிக்காம எதுவும் சாப்பிட மாட்டேன் இல்லியா. அவருக்கு மட்டும் டி போடுங்க. குடிச்சிட்டு கெளம்பறோம்' என்றேன்.

அம்மா டி போட கிச்சனுக்கு செல்ல, குழந்தைகளிடம் பேரைக் கேட்டேன்.

'உமா', 'ஜானகி', 'சத்யா" என்றனர் ஒவ்வொருவராக

'நான் யாருன்னு தெரியுமா?''

'கமலி அக்கா, வெளி நாட்டுல டாக்டரா இருக்கீங்க'

'ம்ம்ம்'

நாங்களும் படிச்சு உங்கள மாதிரியே டாக்டர் ஆயி, காசு இல்லாதவங்களுக்கு சும்மா மருந்து கொடுப்போம்'

Friday, March 21, 2014

ஃபேஸ்புக்....

//தோழர்களே,

ஒரு சிறிய பிரச்சனை. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள்,
மனிதன்//

இந்த ஸ்டேட்டஸ் போட்டு ஒருமணிநேரத்தில் வழக்கம் போல ஐநூறுக்கும் மேற்பட்ட லைக்குகள். லைக்குகளைவிட அதிகம் கமெண்ட்டுகள்.

//கவலைப்படாதீங்க, உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாத்தான் நடக்கும்//
//பாஸ், நாங்க இருக்கோம//
//என்ன ஆச்சு?//
//என்ன பிரச்சனை//

இப்படி நூற்றுக் கணக்கான கமெண்ட்டுகள், அவற்றில் பெரும்பாலானவை ஆறுதல் சொல்லும் விதமாக இருந்தன.

சில வருடங்களுக்கு முன்பு, சென்னை குண்டுவெடிப்பு பற்றி மனிதன் எழுதிய கட்டுரைதான் பலரையும் அவரைத் திரும்பிப் பார்க்கவைத்தது. 'மாணவி கற்பழிப்பு', 'பெண்ணுரிமை', 'குழந்தைத் தொழிலார்கள்', 'நலிந்தவர்கள்', 'மண்ணா? பொன்னா?', 'பெண் குழந்தை', 'பாலியல் தொழில்' போன்றவை அவர் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக்கை பொழுதுபோக்காக மட்டுமின்றி நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துபவர்களில் மனிதனும் ஒருவர். இன்று காலையிலிருந்து அவரது மனைவியையும் குழந்தைகளையும் காணவில்லை. மனைவியின் ஃபோனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு போட்டதுதான் அந்த ஸ்டேட்டஸ்.

டீ போட்டு குடித்துவிட்டு வெளியே சென்று தேடலாம் என்று நினைத்து செல்ஃபோனில் ஃபேஸ்புக் பார்த்தவாரே சமையலறைக்கு சென்ற மனிதன், அங்கு அவர் மனைவி எழுதிவைத்திருந்த கடிதத்தைப் பார்த்தார்.

//அன்புள்ள மனிதனுக்கு,

உங்களுக்கு மனைவியாக இருக்கத் தகுதியில்லாத நித்யா எழுதுவது.
நல்ல நோக்கத்தோடு எழுதிவரும் உங்களைப் பத்தி என்னுடைய சிற்றறிவுக்கு இதுவரை புரியாமல் இருந்தது. இதுக்காக எத்தனை தடவை உங்ககிட்ட சண்டை போட்டிருக்கிறேன்னு நெனைக்கும்போது வருத்தமா இருக்கு. ஆனா, நீங்களோ பெண்ணுரிமை பத்தி ஃபேஸ்புக்கில் எழுதும்போதும் என்னைப் பத்தி எவ்வளவு பெருமையா எழுதியிருக்கீங்க. அதையும் நீங்க காமிச்சதுக்கு அப்புறம்தான் இந்த மரமண்டைக்குப் புரிஞ்சது.

இந்த சமூகத்திற்காக சமூக வலைத்தளத்தில் நீங்க  கஷ்டப்பட்டுட்டு இருக்கும்போது நான் கேவலமான விஷயங்களுக்காக சண்டை போட்டதை நெனச்சா வருத்தமா இருக்கு.

