Saturday, September 14, 2013

இன்னா செய்தார்.....

எனது இரண்டாவது மகள் பிறந்து ஐந்தாவது நாள் அவருக்கு passport apply செய்ய BLS போனேன். அபு தாபியில் இந்தியன் passport மற்றும் விசா வழங்கும் சேவையை BLS நிறுவனமும், attestation போன்ற சேவைகளை IVS Global நிறுவனமும் செய்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் அடுத்தடுத்து உள்ளன (அடுத்தடுத்து என்றால் சுமார் 200m தொலைவில்).

8 மணிக்கு திறப்பார்கள் என்று தெரிந்துகொண்டு ஏழேமுக்கால் மணிக்கே சென்றேன். எனக்கு முன்பாகவே வந்த சிலர் அங்குமிங்குமாக அமர்ந்திருந்தனர். நான் புத்திசாலித்தனமாக கதவிற்கு முன்பு ஒரு queue form செய்யும் நோக்கத்தில் நின்றேன். நான் நினைத்தது போலவே உடனே இரண்டு பேர் வந்து என் பின் நின்றார்கள். சில நிமிடங்களில் அது பத்து பதினைந்து பேராக மாறியது.

சரியாக, 8 மணிக்கு திறந்தார்கள். முதல் ஆளாக token வாங்குவதற்கு சென்று நின்றேன். அவர்கள் பொதுவாக நமது documents-ஐ சரிபார்த்துவிட்டு token தருவார்கள். ஒரு மலையாளி lady நான் கொண்டுபோயிருந்த documentகளை பார்த்துவிட்டு, 'சார், உங்க மனைவி பாஸ்போர்ட்ல உங்க பேர் இல்லை' என்றார்.

நான் ஏதோ முதன்முறையாக பாஸ்போர்ட் apply செய்ய வந்ததாக நினைத்துவிட்டார் போல.

நான் கோபமாக, 'என்னோட பாஸ்போர்ட்ல அவங்க பேரு இருக்கே அது பத்தாதா' என்றேன்.
'இல்ல சார், இரண்டு பேர் பாஸ்போர்ட்லயும் spouse name வேண்டும். இல்லன்னா, உங்க marriage certificate, home department-ல attestation செய்யப்பட்டிருக்கணும்' என்றார்.

இவர்கள் இப்படித்தான் தேவையில்லாமல் அலைக்கழிப்பார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்.

நான் விடவில்லை, இன்னும் சத்தமாக 'நீங்க என்ன நெனச்சுட்டு இருக்கீங்க?, அப்புறம் எப்படி என் மூத்த பொண்ணுக்கு இந்தியால பாஸ்போர்ட் குடுத்தாங்க. Emirates Post இந்த சேவையை செஞ்சிட்டிருந்த வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.நீங்க வந்ததற்கு அப்புறம் தான் இவ்வளவு பிரச்சனை. புதுசு புதுசா ரூல்ஸ் சொல்றீங்களே' என்றேன்.

'எங்களுக்கு இப்படித்தான் embassy-யிலிருந்து சொல்லிருக்காங்க' என்றார்.

'சும்மா, நீங்க வாயில சொல்றதெல்லாம் என்னால ஒத்துக்க முடியாது. எழுத்துல வேணும் ஒன்னு அவங்க அனுப்புன circular-அ காமிங்க, இல்ல நீங்க எழுதித் தாங்க' என்றேன்.

விடாமல் கத்திக்கொண்டே இருந்தேன்.

எனக்கு பின்னால் நின்றவர்களுக்கு என்மேல் கோபம், இருந்தாலும் நான் கோபத்தில் கத்திக்கொண்டிருந்ததால் ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.

அதற்குள் வேறு ஒருவர் அங்கு வந்தார். அவரிடம் அந்த lady விஷயத்தை சொன்னார். அவர் கூலாக ஒரு பேப்பரை எடுத்து தந்தார் அதில் அவர்கள் சொன்னது போலவே எழுதியிருந்தது.

அவர் என்னிடம், 'உங்க wife-ஐக் கூட்டிக்கிட்டு IVS Global போங்க, அவங்க ரெண்டு பேரோட ஃபோட்டோவும் ஒட்டி sworn affidavit தருவாங்க. அதை வாங்கிட்டு இங்க வாங்க' என்றார்.

மனைவியை அழைத்துவர வீட்டிற்கு கிளம்பினேன். சுமார் முப்பது கிலோமீட்டர். வீட்டிற்கு சென்று மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வந்தேன். வருகின்ற வழியிலேயே ஸ்டுடியோ சென்று மனைவியின் ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டு போனோம்.

அந்த இடத்திற்கு சென்றபொழுது மணி பத்தாகிவிட்டது. அருகில் எங்கும் பார்க்கிங் கிடைக்கவில்லை. அரைக் கிலோமீட்டர் தொலைவில் ஒரு பார்க்கிங் கிடைத்தது. பாப்பாவை, அப்படியே பேபி கார் சீட்டோடு தூக்கிக்கொண்டேன்.

நான் வேகமாக முன்னே பாப்பாவைத் தூக்கிக்கொண்டு நடந்து கொண்டிருந்தேன். மனைவியோ மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த அலுவலகத்திற்கு சென்று அவர்களையும் நன்றாக திட்டவேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டே நடந்தேன். எத்தனையோ பாவப்பட்ட இந்திய தொழிலாளர்களை இவர்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறார்கள். இவர்களை இன்று சும்மா விடக்கூடாது. யாருமே கேள்வி கேட்கவில்லை என்றால் இவர்களது அராஜகத்திற்கு அளவில்லாமல் போய்விடும் என்று நினைத்து என்னுடைய கோபத்தை அதிகப்படுத்தினேன்.

