நானும் எங்க அக்காவும் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்த சம்பவம். எங்க அக்காவும் நானும் எப்படி ஒரே வகுப்புல படிச்சோங்கறது வேற ஒரு கதை. அத அப்புறம் சொல்றேன்
பொதுவா நாங்க ரெண்டு பேரும் ஒன்னாத்தான் உக்காந்து படிப்போம். ஆனா நைட் நான் சீக்கிரமே தூங்கப்போயிருவேன். அது மாதிரி ஒரு நாள் நான் தூங்கப்போயிட்டேன். அக்கா மட்டும் படிச்சிட்டு இருந்திருக்கு.
(கொஞ்சம் தூரத்து) சொந்தத்துல ஒரு மாமாவின் பையனான ராதா அண்ணனை (சின்ன வயசுல இருந்து அப்படியே கூப்பிட்டு பழகிட்டோம்) அக்கா லவ் பண்ணீட்டிருந்துச்சு . அது எனக்கு நல்லாவே தெரியும், ஆனா எனக்கு தெரியுங்கறது அவங்க ரெண்டு பேருக்கும் அப்ப தெரியாது. சரி கதைக்கு வருவோம்.
அக்கா, அன்னைக்கு ராதா அண்ணனுக்கு லவ் லெட்டெர் எழுதிட்டு இருந்திருக்கு...
அன்புள்ள ராதா அண்ணனுக்கு,
உங்கள் அன்பு ப்ரியா எழுதுவது.. ..............................
..............................
..............................
எழுதிட்டிருந்தபோது, அக்கா என்ன பண்ணுதுன்னு பாக்க அம்மா போயிருக்காங்க. அக்கா லெட்டெர் எழுதிட்டிருக்கறதப் பாத்துட்டு என்னம்மா இதுன்னு கேட்டிருக்காங்க. அக்கா அதை வேக வேகமாக கசக்கி கையில் இறுக்கமாக வைத்துக்கொண்டது.
எல்லா அம்மாக்களையும் போல எங்க அம்மாவும் ஒரு அப்பாவி. அம்மாவுக்கு நாங்க ரெண்டு பேருமே பயப்படமாட்டோம். அம்மாவை ஈசியா ஏமாத்திருவோம். கேட்டு தராததால் அம்மா அப்பாகிட்ட சொல்லப்போறேன்னு சொல்லிட்டு அப்பாவ கூப்பிட வந்தாங்க.
அப்பா, அம்மாவ திட்டிகிட்டே தூக்கத்துல இருந்து எழுந்திருச்சு, ரெண்டு பேருமா அக்கா படிச்சிட்டிருந்த ரூமுக்கு போயிருக்காங்க.
அப்பா அக்காகிட்ட, என்னம்மா எழுதிட்டு இருந்தன்னு கேட்டார்.
ஒன்னும் இல்லப்பான்னு அக்கா சொல்லுச்சு.
பொய் சொல்லதான்னு அப்பா கோபமா கத்தினார்
இல்லப்பா, ஒன்னும் எழுதலன்னு திரும்பவும் சொல்லுச்சு.
அப்பா, வலுக்கட்டாயமா அந்த லெட்டெர வாங்கி படிச்சார்.
படிச்சிட்டு, கோபமா அம்மாவைப் பாத்து நீயெல்லாம் ஒரு மனுஷியான்னு கேட்டார்.
இந்தா இதப் படி... படிச்சிட்டாவது இனிமேல் இப்படி நடந்துக்காதன்னு சொன்னார்
நானும் அன்னைக்கு அப்பா கூடத்தான் தூங்கிட்டு இருந்தேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அக்கா இந்த விஷயத்த என்கிட்ட சொல்ற வரைக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது.
எனக்கும் உங்களை மாதிரியே சந்தேகம் வந்துச்சு. "உன்னத் திட்டவே இல்லியா! அம்மாவ அப்பா எதுக்குக்கா திட்டுனார்"-ன்னு அக்காகிட்ட கேட்டேன். அப்பா எந்திருச்சு வர்றதுக்கு லேட் ஆகும்னு தெரியும் லெட்டர மாத்திட்டேன்னுச்சு பாருங்க.
சரி.. எப்படி அந்த லெட்டெர் மாத்தப்பட்டிருந்துச்சுன்னு பாப்போம்
அன்புள்ள முருகனுக்கு, //அக்காவோட இஷ்ட தெய்வம் முருகன்//
ப்ரியா எழுதிக்கொள்வது. எங்க அம்மாவுக்கு என்னைப் பிடிக்கறதே இல்லை. அம்மாவுக்கு தம்பிய மட்டும்தான் பிடிக்கும். அவனை திட்டவே மாட்டாங்க, எதுக்கெடுத்தாலும் என்னையேதான் திட்டுவாங்க. நான் எதுக்கு உயிரோட இருக்கணும். நான் செத்ததுக்கு அப்புறமாவது அம்மாவுக்கு என் மேல பாசத்த வரவையுங்க.....................
..............................
(பிகு: அக்காவுக்கும் ராதா அண்ணனுக்கும் கல்யாணம் ஆகி பதனஞ்சு வருஷம் ஆகுது. அம்மாவுக்கு, இன்னும் இந்த விஷயம் தெரியாது. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுனதும் தெரியாது)
No comments:
Post a Comment