நாட்டை எப்படியாவது திருத்த நினைக்கும் உங்ககிட்ட, 'பையனுக்கு என்னைக்காவது பாடம் சொல்லிக் குடுத்துருக்கீங்களா?' 'குழந்தை அழுதா எப்பவாவது தொட்டில் ஆட்டியிருக்கீங்களா?' 'பசங்களுக்கு உடம்புக்கு முடியலைன்னா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்கீங்களா?' 'எல்லாமே நானே தானே செய்யவேண்டியிருக்கு' 'குடும்ப விஷயங்களைப் பத்தி என்னைக்காவது கவலைப் பட்டிருக்கீங்களா?' இதுமாதிரி எத்தனையோ விஷயங்களை சொல்லி சண்டை போட்டிருக்கேனே. ச்சீ நான் எல்லாம் மனுஷியா?

உங்கள் கடமை உணர்வை முழுசா தெரிஞ்சிக்கிட்டது நான் மட்டும்தான். உங்க சந்தோஷத்தையும் துக்கத்தையும் நிர்ணயிக்கறது உங்க போஸ்டுகளுக்கு கிடைக்கும் லைக்குகள்தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். ராத்திரி தூக்கத்துல இருந்து எப்ப எந்திரிச்சாலும் நீங்க முதல்ல பாக்கறது உங்க போஸ்டுகளுக்கு வந்த லைக்களையும் கமெண்ட்டுகளையும்தான். எத்தனை முறை எந்திரிச்சாலும் சலிக்காம அதைப் பாப்பீங்களே. வேலை நேரத்தில்கூட பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை பாப்பீங்கன்னு உங்க கூட வேலை செஞ்சவங்க சொல்லிருக்காங்க. இதைப் புரிஞ்சுக்காம உங்க பழைய கம்பெனி உங்களை வேலையைவிட்டு தூக்கிட்டாங்களே.

எங்கப்பாகூட உங்களைப் பத்தி புரிஞ்சுக்காம, உங்களுக்காக இல்லாம நானும் புள்ளைகளும் கஷ்டப்படக் கூடாதுன்னு ஒரு செல்ஃபோன் கடை வெச்சுக் குடுத்தார். பாவம், உங்களால அதைக்கூட சரியாப் பாத்துக்க முடியல.

எங்க போனாலும், அங்க நடக்கற எந்த விஷயத்தை ஸ்டேட்டஸாப் போடாலாம்னு எப்பவுமே அதைப் பத்தியே நெனச்சிட்டு இருப்பீங்களே. திடீர் திடீர்ன்னு எதையோ நெனச்சு சிரிப்பீங்களே... சினிமாவுக்கு முதல் ஷோவுக்கே எப்படியாவது டிக்கெட் வாங்கிக் கூட்டிட்டுப் போவீங்களே. அதுவும் இண்டர்வல்ல மத்த குழந்தைகள் ஐஸ்க்ரீம் பாப்கார்ன் சாப்பிடறத நம்ம குழந்தைகள் ஏக்கமா பாத்தாலும் பரவாயில்லைன்னு படத்தப் பத்தி சுடச்சுட ஸ்டேட்டஸ் போடுவீங்களே.

வீட்டு வேலை செய்யறதுக்கிடையில டீவிக்கு முன்னாடி  நடந்து போகும்போது டீவில ஓடற சீரியலைப் பார்ப்பதை கிண்டல் செய்து எத்தனை ஸ்டேடஸ்கள் போட்டிருப்பீங்க... 24 மணிநேரமும் அறிவுப்பூர்வமான ஃபேஸ்புக்கைப் பாத்துட்டு இருக்கும் உங்களுக்கு சீரியல் பாப்பவங்களைப் பாத்தா சிரிப்புத்தான் வரும்னு  இந்த முட்டாளுக்குப் புரியாமப் போச்சே?

இந்த விஷயங்களைப் புரிஞ்சதுக்கு அப்புறம், நானும் குழந்தைகளும் இனி ஒரு நாளும் உங்களுக்குத் தொந்தரவா இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டோம். போறோம். இனிமே எங்க வாழ்க்கைல நீங்க இல்லை.

இப்படிக்கு,

முட்டாள் மனுஷி //

இதைப் படித்தவுடன் நித்யாவும் குழந்தைகளும் எங்க போயிருப்பார்கள் என்று மனிதனால் யூகிக்க முடிந்தது.