நான் அந்த அலுவலகத்திற்கருகில் சென்றவுடன் மனைவியை திரும்பி பார்த்தால் அவர் வெகு தொலைவில் மெதுவாக நடந்துவந்து கொண்டிருந்தார். அவர் எனது அருகில் வந்தபோது அவர் கண்களில் கண்ணீர் வழிந்ததைப் பார்க்கமுடிந்தது.

'நடக்க முடியலீங்க' என்றார் அழுதுகொண்டே.

அதைக்கேட்டவுடன் எனது கோபம் மறைந்து, முகத்தில் சோகம் தொற்றிக்கொண்டது.

அலுவலகத்தின் உள்ளே சென்று token வழங்கும் பெண்ணிடம் விஷயத்தை ஆங்கிலத்தில் சொன்னேன். அபயா (பர்தா) அணிந்திருந்த அந்தப் பெண் மலையாளத்தில், 'குழந்தை பிறந்து எத்தனை நாள் ஆகிறது?' என்று கேட்டார்.

'அஞ்சு நாளாகுது' என்றேன்.

அதைக்கேட்டவுடன் அவர் எனது மனைவியைப் பார்த்தார். அவரது கண்களில் வழிந்த நீரைப் பார்த்துவிட்டு சட்டென்று எழுந்து எங்கள் இருவரையும் ஒரு கவுன்டருக்கு அழைத்துச் சென்றார். 'முப்பது நாள் வரை மனைவி வரத் தேவயில்லை' என்று சொன்னார். 'இல்ல ma'am, BLS -ல் மனைவியோடு போணும்னு சொன்னாங்க' என்றேன்.

கவுன்டரில் இருந்த பெண்ணிடம் அவர் விஷயத்தை சொல்லவும், அவர் 'படச்சோனே (அல்லா), எதுக்கு இவங்களக் கூட்டிட்டு வந்தீங்க' என்று அவர் பங்கிற்கு கேட்டார்

அவர் முன்பு நின்றிருந்த customer-ஐ போய் அமரச் சொல்லிவிட்டு ஒரு application எடுத்து எங்களிடம் sign மட்டும் வாங்கிக்கொண்டு அவரே fill-up செய்தார். அதுமட்டுமல்லாமல், அவரது அதிகாரியிடம் நேரடியாக அவரே சென்று கையெழுத்தும் வாங்கி வந்தார். ஐந்து நிமிடத்தில் எல்லா வேலைகளும் முடிந்தது. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அப்படியே token வழங்கும் பெண்ணிற்கும் நன்றி சொல்லிவிட்டு வந்தேன். அப்பொழுது அவர், 'வந்ததே வந்துட்டீங்க அப்படியே BLS போங்க, அவங்ககிட்ட விஷயத்த சொல்லுங்க. வெயிட் பண்ணவேண்டி வராது' என்றார்.

BLS அலுவலகத்திற்கு மெதுவாக நடந்து சென்றோம். token வழங்கும் இடத்தில் கூட்டம் இல்லை. அங்கிருந்த நபரிடம் விஷயத்தை சொன்னேன்.அவரும் என் மனைவியைப் பார்த்துவிட்டு உடனடியாக என்னை ஒரு கவுன்டருக்கு அழைத்து சென்றார். அவர் அழைத்து சென்ற கவுன்டருக்கு அருகில் இருந்த கவுன்டரில் காலையில் வழக்கிட்ட பெண் அமர்ந்திருந்தார்.

அவர் என்னைப் பார்த்துவிடுவாரா என்ற பயத்தில் நெஞ்சம் படபடத்தது. ஒவ்வொரு வினாடியும் அவர் பார்த்துவிடுவாரோ என்று பயந்து கொண்டே என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

வேலை முடிந்தது, அவர் என்னைப் பார்க்கவேயில்லை. ஆனால், என்ன நினைத்தேனோ என்னமோ நேராக அவரிடம் சென்றேன்.

'ஸாரி சிஸ்டர்' என்று மட்டுமே சொல்லமுடிந்தது. அதற்குமேல் பேசமுடியாமல் மளமளவென்று கண்ணீர் பெருக்கடுத்தது.

"பரவாயில்லை சார். நீங்கள் ஏதோ கோபத்துல பேசிட்டீங்க. நீங்களும் மலையாளி (என்னை மலையாளி என்று நினைத்துவிட்டார்) நானும் மலையாளி. என்னோட சகோதரன் என்னைத் திட்டினால் பரவாயில்லை' என்றார்.

'டெலிவரி ஆகி அஞ்சு நாள் தான் ஆகுது. wife-க்கு நடக்கக்கூட முடியல. அதான் அவரைக் கூட்டிட்டு வரணும்னு கேட்டப்ப கோபப்பட்டுட்டேன்' என்று கோபப்பட்டதற்கு ஒரு பொய்யான காரணத்தை கண்ணீர் வழிய சொன்னேன்.

'கர்த்தாவே, நீங்க கோபப்பட்டதற்கு ஏதோ காரணம் இருக்கும்னு நெனச்சேன். அது உண்மையா போயிருச்சே. பரவாயில்லை நீங்க கவலைப்படாம wife-அ பத்திரமா கூட்டிட்டு போங்க. அஞ்சு நாள்ல பாஸ்போர்ட் கெடச்சுரும்' என்றார் உண்மையான அன்போடு

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்.

No comments:

Post a Comment