Saturday, September 14, 2013

நண்பேன்டா....

சிறுவயதில், அப்பாவிற்கும் போலிஸ் மாமாவிற்கும் இடையே இருந்த நட்பைக் கண்டு பலமுறை வியந்துள்ளேன். இதுபோ‌ன்ற நண்பர்கள் நமக்கும் கிடைக்க மாட்டார்களா என்று ஏங்கிய காலங்களும் உண்டு.

ஆனால் கல்லூரிப் பருவத்தில் அவர்களது அதே நட்பு எனக்கு செயற்கையாக தோன்றியது. அவர்களைவிட நானும் எனது நண்பர்களும் உண்மையாக இருப்பதை உணர்ந்தேன்.

அப்பா அவரை 'போடா தடியா' என்று சொல்வது, அவர் அப்பாவை 'போடா குண்டா' என்று சொல்வது, ஏதோ மற்றவர்களுக்கு அவர்கள் நண்பர்கள் என்று தெரிவிப்பதற்காக போலியாக செய்வதுபோல் இருந்தது.  அப்பா செய்கின்ற பல விஷயங்கள் எனக்கு வித்தியாசமாக தோன்றும், அவற்றில் இதுவும் ஒன்று.

என்னுடைய நண்பர்கள் அப்படி இல்லை. உதாரணத்திற்கு சாம் (Sam). அவனுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் என்னை அறியாமல் துடித்துவிடுவேன், அவனும் அப்படித்தான். இருந்தாலும் வெளியில் அப்படியெல்லாம் இருவருமே காட்டிக்கொண்டது கிடையாது. சாம் மட்டுமல்ல, இப்படி பல நண்பர்கள் உள்ளனர்.

காலங்கள் ஓடியது. அப்பாவும் போலிஸ் மாமாவும் மாறவே இல்லை. என் பார்வையில் அதே செயற்கையான நட்பு. அவர் இல்லாமல் எங்கள் வீட்டில் எந்த நல்லது கெட்டதும் நடக்காது, அதே போல் அவர்கள் வீட்டின் எல்லா விசேஷத்திற்கும் அப்பா முதல் ஆளாக சென்றுவிடுவார்.

எனது கல்யாணத்திற்கு அவர் குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லை. நாங்களும் கல்யாண வேலைகளில் அவரை மறந்துவிட்டோம். அடுத்தநாள் அப்பாவிற்கு திடீரென அவரது நியாபகம் வர, அவரின் மொபைலில் தொடர்பு கொண்டார்.  ஸ்விட்ச் ஆஃப். லேன்ட்லைனில் அழைத்தபொழுது, மாமா வெளியே சென்றிருப்பதாக சொன்னார் அவரது உறவினர்களில் ஒருவர்.

 ஃபோனில் பேசியதால் அப்பாவிற்கும்,  அம்மாவிற்கும் ஓரளவிற்கு நிம்மதி. இருந்தாலும் அடுத்த நாள் அவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என்றார் அப்பா.

காலையிலேயே அப்பா, அம்மா, நான், மனைவி நால்வரும் பொள்ளாச்சியிலிருந்து பல்லடம் சென்றோம்.  அவரது வீட்டின் முன்பு கார் நிறுத்துவதைப் பார்த்ததுமே அத்தை ஓடிவந்து,
'அண்ணா, சிந்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இப்படி பண்ணிருச்சேண்ணா... இதுக்குத்தான் அவர் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்த்தாரா?' என்று அழுதார். எங்களுக்கு ஓரளவிற்கு விஷயம் புரிந்துவிட்டது.
அப்பா, 'சரிம்மா, விடும்மா பரவாயில்லை' என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார். நாங்களும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு உள்ளே சென்றோம்.

மாமா இருந்த அறைக்குள் அப்பா சென்றவுடன், 'ராஜா, நம்மள ஏமாத்திட்டுப் போயிருச்சுடா" என்று கதறி அழுதார்.
'விடுப்பா, விடுப்பா" என்றார் அப்பா. அப்பாவிற்கு அதற்குமேல் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால், அப்பாவிற்கு அது ஒரு பெரிய விஷயம்  இல்லைதான். இருந்தாலும், தன்னுடைய நண்பர் அழுவதை அவரால்  தாங்கமுடியவில்லை.

ஒருவழியாக அவர்களை ஓரளவிற்கு சமாதானம் செய்துவிட்டு திரும்பினோம்.

அந்த விஷயத்தைப் பற்றி அதற்குப் பிறகு அப்பா ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

பொதுவாக நமது நண்பர்களுக்கு ஏதாவது பிரச்சனை (உதவி தேவை அல்ல) என்றால் உடனே நாம் மற்ற நண்பர்களிடம் அதைச் சொல்லி வருத்தப்படுவோம். அதனை நாம் சிந்தித்துப்  பார்த்தால், நண்பர்களின்  பிரச்சனையை மற்றவர்களிடம் பகிர்வதில் அறிந்தோ அறியாமலோ நாம் சற்று ஆனந்தம் அடைவோம். அதே சமயம் அப்படி ஒரு சம்பவம் நமது குடும்பத்தில் நடந்தால் அதை வெளியே சொல்வதில்லை.

அம்மாவிடம் கூட அதனைப் பற்றி அப்பா பேசவில்லை. அவருக்கு தன்னுடைய நண்பன் அவமானமாகக் கருதிய விஷயத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை .

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

No comments:

Post a Comment