மாமனார் வீட்டிற்கு சென்று எவ்வளவோ கெஞ்சியும் நித்யா சம்மதிக்கவில்லை.

'ஏம்மா, மாப்பிள்ளை இவ்வளவு தூரம் சொல்றாரே. போயேன்மா' என்றனர் நித்யாவின் அப்பாவும் அம்மாவும்.

'உங்களுக்கு தெரியாதும்மா. அவர் திருந்தமாட்டார். தயவுசெஞ்சு என்னை விட்டிருங்க.'

'நித்யா, சொன்னா நம்பு.. நான் செஞ்சது தப்புன்னு புரிஞ்சிருச்சு.. பாரு நான் இந்த விஷயத்துல செஞ்ச தப்புகள் எதையும் மறைக்காம அப்படியே வெளிப்படையா ஒரு ஸ்டேட்டஸாப் போட்டிருக்கேன்'  என்றார் மனிதன்.

'ஐயோ' என்று கத்தியவாறே கைகள் இரண்டையும் தலையில் வைத்துக் கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தார் நித்யா.

Friday, January 31, 2014

மனிதர்களை விட.....

'அக்கா நாளைக்கு நம்ம பத்மாக்கு ரிசல்ட் இல்லியா' 

'ஆமாம் சரசு...  பதட்டமா இருக்கு'

'கவலப் படாதீங்கக்கா அதெல்லாம் பத்மா நல்ல மார்க் வாங்கி பாஸாயிரும்'

'இல்லம்மா பயமா இருக்கு'

'எனக்கு நல்ல நம்பிக்க இருக்குக்கா'

'ஏம்மா சரசு, நாளைக்கு உங்க போனுக்குத்தான் போன் பண்ணும். சுரேசுட்ட போன லைன் கெடக்கற எடத்துல வெக்க சொல்லும்மா'

'சரிக்கா, ஃபோன் வந்தா அப்பவே வந்து சொல்ல சொல்லியிருக்கேன்'

'சரிம்மா, மட்டக் காட்டைய்யா வர்றார், அப்பறமா பேசுவோம்'

ஈட்டியார் எஸ்டேட்டில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள் வள்ளியும் அவரது கணவர் ராமரும். சொந்த ஊரான திருநெல்வேலியிலிருந்து இங்கு வந்து  பல வருடங்கள் ஆகிவிட்டது. படிப்பறிவில்லாத இவர்களுடைய மகள் பத்மாவதி இந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

கணவன் மனைவி இருவருமே மிகவும் சாந்தமானவர்கள். யாரிடமும் எந்த வம்பு சண்டைக்கும் செல்லாத இவர்களை அந்த எஸ்டேட்டில் பிடிக்காதவர்கள் யாருமில்லை. வள்ளி பேசுகின்ற அளவிற்குக்கூட ராமர் யாரிடமும் பேசமாட்டார்.

அடுத்த நாள் வேலைக்குப் போவதற்கு முன், 'ரிசல்ட் வந்துச்சுன்னா உடனே போன் பண்ணுமா' என்று பலமுறை சொல்லிவிட்டு போனார் வள்ளி.

தோட்டத்தில் தேயிலை பறிக்கும்போது  'ஃபோன் எப்போது வரும், ரிசல்ட் என்ன ஆகும்' என்று வள்ளியின் மனது பதறிக் கொண்டே இருந்தது.

10 மணிக்கு சுரேஷ் ஓடிவருவதை பார்த்த சரஸ்வதியும், வள்ளியும் 'பத்மா பாஸாயிருச்சா' என்று கத்தினார்கள்.

'பத்மாக்காதான் வால்பாறை பஃஸ்ட்' என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் சுரேஷ்.

'மாரியம்மா இந்த வருஷம் உன் கோயில் திருவிலாவுக்கு கடா வெட்டறேன்' என்றார் வள்ளி கண்ணீர்மல்க.

'அக்கா, பாத்தீங்களா நான் சொல்லல'

கொழுந்து மூட்டையை இறக்கிக் கூட வைக்கமால் அப்படியே சரஸ்வதியை கட்டிப் பிடித்தார் வள்ளி.

'சரசு, நான் மட்டக் காட்டைய்யாட்ட அர நாள் லீவ் சொல்லிட்டு போட்டா. சந்தோஷத்துல கை கால் ஓடலம்மா'

'சரிக்கா.. நீங்க சொல்லிட்டுப் போங்க. நான் சாயங்காலம் வந்து பத்மாவ பாக்கறேன்'

சரஸ்வதியிடம் சொல்லிவிட்டு ஃபீல்ட் ஆஃபிஸர், ப்ரேம் ஆனந்திடம் சென்றார்.

'அய்யா, பொண்ணு பத்தாம் க்ளாஸ் பாஸ் ஆயிருச்சு. அதுதான் வால்பாறைலயே அதிக மார்க்காம்'

'சந்தோசம் வள்ளி. நல்லாப் படிப்பாளா?'

'நல்லாப் படிக்கும் அய்யா. எப்படியும் அத கலெக்டர் ஆக்கிரணுங்கறதுதான் எங்க ஆசை'

'அவ விருப்பத்தையும் கேளுங்க. எப்படியும் முதல்ல எஞ்சினியரிங் இல்லன்னா மெடிக்கல் படிக்கட்டும் அப்புறமா ஐஏஎஸ் எழுதட்டும்'

'சரிங்கய்யா, இன்னைக்கு அர நாள் லீவ் வேணும்'

'போங்க. வேணும்னா நாளைக்கும் சேத்து லீவ் எடுத்துக்கோங்க'

'வேண்டாய்யா, நாளான்னைக்கு ஞாயித்துக்கெலம லீவ் தான'

அவரிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் பத்மாவாதியும் வந்துவிட்டார். ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டார்.

'இரும்மா, அப்பாக்கு ஃபோன் பண்ணி செல்லுவோம். அப்பாக்கு இன்னைக்கு எங்க வேல'

'கவாத்து. ஏலாம் நம்பர் காடு. மாடசாமி அய்யா இருப்பார். அவருக்கு போன் பண்ணு'

'சார், எங்க அப்பா ராமர்ட்ட பேசணும். நான் பாஸாயிட்டேன்னு சொல்லணும் சார்'

'அப்படியா சந்தோஷம்மா. எவ்வளவு மார்க்?'

'496 மார்க் சார். நான்தான் வால்பறைல அதிக மார்க்'

'கங்க்ராஜூலேஷன்ஸ். இரும்மா அப்பாவ கூப்பிட்டு கொடுக்கிறேன்'

விஷயத்தைக் கேள்விப் பட்டு சந்தோஷப் பட்டாலும் அதை வெளிப்படுத்த தெரியவில்லை ராமருக்கு.

ஞாயிற்றுக் கிழமை புதிய கட்டிடம் ஒன்றை திறக்க வரும் கலெக்டர், முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப் போவதாக தலைமை ஆசிரியர் பத்மாவதியிடம் சொல்லியிருந்தார்.

'ஞாயித்துக் கெலம கலெக்டர் எனக்குப் பரிசு குடுக்கப் போறார். நீங்களும் அப்பாவும் கண்டிப்பா வரணும்'

'நாங்க மட்டுமில்ல, எங்க காட்டுல வேல செய்யற எல்லாரையும் வரச் சொல்லுவேன்' என்றார் வள்ளி சந்தோஷமாக.

பலரும் வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்து விட்டுப் போனார்கள். சில பத்திரிகை நிருபர்களும் வந்து பேட்டி எடுத்தார்கள்.

காவு கொடுக்க வளர்த்து வந்த ஆட்டைப் பார்த்து, 'என்னால உன்னக் கொல்லப் போறாங்களா. கவலப் படாத. பொங்கலுக்கு இன்னும் எட்டு மாசம் இருக்கு. அதுக்குள்ளே அம்மாட்ட ஏதாவது சொல்லி உன்னக் காப்பாத்திருவேன்' என்றார் பத்மாவதி. 

அடுத்த நாள் வள்ளி, அவருடன் வேலை செய்யும் அனைவரையும் பரிசு வழங்கும் விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ள, அவர்களும் வருவதாக சொன்னார்கள்.

அன்று இரவு வள்ளியிற்கு தூக்கம் வரவேயில்லை. ஒரு வழியாக 2 மணிக்கு தூங்கிய சிறிது நேரத்தில், பத்மா எழுந்து போவதை  வள்ளியால் உணர முடிந்தது.

'வெளிய சட்டில சுடு தண்ணி இருக்கு எடுத்துட்டுப் போம்மா, டார்ச் எடுத்துட்டுப் போ' என்றார் பாதி தூக்கத்திலேயே.

'சரிம்மா'.

அதற்குப் பிறகு காலை 5 மணிக்குத் தான் வள்ளியின் தூக்கம் கலைந்தது. அருகில் பத்மாவதி இல்லை. 'பத்மா பத்மா' என்று கூப்பிட்டுப் பார்த்து பதில் ஏதும் வராததால் சற்றே பதற்றமானார்.

'அய்யோ. என்னங்க எந்திரிங்க. நடுச்சாமத்துல பாத் ரூம் போக எந்திருச்சுப் போன பத்மாவக் காணோம்ங்க'

'வெளிய எங்கயாவது நிக்கும் பாரு' என்று சொல்லிவிட்டு திரும்பிப் படுத்தார்

'இல்லீங்க. பாத்துட்டேன் எங்கயும் இல்லீங்க'

'பக்கத்துல யார் வீட்டுக்காவது போயிருக்கும். வந்திரும்'

'5 மணிக்கு யார் வீட்டுக்குப் போகப் போவுது' என்று வள்ளி சொன்னவுடன்தான் ராமரும் பயப்பட ஆரம்பித்தார்.

வெளியே சென்று தேடினார்கள். வள்ளிப் பக்கத்து வீட்டுக்காரர்களையும் கூப்பிட, எல்லோருமாக சேர்ந்து தேடினார்கள். வள்ளியைக் காணவில்லை.

பழைய பாடி, புதுப் பாடி, கப்பப் பாடி ஆகியவை ஈட்டியாரில் இருக்கும் குடியிருப்புகளின் பெயர்கள். இதில் பழைய பாடியில் சில வீடுகளில் கழிப்பறை வீடோடு சேர்ந்து இருக்காது. சிறிது தொலைவில் சற்றேத் தாழ்வான பகுதியில் இருக்கும். தெரு விளக்குகளும் இருக்காது.

கழிவறைகள் இருந்த பகுதியில் சென்று தேடிய பொழுது, அருகில் ஒரு புதரில் டார்ச் லைட் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த உடனே ராமரும் வள்ளியும் அழ ஆரம்பித்தனர். மற்றவர்கள் 'ஒன்னும் ஆயிருக்காது, கீழ விழுந்திருக்கும். போய் பாப்போம்' என்று சமாதானப்படுத்தினர்.

அதற்குள் அங்கு ஓடி வந்த கிருஷ்ணன், 'அண்ணா, நம்ம பாப்பாவை புலி அடிச்சிருச்சு. புள்ள காம்ராட்ட கொண்டு போய் போட்டிருக்கு' என்றார் அழுதுகொண்டே.

கதறி அழுதவாறே, வள்ளியும் ராமரும் ஓடினார்கள். அவர்கள் மட்டுமில்லை அனைவரும் அந்த இடத்தை நோக்கி ஓடினர்.

புலி கடித்துக் கதறி வைத்திருந்த உடலைப் பார்த்ததும் மயங்கிவிட்டார் வள்ளி. ராமரோ, தரையில் உருண்டு புரண்டு அழுது கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் வால்பாறையிலிருந்து தாசில்தார், டீஎஸ்பி, எம்எல்ஏ என அனைவரும் அங்கு வந்தனர்.

உடலை எடுக்க எஸ்டேட் மக்கள் சம்மதிக்கவில்லை. இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று சொல்லி தர்ணா போராட்டம் செய்தனர்.

தோட்டத் தொழிலளர்கள் சங்கத் தலைவர் எம்எல்ஏவிடம், "சார், இதுவரைக்கும் நம்ம எஸ்டேட்டில் மட்டும் அஞ்சு பேரை கொன்னிருக்கு. புள்ள குட்டிக ராத்திரி வெளியவே வரமுடியல. இதுக்கு நீங்கதான் ஒரு முடிவு கட்டணும்" என்றார்.

'ஒரு மாசத்துக்குள்ள வனத்துறை புலியைப் புடிச்சு ஊட்டி இல்லன்னா மூணார்ல கொண்டு போய் விட்டுருவாங்க. இதுக்கு நான் கேரண்டி. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?'

'அங்க கொண்டு போய்விட்டா. இது அங்க மட்டும் சும்மா இருக்குமா. மனுஷ ரத்த ருசி கண்டிருச்சு. இனி சும்மா இருக்காது'

'இல்ல. குடியிருப்புப் பகுதிகளுக்கு வரமுடியாத மாதிரி ஏதாவது அடர்ந்த காட்டுப் பகுதிலதான் விடுவாங்க'

'சார், அதெல்லாம் வந்திரும். எங்காவது சூல கொண்டுபோய் விடச் சொல்லுங்க'

'அதை நான் பாத்துக்கறேன். உங்களுக்கு இனி பிரச்சனை வராது. எல்லாரும் கலைஞ்சு போங்க'

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, மக்கள் போராட்டத்தை கைவிட பத்மாவின் உடலை எடுத்துக் கொண்டு போனார்கள்.

சில நாட்களிலேயே இந்த விஷயத்தை அனைவரும் மறந்து போனார்கள். ராமரும் வள்ளியும் மட்டும் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்.

அன்று, வள்ளி ராமரிடம் 'என்னங்க, ரெண்டு மாசம் முன்னாடி மாரியப்பண்ணன் ஒரு வெஷத்தப் பத்தி சொன்னாரே. அத வாங்கிட்டு வரீங்களா' என்றார்

'என்ன ஆச்சு உனக்கு?'

'சொன்னாக் கேளுங்க. வாங்கிட்டு வாங்க'

அதிகம் பேசமால் சரி என்றார் ராமர்.

அடுத்த நாள் காலை, 'அக்கா, அக்கா' என்று அழைத்துக் கொண்டே வள்ளி வீட்டிற்கு வந்த சரஸ்வதி முற்றத்தில்  இருந்த வள்ளியைப் பார்த்து, 'இங்கதான் இருக்கீங்களா' என்றார்

'ம். சொல்லும்மா'

'அக்கா, அந்தப் புலி செத்திருச்சு. பத்தாம் பாத்தில செத்துக் கெடக்குதாம். அங்க ஒரே கூட்டமாம். டிவி ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்களாம்'

தலையை ஆட்டியவாறே மாரியம்மனுக்கு காவு கொடுக்க வளர்த்து வந்த ஆட்டைக் கட்டி வைந்திருந்த இடத்தைப் பார்த்தார். உடனே சரஸ்வதியும் அந்த இடத்தைப் பார்த்தார். ஆடு இல்லை.  அருகில் சென்ற சரஸ்வதிக்கு, அங்கு கிடந்த அறுபட்ட ஆட்டின் காதையும், காலி விஷ பாட்டிலையும் பார்த்ததும் விஷயம் புரிந்துவிட்டது.

வள்ளியிடம் வந்து, 'அக்கா, அந்தப் பாட்டிலை எங்கயாவது குழி தோண்டி பொதச்சிருவோம். இந்த இடத்தையும் சுத்தம் பண்ணிருவோம்' என்றார்.

'அடப்போ சரசு. என் புள்ளயே  போச்சு. இனி எங்கள போலிஸ் புடிச்சு ஜெயில்ல போட்டா என்ன ஆகப் போது?  இனியாவது எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க இல்ல. இனிமே யாரும் இதுமாதிரி புள்ளைய பலி கொடுத்துட்டு நரக வால்க்க வாலக் கூடாது'

அடுத்த நாள் சென்னையில் போராட்டம்,

போராட்டக்காரர்களில் ஒருவர் டிவிக்கு பேட்டி கொடுக்கிறார்.

'வன விலங்குகளைப் பற்றி வனத்துறையினருக்கோ அரசாங்கத்திற்கோ சிறிதும் அக்கறை இல்லை. அவைகளும் நம்மைப்போல இந்த பூமியில் வாழ  உரிமையுள்ள உயிரினங்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.  அழிந்துவரும் அரிய வகை புலி இனங்களில் ஒன்று நேற்று  வால்பாறையில் கொல்லப்பட்டுள்ளது. இதனைப் பற்றி தீவிர  விசாரணை நடத்தவேண்டும். இந்த கொடும் செயலை செய்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி  சரியான  தண்டனை  வாங்கிக் கொடுக்கவேண்டும்'